
தனக்கு வர வேண்டிய சம்பளப் பணம் முழுவதையும் மெமாரிடம் வாங்கிய லத்தீஃப், அதை சுல்த்தானிடம் கொடுத்து, நஜாஃப்பிடம் ஒப்படைக்கும்படி கூறுகிறான். சுல்த்தான் நஜாஃபிடம் பணத்தைத் தந்த பிறகு, மறுநாள் தாங்கள் மீண்டும் அந்த மைதானத்தில் சந்திப்பது என்று அவர்கள் தீர்மானிக்கிறார்கள். மறுநாள் மைதானத்திற்கு லத்தீஃப் சென்றால், அங்கு சுல்த்தானுக்குப் பதிலாக நஜாஃப் நின்றிருக்கிறான். சுல்த்தான் ஆஃப்கானிஸ்தானுக்குச் சென்று விட்டதாக அவன் கூறுகிறான். சுல்த்தான் தன்னிடம் வந்ததாகவும், யாரிடமோ கடனாக வாங்கிய பணத்தைத் தன்னிடம் தர முயன்றதாகவும், தான் அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ள மறுத்து விட்டதாகவும், அதை சுல்த்தானே வைத்துக் கொள்ளும்படி தான் கூறி விட்டதாகவும், அதை வைத்துக் கொண்டு ஆஃப்கானிஸ்தானில் மிகுந்த பிரச்னைகளில் சிக்கிக் கிடக்கும் சுல்த்தானின் குடும்பத்தைக் காப்பாற்றும்படி தான் கூறி விட்டதாகவும் அவன் கூறுகிறான். அதைக் கேட்டு அதிர்ச்சியும், கவலையும் அடைகிறான் லத்தீஃப்.
இதற்கிடையில் நஜாஃப்பின் சகோதரன் ஆஃப்கானிஸ்தானில் நடைபெறும் போரில் கொல்லப்பட்டு விடுகிறான். அதனால் உண்டான குடும்பச் சிக்கல்களைப் பற்றி தன் வீட்டில் நஜாஃப் பேசிக் கொண்டிருப்பதை மறுநாள் கேட்ட லத்தீஃப், மிகவும் கவலை கொள்கிறான். ரஹ்மத்தின் உண்மையான பெயர் ‘பாரன்’ என்பது அப்போது அவனுக்குத் தெரிய வருகிறது. ஆற்றுப் பக்கம் சென்று பாரனைப் பார்க்க நினைக்கிறான் லத்தீஃப். ஆற்றுக்குள்ளிருந்து ஒரு பெரிய மர கட்டையை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டிருக்கிறாள் பாரன். மனம் நொந்து, லத்தீஃப் தான் வேலை செய்யும் இடத்திற்கு திரும்பி வருகிறான்.
மறுநாள், இரண்டு பக்கங்களிலும் ஊன்று கோல்களை வைத்துக் கொண்டு, மெமாரைப் பார்ப்பதற்காக கட்டிட வேலை செய்யும் இடத்திற்கு நஜாஃப் வருகிறான். மெமாரிடம் அவன் பண உதவி கேட்டு கெஞ்சுவதை, லத்தீஃப் கேட்கிறான். ஆனால், பணம் கிடைக்கவில்லை.
தான் எப்படியும் பணம் உண்டாக்கி நஜாஃபிற்கு உதவுவது என்று லத்தீஃப் தீர்மானிக்கிறான். தன்னிடமிருக்கும் ஒரே மதிப்புள்ள பொருளான தன்னுடைய அடையாள அட்டையை அவன் விற்று விடுகிறான். அதன் மூலம் கிடைத்த பணத்துடன் வந்த லத்தீஃப், அதை நஜாஃபிடம் தருகிறான். அந்த பணத்தைக் கொண்டு நஜாஃபும், குடும்பமும் ஆஃப்கானிஸ்தானுக்குத் திரும்பிப் போக முடியும் என்ற செய்தியைக் கேட்டு, அவன் சந்தோஷமடைகிறான். முதன் முதலாக பாரனைப் பார்த்தபோது, தான் கேட்ட ஒலிகளை அவன் தன்னைச் சுற்றிலும் மீண்டும் கேட்கிறான். நடப்பது நடக்கட்டும் என்று விதியின் போக்கில் அவன் எல்லாவற்றையும் விடுகிறான்.
மறுநாள், வீட்டுச் சாமான்களை வண்டியில் ஏற்றுவதற்கு நஜாஃபிற்கு அவன் உதவுகிறான். அப்போது அவன் முகத்திற்கு எதிராக பாரனைப் பார்க்கிறான். அவளும் அவனைப் பார்க்கிறாள். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே, அவர்கள் இருவரும் தங்களின் காதலை பரிமாறிக் கொள்கின்றனர். பாரன் தன்னை துணியால் மூடிக் கொண்டு, வண்டியை நோக்கி நடந்து வருகிறாள். அப்போது அவளுடைய காலணி சேற்றுக்குள் மாட்டிக் கொள்கிறது. லத்தீஃப் கீழே குனிந்து, அவளுடைய காலணியைச் சேற்றிலிருந்து எடுத்து, அதை பாரனிடம் தருகிறான். பாரன் அதை வாங்கி அணிந்து கொண்டு, நடக்கிறாள். வண்டி, பாரனையும் ஏற்றிக் கொண்டு நகர்கிறது.
வெற்றிடத்தில் லத்தீஃப் மட்டும் தனியே நின்று கொண்டிருக்கிறான். பாரனின் காலணி சேற்றில் உண்டாக்கிய சுவடையே அவன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான். மழை பொழிந்து அதை மூட, அவன் அதைப் பார்த்து மெதுவாக புன்னகைக்கிறான்.
படம் அங்கு முடிவடைகிறது.
படம் முடிந்த பிறகும், பாரனின் முகமும் லத்தீஃபின் முகமும் நம் மனங்களில் அப்படியே பசுமையாக நின்று கொண்டிருக்கும்.
கவித்துவத் தன்மை நிறைந்த மிகச் சிறந்த ஒரு திரைப்படத்தை இயக்கியதற்காக Majid Majidiஐ நாம் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
2001ஆம் ஆண்டு திரைக்கு வந்த ‘Baran’ மாறுபட்ட திரைப்படங்களை வரவேற்கும் ரசிகர்களால் தலையில் வைத்து எப்போதும் கொண்டாடப்படுகிறது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook