Category: சினிமா Published Date Written by சுரா Hits: 6260
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
பாரன்
(ஈரானிய திரைப்படம்)
பாரசீக மொழியில் ‘பாரன்’ என்றால் ‘மழை’ என்று அர்த்தம். கவித்துவம் நிறைந்த இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பவர் உலகத் தரம் வாய்ந்த பட வரிசையில் இடம் பிடிக்கக் கூடிய சில படங்களை இயக்கி, தனக்கென்று ஒரு அருமையான பெயரைப் பெற்றிருக்கும் Majid Majidi. படத்தின் கதையை எழுதியிருப்பவரும் அவர்தான்.
ஆஃப்கானிஸ்தானில் போர் நடைபெற்றபோது, அங்கிருந்து கூட்டம் கூட்டமாக சட்டத்திற்குப் புறம்பாக மக்கள் கிளம்பி வந்து ஈரானின் டெஹரானின் வெளிப் பகுதிகளில் பல வேலைகளையும் செய்து கொண்டிருந்தார்கள். அந்தக் கால கட்டத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட ‘Baran’ படத்தை ஒரு ஊமைப் படம் என்றே கூறலாம். காரணம் – இதில் மிக மிக குறைவாகவே உரையாடல்கள் இருக்கின்றன. ஈரானிலும், வெளிநாடுகளிலும் படத்திற்கும், படத்தின் கதையை எழுதி இயக்கிய Majid Majidiக்கும் ஏராளமான விருதுகள் கிடைத்திருக்கின்றன.
டெஹரானில் கடுமையான குளிர்காலம். லத்தீஃப் என்ற இளைஞன். அவனுக்கு 17 வயது. மெமார் என்பவர் ஃபோர்மேனாக இருந்து கொண்டு மேற்பார்வையிடும் ஒரு கட்டிட நிர்மான இடத்தில் அவன் வேலை செய்கிறான். கட்டிடம் கட்டும் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு உரிய நேரத்திற்கு தேநீர் கொண்டு போய் கொடுப்பதும், அவர்களுக்கு உணவு தயாரிப்பதும் அவனுடைய வேலை.
ஆனால், எப்போது பார்த்தாலும் அங்கு வேலை பார்ப்பவர்களில் யாருடனாவது சண்டை போட்டுக் கொண்டே இருப்பான் லத்தீஃப். ஈரானின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருப்பவர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் ஆஃப்கானிஸ்தானிலிருந்து வந்திருப்பவர்கள். அவர்களிடம் அடையாள அட்டை எதுவும் இருக்காது. எனினும், குறைவான சம்பளம் தந்து அவர்களை சட்டத்திற்கு எதிராக வேலைக்கு வைத்திருந்தார்கள். வேலை செய்பவர்களை கண்காணிக்கும் இன்ஸ்பெக்டர்கள் வரும் நேரங்களில், ஆஃப்கானிலிருந்து வந்திருக்கும் தொழிலாளிகள் யாருக்கும் தெரியாமல் போய் மறைந்து கொள்ள வேண்டும்.
கதை ஆரம்பிக்கும்போது, நஜாஃப் என்ற ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த தொழிலாளி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து, தன் காலை உடைத்துக் கொள்கிறான். அதைத் தொடர்ந்து அவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் படுகிறான். மறுநாள் சுல்த்தான் என்ற இன்னொரு ஆஃப்கான் தொழிலாளி, நஜாஃபின் மகன் என்று கூறி, ரஹ்மத் என்ற பையனுடன் வந்து நிற்கிறான். அவனுக்கு 14 வயது. தன் தந்தைக்குப் பதிலாக அவனுக்கு வேலையைத் தரும்படி சுல்த்தான் கேட்கிறான். கட்டிட வேலைகளுக்கு அவன் சரியாக வர மாட்டான் என்பதை உணரும் மெமார், லத்தீஃப் செய்து கொண்டிருந்த வேலையை அவனுக்கு தருவதற்கு தீர்மானிக்கிறார்.
அதைக் கேட்டு லத்தீஃப் கடுப்பாகி விடுகிறான். ரஹ்மத்தைப் பார்த்து அவன் மிரட்டுகிறான். அவனுடைய வேலைகளின்போது, அவன் தேவையில்லாமல் தொந்தரவுகளைத் தருகிறான். ரஹ்மத் என்னவெல்லாம் செய்கிறான் என்பதை மறைமுகமாக அவன் கண்காணிக்கிறான். ஒருநாள் ரஹ்மத் வேலையில் ஈடுபட்டிருக்கும்போது, கதவு வழியாக பார்த்துக் கொண்டிருந்த லத்தீஃப் அதிர்ச்சியடைந்து விடுகிறான். அப்போதுதான் அவனுக்கு ஒரு மிகப் பெரிய உண்மை தெரிய வருகிறது. அது- ரஹ்மத் ஒரு ஆண் அல்ல- ஒரு இளம் பெண் என்பதுதான். தன் தலையை ரஹ்மத் வாரிக் கொண்டிருக்கும் காட்சியை, லத்தீஃப் பார்க்கிறான். அப்போது தான் ஒரு வினோதமான சூழ்நிலையில் இருப்பதைப் போலவும், தன்னைச் சுற்றி அதற்கு முன்பு கேட்டிராத சத்தங்கள் ஒலிப்பதைப் போலவும் அவன் உணர்கிறான்.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, லத்தீஃப்பின் நடவடிக்கைகளே முற்றிலும் மாறி விடுகின்றன. அவன் ரஹ்மத்தைப் பாதுகாக்க ஆரம்பிக்கிறான். யாருடைய தொந்தரவும் உண்டாகாமல் பார்த்துக் கொள்கிறான். ரஹ்மத்திற்கு உதவியாக அவன் இருக்கிறான். காலப் போக்கில் தன்னை மீறி அவன் ரஹ்மத்தைக் காதலிக்க ஆரம்பிக்கிறான். வாயைத் திறந்து எதுவும் வார்த்தைகளால் கூறாவிட்டாலும், அந்த காதலுக்கு ஒத்துக் கொண்டதைப் போலவே, ரஹ்மத்தின் நடவடிக்கைகளும் இருக்கின்றன.
சிறிதும் எதிர்பாராமல் ஒரு நாள் தொழிலாளர்களை கண்காணிக்கும் இன்ஸ்பெக்டர்கள் திடீரென்று அங்கு வந்துவிட, அவர்களின் பார்வையில் ரஹ்மத் பட்டு விடுகிறாள். அவ்வளவுதான்… அவள் பயந்து போய் ஓட ஆரம்பிக்கிறாள். அவர்கள் தெரு விளக்குகளின் வெளிச்சத்தில் அவளை விரட்டிச் செல்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் லத்தீஃப் ஓடுகிறான். அவன் இன்ஸ்பெக்டர்களுடன் சண்டை போட, ரஹ்மத் ஓடி தப்பித்து விடுகிறாள். கடுப்பான இன்ஸ்பெக்டர்கள் லத்தீஃபை அடித்து விடுகிறார்கள். அவனை காவல் நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு செல்கிறார்கள். இப்போது மெமார் அபராதம் கட்ட வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. எல்லா ஆஃப்கானிஸ்தான் தொழிலாளர்களையும் வேலையிலிருந்து நிறுத்த வேண்டிய கட்டாயம் உண்டாகிறது.
ரஹ்மத் இல்லாத சூழ்நிலையை லத்தீஃபால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவன் அவளைப் பற்றிய தகவலைத் தெரிந்து கொள்வதற்காக சுல்த்தானைத் தேடிச் செல்கிறான். ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் கிராமத்திற்குச் சென்று, ஒரு செருப்பு தைக்கும் மனிதனைப் பார்க்கிறான். அதைத் தொடர்ந்து ஒரு சுடுகாட்டிற்கு அருகிலிருக்கும் மைதானத்திற்கு வருகிறான். அங்கு ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக குழுமி ஒரு கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். அவன் அங்கு போய் சுல்த்தானைப் பற்றி விசாரிக்கிறான். அந்த கூட்டத்திற்கு மத்தியில் ரஹ்மத், பெண்கள் அணியும் ஆடைகள் அணிந்து நின்று கொண்டிருக்கிறாள். அவள் லத்தீஃபைப் பார்க்கிறாள். அவனையே சிறிது நேரம் வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். அதன் பிறகு அங்கிருந்து சென்று விடுகிறாள். அவள் எங்கு இருக்கிறாள் என்பதே தெரியாமல் இருக்கிறான் லத்தீஃப்.
மறுநாள் அவன் காலையில் சுல்த்தானைப் பார்க்கிறான். அவன் கூற, ரஹ்மத் ஆற்றுக்கு அருகில் வேலை செய்து கொண்டிருப்பது தெரிகிறது. லத்தீஃப் வேகமாக அங்கு செல்ல, ஆற்றிலிருந்து கனமான கற்களை எடுக்கும் வேலையில் மற்ற பெண்களுடன் சேர்ந்து ரஹ்மத்தும் ஈடுபட்டிருப்பது தெரிய வருகிறது. அந்த வேலையிலிருந்து அவளை விடுவிக்க வேண்டும் என்று கவலையுடன் தீர்மானிக்கிறான் லத்தீஃப்.