Lekha Books

A+ A A-

தி சவுண்ட் ஆஃப் ம்யூஸிக்

The Sound of Music

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

தி சவுண்ட் ஆஃப் ம்யூஸிக்

(அமெரிக்க திரைப்படம்)

பாடல்களாலும், இசையாலும் நம் இதயங்களில் உறுதியான இடத்தைப் பிடித்து நம்மை எப்போதும் சந்தோஷக் கடலில் மிதக்கச் செய்து கொண்டிருக்கும் ஒரு படம் இது.

 1965 ஆம் ஆண்டில் இப்படம் திரைக்கு வந்தது. திரைக்கு வந்து எத்தனையோ வருடங்கள் கடந்து போனாலும், திரைப்பட ரசிகர்களால் இந்தப் படம் திரும்பத் திரும்ப பலமுறைகள் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதிலிருந்தே இந்தப் படத்தின் சிறப்பை நாம் புரிந்து கொள்ளலாம்.

‘The Story of the Trapp Family Singers’ என்ற Maria von Trapp எழுதிய நூலை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. ஆஸ்ட்ரியாவில் உள்ள ஒரு கான்வென்ட்டிலிருந்து வெளியேறி, மனைவியை இழந்த ஒரு கப்பற் படை அதிகாரியின் ஏழு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் காப்பாளர் வேலைக்குச் செல்லும் ஒரு இளம் பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்ட நூல் இது.

‘The Sound of Music’ திரைப்படம் ஆஸ்ட்ரியாவில் உள்ள Salzburg என்ற இடத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. சில காட்சிகள் ஜெர்மனியிலுள்ள Bavaria என்ற மாநிலத்தில் படமாக்கப்பட்டிருக்கின்றன. சில காட்சிகள் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இருக்கும் 20th Century Fox ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டிருக்கின்றன.

70 M.M. Todd – AO Format இல் படமாக்கப்பட்ட இப்படம் ஐந்து Academy Award களைத் தட்டிச் சென்றிருக்கிறது. அதில் ‘சிறந்த பட’த்திற்கான விருதும் ஒன்று.

Robert Wise இயக்கிய இப்படத்தின் கதாநாயகியாக Julie Andrews ம் கதாநாயகனாக Christopher Plummerம் நடித்திருக்கிறார்கள்.

Oscar Hammerstein IIன் பாடல்களும், Irwin Kostal இன் பின்னணி இசையும் நம் மனங்களில் எப்போதும் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டே இருக்கும்.

ஆஸ்ட்ரியாவின் Salzburg இல் உள்ள ஒரு கான்வென்ட்டில் இருப்பவள் மரியா. அங்கிருக்கும் கன்யாஸ்த்ரீகளிடமும், மதர் ஆபெஸ்ஸீடமும் தன்னுடைய குறும்புத்தனங்களை எல்லா  நேரங்களிலும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பவள் அவள். பாடல்களைப் பாடிக் கொண்டும், நடனமாடிக் கொண்டும், துள்ளித் திரிந்து கொண்டும்  இருக்கும் மரியாவை மதர் ஆபெஸ்ஸுக்கு மிகவும் பிடிக்கும். அப்போது மனைவியை இழந்த கப்பல் படை அதிகாரி ஒருவரிடமிருந்து ஒரு வேண்டுகோள் வருகிறது. அவருடைய ஏழு குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வதற்கு ஒரு பெண் தேவை என்பதே அது. அதைத் தொடர்ந்து அந்த வேலையை ஏற்றுக் கொள்ளும்படி மதர் ஆபெஸ், மரியாவிடம் கூறுகிறார். மரியா தயங்கிக் கொண்டே அதற்கு சம்மதிக்கிறாள்.

மரியா அந்த குடும்பத்திற்குச் சொந்தமான மிகப் பெரிய மாளிகைக்குச் செல்கிறாள். அப்போதுதான் அவளுக்கே தெரிகிறது - கேப்டன் George von Trapp எந்த அளவிற்கு தன் குழந்தைகளை பலவித கட்டுப்பாடுகளுடன் வைத்திருக்கிறார் என்பதே. தன் பிள்ளைகளை அழைப்பதற்கு அவர் விஷிலை பயன்படுத்துகிறார்... கட்டளைகளைப்  பிறப்பிக்கிறார்... தன் குழந்தைகளை மாலுமிகளின் சீருடைகளை அணியச் செய்திருக்கிறார்.

ஆரம்பத்தில் அந்த குழந்தைகள் அவளிடம் குறும்புத்தனங்களையும், சேட்டைகளையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தாலும், நாளைடைவில் அவள் மீது அவர்கள் பாசத்தை வைக்க ஆரம்பிக்கிறார்கள். அந்த குழந்தைகளுக்கு அவள் பாடுவதற்கு கற்றுத் தருகிறாள். இசை என்னும்  அமுதத்தை அந்த குழந்தைகள் அனைவரின் மனங்களிலும் அவள் ஆர்வத்துடன் ஊட்டி விடுகிறாள்.

கேப்டன் தன்னுடைய நெருங்கிய தோழியான Baroness Elsa Schroeder என்ற வசதி படைத்த பெண்ணைப் பார்ப்பதற்காக வியன்னாவிற்குச் செல்கிறார். அவர் திரும்பி வரும்போது, அவளும் அவருடன் வருகிறாள். தங்களின் தந்தை வந்திருக்கும் உற்சாகத்தில், ஏரியில் படகில் பயணம் செய்த குழந்தைகள் படகை இப்படியும் அப்படியுமாக அலைக்கழித்து விடுகின்றனர். அதைத் தொடர்ந்து கேப்டனுக்கும் மரியாவிற்கும் இடையே ஒரு பெரிய விவாதம் நடக்கிறது. பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுத்து விட்டதாக அவர், மரியாவின் மீது குற்றம் சுமத்துகிறார். அவளை வீட்டை விட்டு வெளியேறும்படி உத்திரவிடுகிறார். ஆனால், குழந்தைகள் Baroness இருக்கும்போது இனிமையாக பாட, மரியாவிடம் மன்னிப்புக் கேட்டு, அவளை திரும்பவும் தன் வீட்டிலேயே தங்கி இருக்கும்படி கேப்டன் கேட்டுக் கொள்கிறார். கேப்டனுக்கும் Baronessக்கும் நெருங்கிய நண்பரான Max பிள்ளைகள் அருமையாக பாடுவதைக் கேட்டு, விரைவில் நடைபெற இருக்கும் Salzburg Festival இல் அவர்களை பங்கேற்கச் செய்ய விரும்புகிறார். ஆனால், கேப்டன் அதற்கு மறுத்து விடுகிறார்.

Baroness ஐப்  பெருமைப் படுத்துவதற்காக ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்கிறார் கேப்டன். அங்கு வந்திருப்பவர்கள் நடனமாடுகிறார்கள். அதை கவனித்த கேப்டனின் 11 வயது மகன் Kurt தனக்கு அந்த நடன அசைவுகளை கற்றுத் தரும்படி மரியாவிடம் கூறுகிறான். நிலவு வெளிச்சத்தில் மிகவும் அருமையாக மரியா நடனமாடுவதை கேப்டன் பார்க்கிறார். கேப்டன் அவளுடன் நடனத்தில் கலந்து கொள்கிறார். நடனத்தின் இறுதியில்  அவர் மரியாவை இறுக கட்டித் தழுவுகிறார். அவரிடமிருந்து விடுபட்ட மரியா வெட்கப்படுகிறாள்... தன் மனதிற்குள் குழப்பத்துடன் இருக்கிறாள். கேப்டன் மரியாவின் மீது ஈர்க்கப்பட்டிருக்கும் விஷயம் தெரிந்த Baroness மரியாவை கான்வென்டிற்கே போகும்படி கூறுகிறாள். கான்வென்டிற்கு வந்த மரியாவை, மீண்டும் கேப்டனின் வீட்டிற்கே செல்லும்படி கூறுகிறார் மதர் ஆபெஸ். கேப்டனுக்கும் Baronessக்கும் நிச்சயதார்த்தம் ஏற்கெனவே நடைபெற்றிருக்க, புதிய ஒரு பெண் காப்பாளராக கிடைக்கும் வரை, தான் அந்த வீட்டில் இருக்க ஒத்துக் கொள்கிறாள் மரியா. தான் மரியாவை மனதிற்குள் காதலிக்கிறோம் என்ற உண்மையைத் தெரிந்து கொண்ட கேப்டன், அந்த திருமண நிச்சயத்தை ரத்து செய்து விடுகிறார். அவர்கள் ஒருவரோடு ஒருவர் தாங்கள் கொண்டிருக்கும் காதலை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.  வெகு சீக்கிரமே மிகப் பெரிய கொண்டாட்டங்களுடன் அவர்களின் திருமணம் நடைபெறுகிறது.

கேப்டனும் மரியாவும் தேன் நிலவிற்காக பாரீஸில் இருக்கும்போது, Salzburg Festival இல் தந்தையின் விருப்பத்திற்கு எதிராக, கேப்டனின் குழந்தைகளை பங்கு பெறும்படிச் செய்து விடுகிறார் Max. அவர்கள் திரும்ப வரும்போது, ஜெர்மன் கப்பற் படையில் கேப்டனுக்கு வேலை இருக்கிறது என்றும், உடனடியாக ஜெர்மன் கப்பற் படை அலுவலகத்திற்கு அவர் வரவேண்டுமென்றும் தந்தி வருகிறது. Nazism என்ற கொள்கைக்கு எதிரானவர் கேப்டன். அதனால் குடும்பமே உடனடியாக ஆஸ்ட்ரியாவை விட்டு  வெளியேறி விடுவது நல்லது என்கிறார் கேப்டன்.

இரவில் தன் குடும்பத்துடன் கேப்டன் தப்பித்துச் செல்ல முயல, அவர்களை நாஸி படையினர் தடுத்து நிறுத்தி விடுகிறார்கள். தாங்கள் Salzburg Festival இல் பங்கு பெற போய்க் கொண்டிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அதை ஏற்றுக் கொண்ட அதிகாரி, அவர்களுடன் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வருகிறார்.

நிகழ்ச்சி முடிவடைந்ததும், கேப்டன் ஜெர்மனிக்கு வந்தாக வேண்டும் என்பது அவருடைய  கட்டளை. குடும்பம் போட்டியில் பங்கு பெறுகிறது. இறுதி நிகழ்ச்சி நடக்கும்போது, அவர்கள் அங்கிருந்து நழுவி விடுகிறார்கள். அவர்கள் ஒரு இடத்தில் மறைந்திருப்பதை Rolfe என்ற இளைஞன் பார்த்து விடுகிறான் (முன்பு அவன் தந்திகள் கொண்டு வரும் வேலையில் இருந்தவன். கேப்டனின் 16 வயது மகளிடம் காதல் கொண்டிருந்தவன். ஆனால், கேப்டனுக்கு நாஸிகளைப் பிடிக்காது என்பது தெரிந்தவுடன், அவளிடமிருந்து விலகிக் கொண்டவன். தான் ஒரு நாஸி என்பதை பெருமையுடன் கூறிக் கொள்பவன்). அவன் கேப்டனைச் சுடப் போவதாக மிரட்டுகிறான். அவனிடமிருந்த துப்பாக்கியை கேப்டன் தட்டி விடுகிறார்.

அங்கிருந்த ஒரு காரில் அந்த முழு குடும்பமும் தப்பிக்க முயல்கிறது. நாஸி படையினர் அவர்களைப் பின் தொடர முயற்சிக்கிறார்கள். ஆனால், கான்வென்டில் இருந்த கன்யாஸ்த்ரீகள் நாஸி படையினரின் வண்டிகளில் கோளாறுகள் செய்து, அவை கிளம்ப முடியாத அளவிற்கு ஆக்கி விடுகின்றனர்.

கேப்டனின் குடும்பம் ஆல்ப்ஸ் மலையைக் கடந்து சுவிட்சர்லாண்டிற்குள் நுழைகிறது - முழுமையான சுதந்திர காற்றை சுவாசித்துக் கொண்டே...

மரியாவாக Julie Andrews, கேப்டன் Geroge von Trapp ஆக நடித்த Christopher Plummerம், ஏழு குழந்தைகளும் நம் உள்ளங்களில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களுடன் ‘The Sound of Music’ இன் பாடல்களும், இனிய இசையும்...

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel