சாப்பா குரிஸு
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 4454
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
சாப்பா குரிஸு
(மலையாள திரைப்படம்)
2011, ஜூலை மாதத்தில் திரைக்கு வந்தது. முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக் கருவைக் கொண்ட இப்படத்தைத் தயாரித்தவர் லிஸ்ட்டின் ஸ்டீஃபன்.
படத்தின் இயக்குநர் சமீர் தாஹிர் (இவருக்கு இதுதான் முதல் படம்).
படத்தின் கதாநாயகர்கள் : வினீத் ஸ்ரீநிவாஸன் (நடிகர் ஸ்ரீநிவாஸனின் மகன்), பகத் ஃபாஸில் (இயக்குநர் ஃபாஸிலின் மகன்).
கதாநாயகிகள் மூவர் : ரம்யா நம்பீசன், ரோமா அஸ்ரானி, நிவேதா தாமஸ்.
இதன் படப்பிடிப்பு எர்ணாகுளத்தில் நடைபெற்றது.
‘சாப்பா குரிஸு’ என்றால் ‘தலையும் வாலும்’ என்று அர்த்தம். அப்படித்தான் கோட்டயத்தில் கூறுவார்கள். அதையே ‘சாப்பா குரிஸு’ என்று கொச்சியில் கூறுவார்கள். படத்தின் இயக்குநர் சமீர் தாஹிர் கொச்சியைச் சேர்ந்தவர் என்பதால், அதையே படத்தின் தலைப்பாக வைத்து விட்டார்.
‘ட்ராஃபிக்’ மலையாளப் படத்தின் 100வது நாள் விழாவன்று இந்தப் படத்தை ஆரம்பித்து வைத்தவர் கமல்ஹாசன் (இரண்டு படங்களையும் தயாரித்தவர் லிஸ்ட்டின் ஸ்டீஃபன்). Canon 5D, 7D DSLR கேமராக்களின் மூலம் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
இரு மாறுபட்ட பொருளாதார நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டு இளைஞர்களைச் சுற்றி பின்னப்பட்ட கதை.
அர்ஜுன் நல்ல வசதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவன். கொச்சியில் கட்டிடக் கலைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவன். அவனுக்கு விரைவில் அவனுடைய நண்பரின் மகள் ஆனுடன் திருமணம் நடைபெற இருக்கிறது. ஆனால், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தனக்குக் கீழே பணியாற்றும் சோனியாவுடன் நெருக்கமாக அவன் பழகிக் கொண்டிருக்கிறான்.
தான் தங்கியிருக்கும் இடத்திற்கு சோனியாவை வரவழைத்து, அவளுடன் எல்லையைத் தாண்டியெல்லாம் இருக்கிறான் அவன். தான் அப்படி அவளுடன் இருக்கும் காட்சிகளை தன்னுடைய செல்ஃபோனில் படம் பிடித்து வைக்கிறான். அது தெரிந்தும், அவளால் முழுமையாக அதை தடுக்க முடியவில்லை.
இதற்கு நேர்மாறான பொருளாதார சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவன் அன்ஸாரி. அவன் ஏழைகள் வாழக் கூடிய குடிசைகள் நிறைந்த பகுதியில் தங்கியிருக்கிறான். அவன் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சாதாரண தொழிலாளியாக வேலை பார்க்கிறான். தினமும் சிவப்பு நிற சீருடையை அணிந்து கொண்டு, கையில் பாலித்தீன் பையைச் சுருட்டி வைத்துக் கொண்டு நடந்தும், பேருந்தில் பயணம் செய்தும் வேலைக்குப் போய்க் கொண்டிருப்பவன் அவன். சூப்பர் மார்க்கெட்டில் தரையைக் கழுவுவது, கழிவறையைச் சுத்தம் செய்வது, பொருட்களை அடுக்கி வைப்பது, மேலாளரின் உத்தரவுப்படி எந்த வேலைகளையும் செய்வது, பிற இடங்களுக்குப் போய் வருவது-இவை எல்லாவற்றையும் அவன் செய்கிறான்.
சூப்பர் மார்க்கெட்டில் அவனை எல்லோரும் கிண்டலும், கேலியும் செய்வார்கள். அவனை மனிதனாக பார்த்து அன்பு செலுத்துபவள் அவனுடன் பணியாற்றும் நஃபீஸா மட்டுமே.
அர்ஜுனுக்கு ஆனுடன் விரைவில் திருமணம் நடக்கும் தகவல் சோனியாவிற்குத் தெரிய வருகிறது. அவள் அதிர்ச்சியடைந்து விடுகிறாள். இது விஷயமாக ரெஸ்ட்டாரெண்ட் ஒன்றிற்கு அர்ஜுனை அவள் வரவழைத்து அவனிடம் கேட்கிறாள். அவர்களுக்கிடையே காரசாரமான விவாதம் நடக்கிறது. அவள் கோபித்துக் கொண்டு செல்ல, அவளைச் சமாதானப்படுத்துவதற்காக அர்ஜுன் வேகமாக எழுந்து செல்கிறான்.
அப்போது அவனுடைய செல்ஃபோன் தவறி கீழே விழுந்து விடுகிறது. அதை அங்கு வந்திருந்த அன்ஸாரி எடுத்து, தன் பாக்கெட்டிற்குள் வைத்துக் கொண்டு, அங்கிருந்து நகர்ந்து விடுகிறான். அர்ஜுன் திரும்பி வந்து பார்த்தால், செல்ஃபோன் அங்கு இல்லை.
அடுத்து... செல்ஃபோனைச் சுற்றியே காட்சிகள்...
செல்ஃபோனைப் பற்றிய விஷயங்கள் முழுமையாக அன்ஸாரிக்குத் தெரியாது. சில நேரங்களில் அதை ஆஃப் பண்ணி வைத்திருப்பான். சில நேரங்களில் அதை ‘ஆன்’ செய்வான். ‘ஆன்’ செய்யப்பட்டிருக்கும்போது, அர்ஜுன் அவனிடம் பேசுவான்-யாரிடம் பேசுகிறோம் என்பது தெரியாமலேயே. ‘நீங்கள் வைத்திருக்கும் செல்ஃபோன் எனக்குச் சொந்தமானது. அதை தந்து விடுங்கள். உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் நான் தருகிறேன்’ என்பான் அவன். அந்த செல்ஃபோனில் உள்ள தானும் சோனியாவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் எங்கே யூ-ட்யூப்பிற்கு போய் விடுமோ என்ற பயம் அவனுக்கு.
விலை உயர்ந்த அந்த செல்ஃபோன் தன் கையில் வந்ததிலிருந்து, அன்ஸாரி ஆளே முழுமையாக மாறி விடுகிறான். அந்த செல்ஃபோனை யாருக்கும் தெரியாமல் பாக்கெட்டிற்குள் வைத்துக் கொண்டு திரிகிறான் அவன்.
அர்ஜுன் செல்ஃபோனைக் கேட்கும்போது, ஏதாவது ஒரு இடத்தைச் சொல்லி அர்ஜுனை அங்கு வரச் சொல்லுவான் அன்ஸாரி. அர்ஜுன் அங்கு வருவான். அன்ஸாரியும் அங்கு வருவான். ஆனால், அங்கு சென்றதுமே, அதுவரை ‘ஆன்’ நிலையில் இருந்த செல்ஃபோனை ‘ஆஃப்’ செய்து விடுவான் அன்ஸாரி. மனம் வெறுத்துப் போய், அங்கிருந்து கிளம்புவான் அர்ஜுன். அவன் சோகத்துடன் செல்வதை, அன்ஸாரி தூரத்தில் சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருப்பான்.
வேறொரு நாள் இதே மாதிரி ஒரு இடத்திற்கு அர்ஜுனை அன்ஸாரி வரச் சொல்லுவான். செல்ஃபோனை ‘ஆஃப்’ செய்து விட்டு, அர்ஜுனுக்கு மிகவும் அருகிலேயே அன்ஸாரி அமர்ந்திருப்பான். ஆனால், தன் செல்ஃபோனை வைத்திருப்பவன் அவன்தான் என்று இறுதி வரை அர்ஜுனுக்குத் தெரியாது.
ஒரு நாள் செல்ஃபோனை நஃபீஸா பார்த்து விடுகிறாள். அந்த செல்ஃபோனை அதன் சொந்தக்காரனிடம் உடனடியாக ஒப்படைக்கும்படி அவள் அன்ஸாரியிடம் கூறுகிறாள். அதற்கு சம்மதிக்கிறான் அன்ஸாரி. அதை தெரிவிக்கலாம் என்று பார்த்தால், பேட்டரி தன் சக்தியை இழந்து, ஃபோன் ‘ஆஃப்’ ஆகி விடுகிறது.
புதிதாக சார்ஜர் வாங்க அன்ஸாரியிடம் பணம் இல்லை. ‘சார்ஜ்’ பண்ணுவதற்காக தனக்குத் தெரிந்த ஒரு செல்ஃபோன் கடைக்கு எடுத்துச் செல்கிறான் அன்ஸாரி. செல்ஃபோன் கடைக்காரன், செல் ஃபோனில் இருந்த அர்ஜுன் - சோனியா கவர்ச்சி காட்சிகளை ‘யூ ட்யூப்’ பில் போட்டு விடுகிறான். உலகமே அதை கண்டு களிக்கிறது.
அதைப் பார்த்த ஆனின் தந்தை திருமணத்தை நிறுத்தி விடுகிறார்.
இதற்கிடையில் முன்பு நடைபெற்ற ஒரு சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு, அன்ஸாரி வேலை பார்க்கும் சூப்பர் மார்க்கெட்டிற்கு வருகிறான் அர்ஜுன். உள்ளே வந்து கொண்டே அந்த செல்ஃபோனின் எண்ணை, தான் வைத்திருக்கும் வேறொரு செல்ஃபோனில் அழுத்த, எதிரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அன்ஸாரியின் பாக்கெட்டிற்குள் ‘பீப்... பீப்...’ சத்தம் வருகிறது.
அதைக் கேட்டு அவன் மீது பாய்கிறான் அர்ஜுன். அன்ஸாரி அவனிடமிருந்து தப்பித்து, சாலையில் தலை தெறிக்க ஒடுகிறான். அர்ஜுன் அவனை விரட்டுகிறான்.
அடுத்து நடந்தது என்ன?
அருமையான திரைக்கதை... ஆர்வத்தைத் தூண்டும் காட்சிகள்... திறமையான இயக்கம்...
அர்ஜுனாக ஃபகத் ஃபாஸிலும், அன்ஸாரியாக வினீத் ஸ்ரீநிவாஸனும் வாழ்ந்திருக்கிறார்கள்.
சோனியாவாக ரம்யா நம்பீசன் (மிகவும் நெருக்கமாக... உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் காட்சியில் தயக்கமே இல்லாமல் நடித்திருக்கிறார்).
ஆனாக - ரோமா அஸ்ரானி, நஃபீஸாவாக - நிவேதா தாமஸ்.
கதை : உண்ணி ஆர். (முற்றிலும் வித்தியாசமான கதை. நிச்சயம் பாராட்ட வேண்டும்).
இசை : ரெக்ஸ் விஜயன்.
ஒளிப்பதிவு : ஜோமோன் டி.ஜான்.
இருவரும் தங்களின் திறமைகளை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
கேரள அரசாங்கத்தின் சிறந்த நடிகருக்கான விருதை இந்தப் படத்திற்காக ஃபகத் ஃபாஸில் வாங்கியிருக்கிறார். அமிர்தா தொலைக் காட்சி சிறந்த படமாக ‘சாப்பா குரிஸு’ படத்தை தேர்ந்தெடுத்து விருது அளித்தது.