Category: சினிமா Published Date Written by சுரா Hits: 3837
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
பிஃபோர் தி ரைன்
(இந்திய ஆங்கில திரைப்படம்)
எனக்கு மிகவும் பிடித்த கவித்துவத் தன்மை நிறைந்த படம். படத்தின் இயக்குநர் சந்தோஷ் சிவன். படத்தின் ஒளிப்பதிவாளரும் அவரே. படத்தின் கதாநாயகி நந்திதாதாஸ். ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் மலையாளத்திலும் உரையாடல்கள் உண்டு. 2007ஆம் ஆண்டில் இந்தியா, இங்கிலாண்ட், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இப்படம் திரையிடப்பட்டது.
1930களில் நடைபெறும் கதை. ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த கால கட்டம். கேரளத்தின் மலபார் பகுதியை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது.
கேரளத்தின் கிராமப் பகுதியொன்றில் சாலை அமைக்கும் வேலை நடைபெறுகிறது. தொழிலாளர்கள் பலரும் அதில் ஈடுபட்டிருக்க, அதை மேற்பார்வை இருப்பவராக ஆங்கிலேயரான ஹென்ரி மூர்ஸ் இருக்கிறான். இங்கிலாண்டிலிருந்து, இதற்கென வந்திருப்பவன் அவன். அவனுடன் இந்தியனான டி.கே.யும் இருக்கிறான். நல்லவனாக டி.கே.விற்கு ஹென்ரியைப் பற்றிய எல்லா விஷயங்களும் தெரியும். எனினும், தன்னுடைய மேலதிகாரி என்பதால், அவன் எதையும் கண்டு கொள்ளாமல், சகித்துக் கொண்டு இருக்கிறான்.
ஹென்ரிக்கும், அந்த கிராமத்தைச் சேர்ந்தவரும் ஏற்கெனவே திருமணமானவருமான சஜனி என்ற பெண்ணுக்கும் ஒரு தவறான உறவு இருக்கிறது. ஹென்ரியின் மனைவியும், மகனும் விடுமுறையில் சொந்த நாட்டிற்குச் சென்றிருப்பது அவர்களுக்கு வசதியாகப் போய் விடுகிறது. தன் கணவனுக்குத் தெரியாமல், சஜனி ஹென்ரியுடன் உறவு கண்டு, சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறாள். அந்த ஏழைப் பெண்ணும் தன்னுடைய வீட்டின் வேலைக்காரியுமான சஜனியும், வெள்ளைக்காரனான ஹென்ரியும் ஒரு நீர் வீழ்ச்சிக்கு அருகில் நெருக்கமாக இருக்கும்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் அதைப் பார்த்து விட்டு, ஓடி விடுகிறார்கள்.
சில நாட்களில், ஹென்ரியின் மனைவியும் மகனும் இங்க்லாண்டிலிருந்து திரும்பி வருகிறார்கள். அமைதியை இழந்து தவிக்கும் சஜனியிடம், தான் அவள் மீது ஆழ்ந்த காதல் கொண்டிருப்பதாக கூறுகிறான் ஹென்ரி. காலப்போக்கில் சஜனியின் கணவனுக்கு, அவருடைய கள்ள உறவு தெரிய வருகிறது. அவளை அவன் முரட்டுத்தனமாக அடிக்கிறான். சஜனி ஹென்ரியைத் தேடி வருகிறாள். அவன், எங்கேயாவது ஒரு மறைவிடத்தைப் பார்த்து அவளை வைக்கும்படி டி.கே.யிடம் கூறுகிறான். இனிமேலும் அந்த ஊரில் இருப்பது என்பது சஜனிக்கு நல்லது இல்லை என்றும், அவள் இருப்பது ஹென்ரியின் வாழ்க்கைக்கு ஆபத்தாகிவிடும் என்றும் கூறுகிறான் டி.கே. ஆனால், அவன் கூறியதை சஜனி பொருட்படுத்தாமல் இருக்கிறான்.
இதற்கிடையில் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் மீது இந்தியர்களுக்கு மிகப் பெரிய வெறுப்பு உண்டாகிறது. ஒரு இந்திய பெண்ணுக்கும், ஒரு ஆங்கிலேயனுக்கும் இடையே உண்டான திருட்டுத்தனமான உறவு பற்றி தெரிய வர, மிகுந்த கோபத்திற்கு ஆளாகிறார்கள். ஹென்ரியின் மீது அளவற்ற காதல் வைத்திருக்கும் சஜனி, திரும்பவும் அவனைத் தேடி வருகிறாள். அவளை அங்கிருந்து கிளம்பிப் போகச் சொல்லும் ஹென்ரி, அவளின் மீது தனக்கு சிறிதும் காதல் இல்லை என்கிறான். அதனால் நிலை குலைந்து போன சஜனி, டி.கே.யின் துப்பாக்கியால் (ஹென்ரி பரிசாக தந்தது) தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்து விடுகிறாள். ஹென்ரியும், டி.கே.யும் அவளுடைய உடலை, ஆற்றல் வீசி எறிந்து விடுகிறார்கள்.
சஜனி காணாமற் போன விஷயம் கிராமத்தில் பெரிய அளவில் கொந்தளிப்பை உண்டாக்குகிறது. சஜனியின் கணவனும், அவளுடைய சகோதரனும் கிராமத்து ஆட்களைத் திரட்டி, காடு முழுவதும் தேடுகிறார்கள். ஏற்கெனவே சஜனியை ஹென்ரியுடன் நீர் வீழ்ச்சிக்கு அருகில் பார்த்த அதே சிறுவர்கள், அவளுடைய இறந்து உடலையும் பார்க்கிறார்கள். ஒரு ஆங்கிலேயரின் பிஸ்டலிலிருந்து வந்த குண்டு பாய்ந்து அவள் இறந்திருக்கிறாள் என்பது தெரிய வருகிறது. சஜனியின் கணவனின் தலைமையில் வெகுண்டெழுந்து வந்த கிராமத்து மக்கள், துப்பாக்கியுடன் நின்று கொண்டிருக்கும் டி.கே.யை முற்றுகை இருகிறார்கள். அந்த துப்பாக்கியின் குண்டும், சஜனியின் உடலில் பாய்ந்த குண்டும் ஒன்றாக இருக்க, கிராமத்துப் பெரியவர்களின் முன்னால் விசாரணை நடக்கிறது. உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கூற வேண்டிய கட்டாயம் டி.கே.விற்கு உண்டாகிறது. சஜனியின் மரணத்திற்குக் காரணமானவன் தன் கணவன் என்பது தெரிந்ததும், ஹென்ரியின் மனைவி இங்க்லாண்டிற்குச் சென்று விடுகிறார். தன்னுடைய கெட்டுப்போன பெயரைச் சரி பண்ண வேண்டுமென்றால், ஹென்ரியை டி.கே. தான் கொல்ல வேண்டும் என்று கிராமத்து பெரியவர்கள் கூறுகிறார்கள். ஹென்ரியைக் கொல்வதற்காக துப்பாக்கியுடன் போய் நிற்கிறான் டி.கே. அதற்குப் பிறகு என்ன நடந்தது?
இதுதான் ‘Before the Rains’ படத்தின் கதை.
ஏழைப் பெண் சஜனியாக நடித்திருப்பவர்… இல்லை… வாழ்ந்திருப்பவர் நந்திதாதாஸ் (என்ன நேர்த்தியான நடிப்பு!)…
ஹென்ரியாக Linus Roache…
டி.கே.யாக ராகுல் போஸ்…
படம் முடிந்த பிறகும் நந்திதா தாஸூம், இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் அந்த கிராமமும், மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிகளும், நதியும், நீர் வீழ்ச்சியும் நம் கண்களையும் மனதையும் விட்டு மறையவே மறையாது.