Lekha Books

A+ A A-

காழ்ச்ச

Kaazhcha

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

காழ்ச்ச

(மலையாள திரைப்படம்)

ன்னை மிகவும் கவர்ந்த ஒரு மிகச் சிறந்த திரைப்படம் இது. மம்மூட்டி கதாநாயகனாக நடித்த இப்படம் 2004ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. கடந்த சில வருடங்களாக அருமையான திரைப்படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் ப்ளெஸ்ஸி இயக்கிய படம் இது.

மாதவன் அந்த கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே அவனுக்கு சினிமா பைத்தியம். அதனால் பாதியிலேயே படிப்பு நின்று விட்டது. காலப்போக்கில் அவன் ஒரு சினிமா ஆப்பரேட்டராக ஆகிவிட்டான். ஒரு 16 எம்.எம். ப்ரொஜக்டரை வைத்துக் கொண்டு ஊர் ஊராக அலைந்து திரிந்து, மக்களுக்கு பொது இடங்களில் திரையைக் கட்டி, படங்களைத் திரையிட்டுக் காட்டக் கூடியவன் அவன். கோவில் திருவிழாக்களிலும், ஊர்களில் நடைபெறும் மற்ற நிகழ்ச்சிகளிலும் அவன் படங்களைத் திரையிட்டுக் காட்டுவான்.

அவனுடைய மனைவி லட்சுமி. அவர்களுக்கு பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மகள். பெயர் – அம்பிலி. மிகவும் எளிமையான, அமைதியான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் பவன் என்றொரு 6 வயது சிறுவன், மாதவன் வாழ்க்கைக்குள் நுழைகிறான். வேறு ஏதோ புரிந்து கொள்ள முடியாத ஒரு மொழியை அந்தச் சிறுவன் பேசுகிறான். தோற்றத்தில் அவன் வட இந்தியாவைச் சேர்ந்த சிறுவனைப் போல இருக்கிறான். மிகவும் வறுமை நிலையில் இருக்கும் அந்தச் சிறுவனுக்கு தன்னைப் பற்றி எதுவும் கூற தெரியவில்லை. அவன் பேசும் மொழி அங்கிருக்கும் யாருக்கும் சிறிது கூட புரியவில்லை.

அவன் அந்த ஊருக்கு எப்படி வந்து சேர்ந்தான் என்பதே தெரியவில்லை. எனினும், அந்தச் சிறுவனின் மீது இரக்கப்பட்டு, அவனைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான் மாதவன். அந்தப் பையனை தன் வீட்டில் தங்க வைத்து, சாப்பாடு போட்டு வளர்க்கிறான். மாதவனும், லட்சுமியும் அவனை தங்களுடைய மகனாகவே ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்களுடைய மகள் அம்பிலி, பவனை தன்னுடைய சகோதரனாக ஏற்றுக் கொள்கிறாள். அந்த மூவரின் பாச மழையிலும் நனைந்து இன்பம் காணுகிறான் பவன்.

நாட்கள் செல்லச் செல்ல… ஒரு உண்மை தெரிய வருகிறது. அந்தச் சிறுவன் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவன் என்பதும், அவன் பேசும் மொழி குஜராத்தின் குக்கிராமங்களில் பேசப்படும் மொழி என்பதும், குஜராத் பூகம்பத்தின் காரணமாக அவன் எப்படியோ அந்த மாநிலத்திலிருந்து எந்த கூட்டத்துடனோ சேர்ந்து வெளியேறி வந்திருக்கிறான் என்பதும், பிச்சைக்காரர்கள் அவனைக் கவர்ந்து கொண்டு செல்ல… அவர்களிடமிருந்து தப்பி ஓடி வந்திருக்கிறான் என்பதும் தெரிய வருகிறது.

மாதவன் வீட்டில் வளரும் குஜராத் சிறுவனைப் பற்றிய தகவல் தெரிந்து காவல் துறையினர் மாதவனைத் தேடி வருகின்றனர்.

அனாதையாக தெருவில் பார்த்த ஒரு சிறுவனை தன் விருப்பப்படி எப்படி வீட்டில் கொண்டு போய் வளர்க்கலாம் என்றும், அந்த சம்பவத்தை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டியது அவனின் கடமையல்லவா என்றும் மாதவனைப் பார்த்து அவர்கள் கேட்கின்றனர்.

அந்தச் சிறுவன் விஷயமாக மாதவன் சிறைக்குள் செல்ல நேர்கிறது. சிறுவன் ‘சிறுவர்கள் காப்பக’த்திற்கு அனுப்பப்படுகிறான். இந்தச் சம்பவம் பேசப்படும் ஒன்றாக ஆகிறது. பத்திரிகைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் சிறுவனைப் பற்றிய தகவல்களை எழுதுகின்றன, ஒளிபரப்புகின்றன.

தான் அந்தச் சிறுவன் மீது அன்பு செலுத்துகிறோம் என்பதற்காக தன் விருப்பப்படி தன்னுடைய வீட்டில் அவனை வைத்துக் கொண்டிருக்க முடியாது என்ற உண்மையை மாதவன் உணர்கிறான். அவனுடைய பெற்றோர் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து, அவர்களிடம் பையனைக் கொண்டு போய் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம், காவல்துறைக்கு கட்டளை பிறப்பிக்கிறது. அதைத் தொடர்ந்து சிறுவனுடன் போலீஸ்காரர் ஒருவர் குஜராத்திற்குக் கிளம்ப, அவர்களுடன் மாதவனும் சேர்ந்து பயணமாகிறான்.

சிறுவனைப் பிரிய முடியாமல் அவன் மீது பாசம் வைத்த மாதவனின் மனைவி லட்சுமியும், மகள் அம்பிலியும் கண்ணீர் விட்டு அழுகிறார்கள்.

நீண்ட பயணத்திற்குப் பிறகு மாதவனும், போலீஸ்காரரும், சிறுவன் பவனும் குஜராத்தை அடைகிறார்கள். வறண்டு கிடக்கும் இடங்கள்… பூகம்பத்தால் இடிந்து கிடக்கும் கட்டிடங்கள்… தரையோடு பெயர்ந்து கிடக்கும் வீடுகள்… மொத்தத்தில் அந்த ஊரே ஒரு பாலைவனத்தைப் போல இருக்கிறது.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட அந்த இடத்தில் இருக்கும் காவல் நிலையத்திற்கு அவர்கள் சென்று, விஷயத்தைத் தெரிவிக்கின்றனர். பூகம்பத்தில் இறந்தவர்களின் புகைப் படங்கள் அங்கு ஒட்டப்பட்டிருக்கின்றன. அவற்றிலோ, அங்கிருந்த புத்தகத்திலோ அந்தச் சிறுவனின் பெற்றோரைப் பற்றிய தகவல் இல்லை. ‘இறந்த பலரைப் பற்றிய தகவல்களை இப்போதும் தேடிக் கொண்டிருக்கிறோம்’ என்று கூறுகிறார் அங்கிருக்கும் போலீஸ் அதிகாரி.

சிறுவனை அங்கு விட்டுவிட்டு, கிளம்பிப் போகும்படி போலீஸ் அதிகாரி கூறுகிறார். அப்போது மாதவன் தன் வீட்டு முகவரியை எழுதி அவரிடம் தந்து ‘பையனின் பெற்றோரை ஒருவேளை கண்டு பிடிக்க முடியாமற் போனாலோ அல்லது அவர்கள் இறந்திருந்தாலோ இந்த முகவரிக்கு தெரிவியுங்கள். நான் வந்து பையனை அழைத்துக் கொள்கிறேன். என் மகனாகவே அவனை அன்பு செலுத்தி வளர்ப்பேன்… நன்றாக படிக்க வைப்பேன்’ என்கிறான் மாதவன் – மலையாளத்தில். அவன் கூறியதைப் புரிந்து கொண்ட அந்த அதிகாரி புன்னகைத்துக் கொண்டே ‘சரி…’ என்று மாதவனைப் பார்த்து கூறுகிறார். கேரள போலீஸ்காரர் வெளியேற, சிறுவனிடம் பிரியா விடைபெற்றுக் கொண்டு கண்ணீர் மல்க அங்கிருந்து வெளியேறுகிறான் மாதவன். நிச்சயம் நாம் திரும்பவும் வந்து சிறுவனை கேரளத்திற்கு அழைத்துச் செல்வோம் என்ற முழுமையான நம்பிக்கை அவனின் மனதில் அப்போது இருக்கிறது.

அவர்கள் வெளியேறிய அடுத்த நிமிடமே – குஜராத் காவல் துறை அதிகாரி மாதவன் எழுதித் தந்த அந்த முகவரியைக் கசக்கிக் கிழித்து அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போடுகிறார்.

அத்துடன் படம் முடிகிறது.

மாதவனுடன் சேர்ந்து நாமும் அழ வேண்டியதுதான்… வேறு என்ன செய்ய முடியும்?

மாதவனாக மம்மூட்டி படம் முழுக்க வாழ்ந்திருக்கிறார். அவரின் மனைவி லட்சுமியாக வரும் பத்மப்ரியாவும்தான்…

படத்திற்கு ஒளிப்பதிவாளர்: அழகப்பன்.

அந்த அழகான கேரளத்து கிராமமும், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்தும் நம் நெஞ்சை விட்டு நீங்கவே நீங்காது.

நல்ல ஒரு படத்தை இயக்கிய ப்ளெஸ்ஸி என்ற அற்புத கலைஞனுக்கு – ஒரு பூங்கொத்து!

Page Divider

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel