ஃபாரஸ்ட் கம்ப்
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 3841
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
Forrest Gump
(ஹாலிவுட் திரைப்படம்)
இந்த படத்தை நான் பார்த்து ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது. ஆனால், இப்போதும் அந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் என் மனதில் பசுமையாக இருந்து கொண்டிருக்கிறது. கவித்துவ உணர்வுடன் எடுக்கப்பட்டிருக்கும் ஒரு அருமையான படம். இத்தகைய தன்மை கொண்ட ஒரு படத்தை நாம் எப்போதாவது ஒரு முறைதான் பார்க்க முடியும்.
ஃபாரஸ்ட் கம்ப் என்ற இளைஞனைச் சுற்றி பின்னப்பட்டதே படம். 1981ஆம் ஆண்டு அவன் ஒரு பேருந்து நிறுத்தத்தில் போடப்பட்டிருக்கும் மர பெஞ்சில் அமர்ந்து, அங்கு வரக் கூடிய ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு நேரங்களில் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை கூறும் பாணியில் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. (இந்த உத்தியை பிரகாஷ் ராஜின் ‘அபியும் நானும்’ படத்தில் காப்பி அடித்திருப்பார்கள்).
ஃபாரஸ்ட் கம்ப் சிறுவனாக பள்ளிக் கூடம் செல்கிறான் – அதே பேருந்து நிறுத்தத்திலிருந்துதான். முதல் நாள் பள்ளிக் கூடம் செல்லும்போதே பேருந்தில் ஜென்னி என்ற மாணவியைப் பார்க்கிறான். அவளை அவனுக்கு மிகவும் பிடிக்க, அன்றிலிருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்கள்…
படிப்பை விட, ஓடுவதில் மிகவும் திறமைசாலி ஃபாரஸ்ட். அதன் மூலம் அலபாமா பல்கலைக் கழகத்திற்குள் நுழைய அவனுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது. கல்லூரியில் படிக்கும்போது, பெயர் பெற்ற கால் பந்து வீரனாக ஆக, அவன் ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடியைச் சந்திக்கிறான்.
கல்லூரியை விட்டு வெளியே வரும் ஃபாரஸ்ட், ராணுவத்தில் சேர்கிறான். அங்கு புப்பா என்ற நண்பன் அவனுக்கு கிடைக்கிறான். அவர்கள் வியட்நாமிற்கு அனுப்பப்படுகிறார்கள். 1965இல் அவன் இருக்கும் படை தாக்கப்பட, அவன் பலரைக் காப்பாற்றுகிறான். ஆனால், புப்பா இறந்து விடுகிறான். அந்தப் படையின் தலைவரான டேன் டெய்லரை காப்பாற்றுபவனும் ஃபாரஸ்ட்தான். அதன்மூலம் ஃபாரஸ்ட்டிற்கு ஜனாதிபதி லிண்டன் பி.ஜான்ஸனிடம் விருது கிடைக்கிறது. கால் ஊனமான டேனி, தன் முன்னோர்களைப் போல தன்னை போரில் இறக்க விடாததற்காக ஃபாரஸ்ட்டின் மீது கோபம் கொள்கிறார். வாஸிங்டனில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் இளம் பருவத்து தோழி ஜென்னியை ஃபாரஸ்ட் பார்க்கிறான். இரவு முழுவதும் நகரத்தின் தெருக்களில் அவர்கள் நடந்து திரிகிறார்கள். மறுநாள் காலையில் ‘ஹிப்பி’ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஜென்னி, தன்னுடைய பார்க்க சகிக்காத நண்பனுடன் கிளம்பிச் சென்று விடுகிறாள்.
‘பிங் பாங்’ விளையாட்டில் அமெரிக்க ராணுவத்தில் இருந்து கொண்டு, சீனாவிற்கு எதிராக விளையாடுகிறான் ஃபாரஸ்ட். வெள்ளை மாளிகைக்குச் சென்று ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸனைச் சந்திக்கிறான். போர் முடிய, ஃபாரஸ்ட்டின் ராணுவ வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி விழுகிறது.
‘பிங்க் பாங்’ விளையாட்டின் மூலம் கிடைத்த பணத்தில் டேனுடன் சேர்ந்து, இறால் மீன் தொழிலில் இறங்கிறான் ஃபாரஸ்ட். ஆரம்பத்தில் ஃபாரஸ்ட்டை கிண்டலாக பார்த்த டேன், தன் உயிரை காப்பாற்றியதற்காக அவனுக்கு நன்றி கூறுகிறார். சொந்த ஊருக்கு நோய் வாய்ப்பட்டிருக்கும் தன் தாயைப் பார்க்க அவன் வர, அவள் இந்த உலகை விட்டு நீங்குகிறாள். தொழிலில் கிடைத்த பணத்தை ‘ஆப்பிள்’ பங்குகளில் முதலீடு செய்ய, அது அவர்களை மிகப் பெரிய கோடீஸ்வரர்களாக ஆக்குகிறது.
ஜென்னி ஃபாரஸ்ட்டைத் தேடி வந்து அவனுடன் தங்குகிறாள். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவன் கேட்க, அவள் மறுத்துவிட்டு, ஒரு நாள் காலையில் எதுவும் கூறாமலே அங்கிருந்து போய் விடுகிறாள். ஆனால், அதற்கு முந்தைய இரவில் அவர்கள் படுக்கையறையில் ஒன்றாக இருக்கிறார்கள். கவலையில் ஆழ்ந்த ஃபாரஸ்ட் ஓட வேண்டும் என்று தீர்மானிக்கிறான். சிறிய ஓட்டம் பெரிய ஓட்டமாக மாறுகிறது. ஓடுகிறான்… ஓடுகிறான்… ஓடிக் கொண்டே இருக்கிறான். மூன்று வருடங்கள் மூலை முடுக்கெல்லாம் ஓடுகிறான். அதன் மூலம் ஃபாரஸ்ட் புகழ் பெற்ற மனிதனாக ஆகிறான். அவனுக்கு ரசிகர்கள் உண்டாகின்றனர். ஒரு நாள் எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு, வீட்டிற்கு திரும்பி வருகிறான். தன்னை வந்து உடனடியாக சந்திக்கும்படி ஜென்னி கடிதம் எழுதியிருக்கிறாள். அதைத் தொடர்ந்து அவன் பேருந்து நிறுத்தத்திற்கு வருகிறான். இதுதான் படத்தின் ஆரம்பம். மீண்டும் அவன் தன் கதையை இன்னொருவரிடம் தொடர்கிறான்.
ஜென்னியை ஃபாரஸ்ட் போய் பார்க்கிறான். தங்களுக்கு ஒரு மகன் இருக்கும் விஷயமே அப்போதுதான் ஃபாரஸ்ட்டிற்குத் தெரிய வருகிறது. அவனுடைய பெயரும் ஃபாரஸ்ட்தான். தன் மகனுடன் அமர்ந்து ஃபாரஸ்ட் டி.வி. பார்த்துக் கொண்டிருக்க, இனம் புரியாத ஒரு நோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக ஜென்னி கூறுகிறாள். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவள் கேட்க, அவன் சம்மதிக்கிறான். அவர்கள் அலபாமாவிற்கு மகன் ஃபாரஸ்ட்டுடன் திரும்பி வந்து, திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணக் கூட்டத்தில் டேன் டெய்லர் செயற்கைக் காலுடனும், சமீபத்தில் தனக்கு நிச்சயமான பெண்ணுடனும் நின்று கொண்டிருக்கிறார்.
ஃபாரஸ்ட்டின் சந்தோஷம் சில நாட்களுக்கு மட்டுமே… 1982ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் நாள் ஜென்னி மரணத்தைத் தழுவுகிறாள்.
படத்தின் இறுதி காட்சியில், தன் மகன் ஃபாரஸ்ட்டுடன், தந்தை ஃபாரஸ்ட் பள்ளிக்கூட பேருந்தில் சிறுவனை ஏற்றி அனுப்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருக்கிறான். அன்றுதான் பள்ளிக்குச் செல்லும் முதல் நாள். பேருந்து கிளம்பிச் செல்ல, தான் பள்ளிக்குச் சென்ற முதல் நாளன்று தன்னுடைய தாய் அமர்ந்திருந்த அதே மர பெஞ்சில் காற்றில் பறந்து கொண்டிருக்கும் சிறகை பார்த்தவாறு, ஃபாரஸ்ட் அமர்ந்திருக்கிறான். சிறகு காற்றில் மேலே… மேலே… பறந்து போய்க் கொண்டே இருக்கிறது.
ஃபாரஸ்ட்டாக நடித்த டாம் ஹேங்க்ஸ், ஜென்னியாக நடித்த ராபின் ரைட் - இருவரும் என் மனதில் உயிர்ப்புடன் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மர பெஞ்சில் தனியாக அமர்ந்திருக்கும் ஃபாரஸ்ட் கம்ப் என் இரவு நேர கனவுகளில் கூட அடிக்கடி வருகிறான்.
அபூர்வமாக மலரும் குறிஞ்சி மலர் என்று நாம் கூறுவோமே… நிச்சயம் இந்தப் படம் ஒரு குறிஞ்சி மலரேதான்!
பி.கு.: ஆஸ்கார் விருது போட்டியில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், சிறந்த திரைக்கதை, சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ், சிறந்த படத்தொகுப்பு என்று விருதுகளை அள்ளிச் சென்ற படம் ‘Forrest Gump’.