
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
உஸ்தாத் ஹோட்டல்
(மலையாள திரைப்படம்)
2012ஆம் ஆண்டில் திரைக்கு வந்து, மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம். ஒரு புதுமையான கதையை இதற்கென எழுதியிருந்தார் அஞ்சலி மேனன். இந்தப் படத்தின் கதைக் கரு, உணர்ச்சிகரமான காட்சிகள், சீராக அமைக்கப்பட்டிருந்த திரைக்கதை, கலைஞர்களின் அருமையான பங்களிப்புகள் – இவை அனைத்துமே என்னை பெரிதும் கவர்ந்தன.
மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் இப்படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார். அவரின் தாத்தாவாக திலகன். தாத்தாவிற்கும் பேரனுக்குமிடையே உள்ள ஆழமான பாசம் படம் முழுவதும் அடிநாதமாக ஓடிக் கொண்டிருந்தது. துல்கரின் தந்தை சித்திக்கிற்கு ஐந்து குழந்தைகள். மூத்த குழந்தைகள் அனைவரும் பெண்கள். கடைசி குழந்தை துல்கர்.
வரிசையாக பிள்ளைகள் பெற்றதால், உடல் நிலை பாதிக்கப்பட்டு, துல்கர் பிறந்தவுடன் தாய் இறந்து விடுகிறாள். அக்காக்களின் அரவணைப்பில் வளரும் துல்கர், தந்தையின் விருப்பத்திற்கு எதிராக சுவிட்சர்லாண்ட் சென்று ‘செஃப்’ தொழிலை கற்கிறார்.
தன் மகன் ‘ஹோட்டல் மேனேஜ்மென்ட்’ படிக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருந்த சித்திக்கிற்கு, ‘தன் மகன் சாதாரண செஃப்தான்’ என்பதை நினைத்தவுடன், அதிர்ச்சி. அதைப் பற்றி கவலைப்படாத துல்கர், தன் தாத்தா 35 வருடங்களாக கோழிக்கோட்டில் நடத்திக் கொண்டிருக்கும் ‘உஸ்தாத் ஹோட்டல்’ என்ற சாதாரண மக்கள் சாப்பிடும் ஹோட்டலுக்கு வந்து, தன் தாத்தாவிற்கு உதவியாக இருக்கிறார். தன் அன்பு பேரனின் மீது பாசத்தை மழையென பொழிகிறார் அந்த தாத்தா. தளர்ந்து போன தாத்தாவிற்கு பேரனின் வருகை மிகவும் உதவியாக இருக்கிறது.
அந்த ஹோட்டலுக்கு எதிரில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல், அதை ஆக்கிரமிக்க திட்டமிட்டு, அதற்கான சதிவேலையில் இறங்குகிறது. இதன் மூலம் சுகாதாரமின்மை என்ற காரணத்தைக் காட்டி ‘உஸ்தாத் ஹோட்டல்’ மூடப்படுகிறது. துல்கர் தொழிலாளர்களின் உதவியுடனும், தன் காதலி சஹானாவின் உதவியுடனும் அந்த ஹோட்டலை நவீனமயமாக ஆக்கி, மீண்டும் திறந்து, இன்றைய காலத்தின் தேவைக்கேற்றபடி அதன் அனைத்து அம்சங்களிலும் மாற்றங்கள் உண்டாக்கி, தன் தாத்தாவின் காலத்திற்குப் பிறகு, அந்த ‘உஸ்தாத் ஹோட்ட’லை எப்படி வெற்றிகரமான ஒரு ஹோட்டலாக ஆக்குகிறார் என்பதுதான் இதன் மீதிக் கதை.
தொழிலில் வெற்றி பெற்ற தன் மகனை தந்தை சித்திக் பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறார்… துல்கர் மிகப் பெரிய பணக்காரரின் மகளான சஹானாவை (நித்யா மேனன்) திருமணம் செய்து கொள்கிறார்.
படம் முடிந்த பிறகும், மலர்ந்த முகத்துடன் எப்போதும் இருக்கும் துல்கர் சல்மானும், தாத்தா கதாபாத்திரத்திற்கு உயிர் தந்திருக்கும் திலகனும் (இப்படியொரு நடிப்பு மேதையை இனி பார்க்கத்தான் முடியுமா?) நம் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
நல்ல ஒரு படத்தை இயக்கிய அன்வர் ரஷீத்திற்கு – ஒரு ராயல் சல்யூட்!
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook