லிங்கன்
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 3444
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
லிங்கன்
(ஹாலிவுட் திரைப்படம்)
சமீபத்தில் நான் ரசித்துப் பார்த்த ஹாலிவுட் திரைப்படம் : ‘Lincoln.’ ஆப்ரஹாம் லிங்கனின் வாழ்க்கை என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும்.
அவரைப் பற்றிய பல நூல்களையும் பல வருடங்களாக நான் படித்து, அவர் மீது நான் மிகவும் ஈர்க்கப்பட்டவன். ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் லிங்கனின் கதாபாத்திரத்தில் டேனியல் டே – லூவிஸ் நடித்திருக்கிறார்.
படம் முழுக்க உரையாடல்களைக் கொண்ட படம். இருண்ட அறைகளுக்குள் உரையாடல்கள்… உரையாடல்கள்… உரையாடல்கள்.
டேனியல், லிங்கனின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார் என்பதைவிட, ஆப்ரஹாம் லிங்கனாகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார் என்பதே உண்மை.
லிங்கனின் நகைச்சுவை உணர்வையும், கிண்டல் கலந்த சொற்களுடன் பேசுவதையும் இந்தப் படத்தில்தான் பார்த்திருக்கிறேன்.
அந்தக் காட்சிகளில் மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார் டேனியல். அடிமைத்தனத்திற்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வந்து, அந்தச் சட்டம் வெற்றி பெறும் அளவிற்கு தன்னுடைய கட்சியில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாத லிங்கன், அந்தச் சட்டத்தை பல சாகசங்கள் செய்து எப்படி வெற்றி பெறும் வண்ணம் உறுப்பினர்களை வாக்களிக்கச் செய்து வரலாற்றில் இடத்தைப் பிடிக்கிறார் என்பதே கதை.
இந்த ஒரு விஷயத்தை விட்டு சிறிது கூட விலகிச் செல்லாத அளவிற்கு திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது படத்தின் சிறப்பம்சம்.
சென்ற வருடத்திற்கான சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை டேனியல் டே – லூவிஸ் தட்டிச் சென்றதிலிருந்தே, அவரின் திறமை எல்லோராலும் எந்த அளவிற்கு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். (இது நடிப்பிற்காக அவர் பெறும் மூன்றாவது ஆஸ்கார் விருது!)