மாமரத்திற்குக் கீழே - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7071
அவர்களின் பார்வைகள் சந்தித்தன. அடுத்த நிமிடம் பாலனின் பிடி விலகியது. அவள் அங்கிருந்து ஓடினாள்.
அடுத்த நாள் முதல் அவள் மாமரத்தடிக்கு வரவில்லை. ஒரு ரவிக்கை வேண்டுமென்று தன் தாயிடம் அவள் வற்புறுத்திக் கேட்டாள். பாலனைக் காணும்போது பாப்பி ஓடி ஒளிந்து கொண்டிருந்தாள்.
பாலன் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றான். திருவனந்தபுரத்தில் இன்டர்மீடியட்டில் அவன் சேர்ந்தான். அதன் மூலம் அவனுடைய உலகம் மேலும் பெரிதானது. படித்த, நாகரீகமான நண்பர்கள், நாகரீக இளம்பெண்கள்- இப்படிப்பட்ட குதூகலமான அந்த வாழ்க்கையில் கடந்தகால நினைவுகள் குழி தோண்டி மூடப்பட்டன என்பதுதான் உண்மை. அந்த வருடத்தின் விடுமுறையின் போது பாலன் சென்னையைச் சேர்ந்த சில நண்பர்களுடன் சேர்ந்து தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் சென்றான். அடுத்த வருடம் ஓண விடுமுறையில் பாலன் வந்திருந்த போது அவனுடன் நான்கைந்து நண்பர்களும் இருந்தார்கள். வயல் பக்கம் காற்று வாங்குவதற்காக அவர்கள் சென்றிருந்தபோது மாமரத்திற்குக் கீழே புள்ளி போட்ட ரவிக்கை அணிந்து பாப்பி நின்று கொண்டிருப்பதை பாலன் பார்த்தான்.
நான்கு வருடங்கள் கழித்து பாலன் பி.ஏ.வில் தேர்ச்சி பெற்றான். திருவனந்தபுரத்திலிருந்த ஒரு பெரிய பென்ஷன் வாங்கிக் கொண்டிருந்த அதிகாரியின் மகளை அவன் திருமணம் செய்தான். திருமணத்திற்குப் போய் வந்த ஊர்க்காரர்கள் மணப் பெண்ணின் அழகைப் பல வகைகளிலும் புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் பாலனும் அவனுடைய மனைவியும் வீட்டுக்கு வந்தார்கள். மனைவியை வீட்டில் விட்டு விட்டு, அவன் இங்கிலாந்துக்குப் புறப்பட்டான்.
ஒரு நகரத்தைச் சேர்ந்த இளம் பெண் மாலை நேரங்களில் மாமரத்திற்குக் கீழே வந்து நின்று காற்று வாங்கிக் கொண்டிருப்பாள். குங்கும நிறத்தில் இருக்கும் மனிதர்கள் வாழும் மேற்குத் திசையில் இருக்கும் அந்த நாட்டுக்கு அவளுடைய கணவன் போயிருக்கிறான். பிரியும் நேரத்தில் அவன் பல உறுதிமொழிகûயும் அவளுக்குக் கொடுத்தான். ஆனால், அவளுடைய உள்மனது எப்போதும் படு குழப்பத்திலேயே இருந்தது. வெள்ளைக்காரப் பெண்களின் புன்னகை இருப்பதிலேயே மிகவும் வசீகரமாக இருக்கும் என்பதையும் அது அவர்களை அழகு மிக்கவர்களாகத் தோன்றச் செய்யும் என்றும் அவன் அவளிடம் கூறுவதுண்டு. ஆனந்தம் நிறைந்து ஓடிக் கொண்டிருக்கும் லண்டன் வாழ்க்கைக் கிடையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு அப்பாவிப் பெண்ணி டம் செய்த சபதம் ஞாபகத்தில் இருக்குமா என்ன? கல்வி இல்லை, சொல்லிக் கொள்கிற மாதிரி ரசிப்புத் தன்மை இல்லை, கணவனை ஒருமுறைகூட சந்தோஷப்படுத்தவும் முடியவில்லை. அவள் கடவுளைத் தொழுதாள். எவ்வளவு பெரிய உயர்வுகளை அங்கு அடைந்தாலும், சாதாரணப் பெண்ணான தன்னை மறக்காமல் அவன் இருக்க வேண்டும் என்று அவள் கடவுளிடம் கேட்டுக்கொண்டாள்.
அவள் அனுப்பிய கடிதங்கள் ஒவ்வொன்றும் கண்ணீரில் எழுதப்பட்டவையாக இருந்தன. "என்கிட்ட செய்த சபதங்களை மறந்துடாதீங்க.'' அவள் எழுதுவாள்: "நான் இப்படியெல்லாம் நினைக்கிறேன்னு நீங்க வருத்தப்படக் கூடாது. நான் உலகம்னா என்னன்னு தெரியாத ஒரு பொண்ணு. உங்களுக்கு அறிவுரை கூறக்கூடிய அதிகாரம் எனக்கு இல்ல. நான் நீங்க நல்லா இருக்கணும்னு எப்பவும் கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டே இருக்கேன்!' இப்படி திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அந்த நாகரீகப் பெண் கடிதம் எழுதுவாள். தன் கணவன் எப்படியெல்லாம் அன்பாக நடந்தான் என்பதை அவள் நினைத்துப் பார்ப்பாள். அவனுடைய கறுமையான, அடர்த்தியான புருவங்கள்... அவனுடைய தோற்றம்... ஒவ்வொன்றும் அவளுடைய மனதிற்குள் தோன்றும். அவை தனக்கு மட்டுமே சொந்தம்- அதாவது தன்னுடைய சொத்து என்று அப்போது அவள் நினைப்பாள்.
இப்படி பலவிதப்பட்ட சிந்தனைகள் ஓட நின்றிருந்த அவளுடைய கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. சற்று தூரத்தில் நின்றவாறு பாப்பி அவளையே ஆச்சரியம் தொனிக்க பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அணிகலன்களையும் பாதம் வரை தொங்கிக் கொண்டிருந்த புடவையையும் அவள் கூர்மையாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். உண்மையிலேயே அந்தப் பெண் ஒரு தேவதைதான்!
பாப்பி மெதுவாக அருகில் சென்று அவளிடம் கேட்டாள்:
“என்ன, அழுறியா?''
அந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் பாப்பியை அலட்சியமாகப் பார்த்தாள்.
நான்கு வருடங்கள் ஓடி முடிந்தன. பாலன் திரும்பி வந்தான். அவனை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியாக நியமித்தார்கள்.
அந்த கிராமம் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தது. அதற்கு ஒரு மிகப் பெரிய நீதிபதியின் பிறந்த மண்ணாக ஆகக் கூடிய அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது. அந்த வழியேதான் ஆலப்புழையிலிருந்து திருவல்லா செல்லும் சாலை போகின்றது. ஒரு ஆங்கில நடுத்தரப் பள்ளி, ஒன்றிரண்டு கயிறு தொழிற்சாலைகள். இவை எல்லாமே இப்போது அங்கு இருக்கின்றன.
அந்த மாமரத்திற்குக் கீழே இப்போதும் சிறார்கள் கூடுவதுண்டு. அந்தப் பாட்டுகளைப் பாடுவதுண்டு.
“காற்றே வா! கடலே வா...!'' அதை இயற்றிய கவிஞன் யாரென்று யாருக்குமே தெரியாது. தாத்தாக்களும் பாட்டிகளும் காலப் போக்கில்- வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் நடைபெற்ற இளம் பருவத்தில் கேட்ட அந்தப் பாடல் வரிகளை மறந்தே போய் விட்டார்கள். ஆனால், அவர்கள் இப்போது அந்த வரிகளை நினைத்துப் பார்க்கிறார்கள். அந்தப் பாடலை இயற்றிய கவிஞன் யாரென்று அவர்களுக்கும் சொல்லத் தெரியவில்லை.
அந்த கந்தர்வன் கோவில் இடிந்து விழுந்து கிடக்கிறது. மாமரத்தில் காய்க்கும் மாங்காய் கடுக்காயைப்போல மிகவும் சிறியதாகிவிட்டது. சிறார்கள் ஒரே நேரத்தில் இரண்டு மாங்காய்களை வாய்க்குள் போடுகிறார்கள்.
அன்றொரு நாள் மாலை நேரத்தில் சாலையில் ஒரு கார் வந்து நின்றது. அதற்குள்ளிருந்து ஐம்பது வயது மதிக்கக் கூடிய ஒரு மனிதர் கீழே இறங்கினார். அவருடைய தலைமுடி முழுமையாக நரைத்திருந்தது.
அது வேறு யாருமல்ல- பாலகிருஷ்ணன்தான். நீதிபதியான அவருக்குப் பின்னால் அந்த ஊரின் முக்கியமான மனிதர்கள் பவ்யமாக நின்றிருந்தார்கள். அவர்களிடம் குசலம் விசாரித்தவாறு அவர் மாமரத்தடியை நோக்கி நடந்தார்.
அந்தப் பழைய மாமரம் ஒரு மாம்பழத்தைத் தந்து அவரை வரவேற்றது. அவர் நடந்து செல்லும்போது, அவருக்கு முன்னால் ஒரு மாம்பழம் விழுந்தது.
சிறார்களில் சிலர் அந்த மாம்பழத்தை நோக்கி ஓடினார்கள். ஆனால், அதற்குள் நீதிபதி அதைத் தன் கையில் எடுத்துக்கொண்டு விட்டார். மாம்பழத்தைக் கையில் வைத்துக்கொண்டு அவர் மேலே பார்த்தார். காற்று பட்டு கிளைகள் ஆடிக்கொண்டிருந்தன.