
அந்த வருடத்தின் மழைக்காலம் மிகவும் பயங்கரமானதாக இருந்தது. ஒரு பெரிய வெள்ளப் பெருக்கு உண்டானது. ஒன்றரை மாத காலம் அவன் வரவேயில்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பாப்பி பாலகிருஷ்ணனை எதிர்பார்த்தாள். ஆனால், அவன் வரவில்லை.
வெள்ளம் முழுமையாக வற்றிய பிறகு, பாலன் வீட்டுக்கு வந்தான். அவனுடன் இன்னொரு பையனும் இருந்தான். சனிக்கிழமை முடிந்த பிறகும் அவன் பாப்பியின் வீட்டுக்குச் செல்லவில்லை. அவளுக்கோ அவன் வீட்டுக்குச் செல்வதற்கு நேரமில்லை. ஞாயிற்றுக்கிழமை அவள் அவனுடைய வீட்டுக்குச் சென்றாள். பாலனும் அவனுடைய நண்பனும் அப்போது ஆங்கிலம் படித்துக் கொண்டிருந்தார்கள்.
நடுநிலைப் பள்ளிக்கூடத்தில் நான்கு வருட படிப்பு முடிந்தது. பாலன் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தான். அடுத்த ஓண விடுமுறையில்தான் அவன் திரும்பவும் வந்தான். ஒரு சுமை தூக்கும் தொழிலாளி பெட்டியைத் தூக்கிக் கொண்டு வர, ஒரு நாகரிக தோற்றத்தைக் கொண்ட இளைஞன் கிழக்கு வீட்டுக்குச் செல்வதை பாப்பி பார்த்தாள். சிறிது சீரகம் வாங்க வந்திருப்பதைப்போல் காட்டிக் கொண்டு அவள் அங்கு சென்றாள். அங்கு வந்திருந்தது பாலன்தான். ஆனால், பாப்பியால் ஒரு நிமிடத்திற்கு அவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.
பாலன் அவனுடைய தலை முடியை முழுவதுமாக வெட்டியிருந்தான். க்ராப் வெட்டி தலை வாரியிருந்தான். அவனுடைய முகம் வெளுத்து சிவந்து காணப்பட்டது. இரண்டு மூன்று முகப் பருக்களும் கண்ணில் பட்டன. குரல்கூட முழுமையாக மாறிவிட்டிருந்தது. அவனிடம் செருப்புகள் இருந்தன. துணியாலான குடை இருந்தது. ட்ரங்க் பெட்டிக்குள் புதுமையான பல பொருட்களும் இருந்தன. பாலனுடைய சிரிப்பே அலாதியாக இருந்தது.
“அம்மா எனக்குப் பசிக்குது'' என்று சொல்லியவாறு பாலன் சமையலறைக்குள் நுழைந்தான். அங்கு பாப்பி நின்றிருந்தாள்.
அவள் முழங்கால் வரை இருக்கும் ஒரு கரி பிடித்த துண்டைக் கட்டியிருந்தாள்.
“என்ன பாப்பி?'' பாலன் கேட்டான்.
அவள் பதிலெதுவும் கூறாமல், மவுனமாக இருந்தாள்.
அந்த விடுமுறைக் காலம் முடிந்தது. பாலன் ஆலப்புழைக்குத் திரும்பச் செல்லும் நேரம் வந்தது. பெட்டியை எடுத்துக்கொண்டு அவன் புறப்பட்டான். அந்த மாமரத்திற்குக் கீழே நின்று கொண்டு தன்னை யாரோ அழைப்பதைப்போல் அவன் உணர்ந்தான். அவன் திரும்பி நின்றான். கந்தர்வன் கோவிலுக்கு முன்னாலிருந்த முல்லைப் பந்தலுக்குக் கீழே பாப்பி நின்றிருந்தாள். அவள் கேட்டாள்:
“பாலன், கிளம்பியாச்சா.''
“ஆமா...''
அவன் நடந்தான். பாலனின் மனதிற்குள் சில மென்மையான சலனங்கள் உண்டாயின. அந்த அழைப்பில் வார்த்தைகளால் கூற முடியாத ஏதோவொன்று ஒளிந்திருப்பதை அவனால் உணர முடிந்தது. அந்தக் குரல் அசரீரியைப்போல் அவனுக்குத் தோன்றியது.
அடுத்த நடு கோடை விடுமுறைக்கு பாலன் திரும்பவும் வந்தான். ஆனால், இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே அவன் வீட்டில் இருந்தான். அதற்குப் பிறகு, வடக்கன் பறவூரில் இருக்கும் தன் சகோதரியைப் பார்ப்பதற்காக அவன் சென்று விட்டான்.
பாலன் பள்ளி இறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். ஐந்தாவது ஃபாரத்தில் அந்த வருடம் தேர்ச்சி பெற்றான். ஒரு வருடத்திற்குப் பிறகு அவன் அந்த வருடத்தின் நடு கோடை விடுமுறையில் வீட்டுக்கு வந்தான். பாலனுக்கு அப்போது பதினேழு வயது நடந்து கொண்டிருந்தது.
முன்பைப் போல சமீபவருடங்களில் மாங்காய்கள் காய்க்க வில்லை. நகரத்திலிருந்து வந்த பாலன் ஒரு பனியனை அணிந்துகொண்டு மாலை நேரத்தில் பழைய மாமரத்திற்குக் கீழே காற்று வாங்குவதற்காகப் போய் நிற்பான்.
அங்கு அந்தப் பழைய பாடலை சிறார்கள் பாடிக்கொண்டி ருப்பார்கள்.
“காற்றே வா கடலே வா...''
"மாங்கொட்டை அய்யா” விற்கு புதிய நண்பர்கள் கிடைத்திருந்தார்கள். அந்தச் சிறார்களுடன் இப்போதும் பாப்பி மாம்பழம் விழும்போது ஓடுவது உண்டு. மாமரத்திற்குக் கீழே சற்று தூரத்தில் நின்றவாறு பாலன் மகிழ்ச்சியான அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பான். பாப்பி இப்போதும் ஒரு குழந்தைதான். மாங்காய் கிடைத்தால் அவள் காம்பைக் கிள்ளி மேலே எறிந்தவாறு கூறுவாள்:
“இதை நீ எடுத்துக்கிட்டு இன்னொரு பழுத்த மாம்பழத்தை எனக்குத் தா!''
ஒருநாள் மாலை நேரத்தில் பாலன் மாமரத்திற்குக் கீழே நடந்து கொண்டிருந்தான். சிறார்கள் எல்லாரும் போய் விட்டிருந்தார்கள். ஒரு காற்று வீசியது. எங்கிருந்து என்று தெரியவில்லை. பாப்பி அப்போது அங்கு தோன்றினாள். ஒரு மாம்பழம் விழுந்தது. அதை அவள் எடுத்தாள்.
“பாப்பி! அந்த மாம்பழத்தை இங்கே தா. பார்க்கணும்...''
பாப்பி மாம்பழத்தை அவனிடம் தந்தாள்.
“பாப்பி, உனக்கு நிறைய மாம்பழங்கள் கிடைக்கும்ல?''
“நான் கிடைக்கிற எல்லா மாம்பழங்களையும் கிழக்கு வீட்டுல கொடுத்திடுவேனே!''
“அப்படியா? இன்னைக்குக்கூட நான் மாம்பழப் பச்சடி சாப்பிட்டேன். அது நீ கொடுத்து விட்ட மாம்பழமா?''
“பாலா, நீ வந்த அன்னைக்கு நான் 150 மாம்பழங்கள் கொடுத்தேன். நீ 10-ஆம் தேதி வருவேன்னு அம்மா சொன்னாங்க.''
ஒரு பாட்டை முணுமுணுத்தவாறு அவன் அங்கிருந்து புறப்பட்டான். ஒரு நறுமணம் பாலனிடமிருந்து வந்தது. பாலனின் கையிலிருந்து கைக்குட்டையின் ஓரங்களில் சித்திர வேலைப் பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பாப்பி, பாலனைப் பார்த்தவாறு நின்றிருந்தாள்.
அந்த விடுமுறைக் காலமும் முடிவுக்கு வந்தது. பாலன் பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் மாணவன். அரசாங்கத்தின் உதவிப் பணம் கிடைக்குமென்ற எதிர்பார்ப்புடன் பாலன் படித்துக் கொண்டிருந்தான். ஓணத்திற்கும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் அவன் வீட்டுக்கு வரவில்லை. பொதுத் தேர்வு முடிந்தவுடன் பாலன் வீட்டுக்கு வந்தான்.
மாமரத்திற்குக் கீழே மாலை நேரத்தில் முன்பு பார்த்ததைப்போல அவர்கள் சந்தித்தார்கள். அவள் குளித்து முடித்து தலைமுடியை விரித்து பின்னால் போட்டிருந்தாள். அழகான ஒரு புள்ளிகள் போட்ட புடவையை அணிந்திருந்தாள். பாலன் அவளையே உற்றுப் பார்த்தான். பாப்பி அன்று முதன் முறையாக பாலனுக்கு முன்னால் நின்றிருந்தபோது லேசாக நடுங்கினாள். கந்தர்வன் கோவிலின் மூச்சுக் காற்றைப்போல ஒரு மெல்லிய காற்று வீசியது. கோவிலைச் சுற்றி உள்ள இடத்தில் அந்தக் காற்று ஒரு சிறு ஓசையை உண்டாக்கியது. பாப்பியின் முகம் பிரகாசமாக இருந்தது. பெண்களின் முகத்தை அழகாக ஆக்கக் கூடிய வெட்கத்தின் அடையாளம்- ஒரு பிரகாச மான புன்னகை- அவளுடைய முகத்தில் தெரிந்தது. பாலன் இரண்டு அடிகள் முன்னோக்கி வைத்தான். பாப்பியின் இளமை அவளுடைய மார்பில் ஒரு மாறுபாட்டை உண்டாக்கியிருந்தது. அவளுக்கு பதினெட்டு வயது நடந்து கொண்டிருந்தது.
பாலன் அவளுடைய கையைப் பிடித்து மெதுவாக அழுத்தினான். அவள் தன் முகத்தை உயர்த்தினாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook