மலையாளத்தின் ரத்தம் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6769
மொய்தீன் வேலை செய்த ஹோட்டலின் மேற்பகுதியில் ஒரு குண்டு விழுந்தது. ஹோட்டலில் இருந்த பத்தொன்பது ஆட்களும் வெந்து இறந்துபோய் விட்டார்கள். மொய்தீன் கழிவறையில் இருந்ததால், மரணத்திலிருந்து தப்பித்துவிட்டான்.
"அரிசி இல்லாமற் போகும்போதுதான், மனிதன் இறப்பான்.” இப்படி மனதிற்குள் கூறிக்கொண்டே அவன் ஒரு சுருண்ட இலையை விரித்து அதில் மசாலா சாதத்தை வைத்துக்கட்டி ஸித்தியின் கையில் கொடுத்தான். பைசா 40 சென்ட்டை வாங்கி பாக்கெட்டிற்குள் போட்டான்.
இரவு பத்து மணி வரை அவன் தன்னுடைய வியாபாரத்தை நடத்தினான். அன்று வழக்கத்தைவிட அதிகமாக விற்பனை நடந்தது. 21 டாலர்கள் கிடைத்தன.
அடுப்பிலிருந்த நெருப்பை அணைத்துவிட்டு, கோப்பை, கிண்ணங்கள் எல்லாவற்றையும் வண்டியின் கீழே இருந்த அறையில் வைத்து அடைத்துப் பூட்டிவிட்டு, ஒரு சிகரெட்டை வாயில் வைத்துப் புகைத்துக் கொண்டே அவன் தன்னுடைய இருப்பிடத்தை நோக்கி வண்டியைத் தள்ளிக்கொண்டு நடந்தான். ஹோட்டலுக்குப் பின்னால் வண்டியை நிறுத்திவிட்டு, அவன் தன்னுடைய அறைக்குள் சென்றான்.
தெருவிலிருக்கும் குழாயின் அருகில் சென்று சற்று குளிக்க வேண்டும்- அதுதான் அடுத்த வேலை. மொய்தீன் தான் அணிந்திருந்த லுங்கியையும் பனியனையும் கழற்றிவிட்டு, மேற்துண்டை எடுத்துத் தோளில் இட்டபோது, அருகில் இருந்த நிலத்தில் இருந்து ஒரு ஆரவாரமும் அழுகைச் சத்தமும் அவனுடைய காதுகளில் வந்து விழுந்தன.
மொய்தீன் கவனித்துக் கேட்டான். "அய்யோ... அய்யோ...” என்ற அழுகைச் சத்தம். ஒரு மலையாளியின் குரலைப்போல தோன்றுகிறதே? மொய்தீன் வேகமாக பனியனை எடுத்து அணிந்து கொண்டு மேற்குப் பக்கத்தில் இருந்த நிலத்தை நோக்கிப் பாய்ந்தான்.
போலீஸ்காரர் மஹ்மூத்தின் வீடு அது. பத்து, பதினைந்து ஆட்கள் அந்த வாசலில் குழுமி நின்றிருந்தார்கள். ஒரு மனிதனை அவர்கள் வாசலிலிருந்த தென்னை மரத்துடன் சேர்த்துக் கட்டியிருந்தார்கள். "பஞ்சுரி... பஞ்சுரி...” (திருடன்... திருடன்...) என்று உரத்த குரலில் கூறியவாறு அவர்கள் அவனுடைய பிடறியிலும் முகத்திலும் வழுக்கைத் தலையிலும் பிரம்பால் அடிகளைத் தந்து கொண்டிருந்தார்கள்.
மொய்தீனுக்கு விஷயம் புரிந்துவிட்டது. வேலைக்காரி ஆஸ்ஸாவை இரவு நேரத்தில் பார்ப்பதற்காக வந்திருந்த ஆள் தவறுதலாக வெளியே குதித்தபோது பிடிக்கப்பட்டு விட்டிருக்கிறான். மொய்தீன் தென்னை மரத்திற்கு அருகில் சென்று, அந்த "கட்டப்பட்டிருக்கும் யாரென்று தெரியாத மனிதனின்” முகத்தையே உற்றுப் பார்த்தான். சாயங்காலம் அவனுடைய வண்டிக்கு அருகில் வந்து நின்ற பேண்ட் அணிந்த தடிமனான ஆள்தான். முகத்திலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
“நீங்க யார்?'' -மொய்தீன் மலையாளத்தில் கேட்டான்.
“நான்... கோபால பிள்ளை... அய்யோ... என்னை இவங்க அடிச்சு கொல்றாங்களே... என்னை காப்பாத்துங்க...''
மலையாளியேதான்! மொய்தீனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மலையாளத்தின் ரத்தம் தெறிப்பதைப் பார்த்து அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அய்யோ என்ற அழுகைக் குரல் கண்டத்தோடு கிராமத்திலிருந்து
ஒலிப்பதைப்போல அவனுக்.குத் தோன்றியது. அவன் எல்லாவற்றையும் மறந்துவிட்டான்.
மொய்தீன் காஸியாரின் கையிலிருந்த பிரம்பைப் பிடித்துப் பிடுங்கி முதலில் காஸியாரின் தலையில் ஒரு அடி கொடுத்தான். தொடர்ந்து முன்னால் இருந்தவர்கள் எல்லாரையும் அவன் அடித்து விரட்டினான். போலீஸ்காரர் மஹ்மூத்தின் உடம்பிலும் ஒரு லத்தி சார்ஜ் விழுந்தது. மொய்தீனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. எல்லாரும் தப்பித்து அங்கிருந்து பாய்ந்தோடினார்கள்.
மொய்தீன் கோபால பிள்ளையின் கட்டுக்களை அவிழ்த்து அவனை அழைத்துக்கொண்டு தன்னுடைய அறைக்கு வந்தான். மொய்தீனின் நண்பர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள்.
இனி என்ன செய்வது? பதட்டம் கலந்த ஒரு அமைதி.
மொய்தீன் இனிமேல் அந்தக் கடைவீதியில் இருப்பதற்கு வழியில்லை. குற்றம் செய்த ஒரு காஃபரின் பக்கம் சேர்ந்து கொண்டு கிராமத்தைச் சேர்ந்தவர்களின் தலைகளை அடித்து நொறுக்கிய மொய்தீனின் உயிருக்கு இனிமேல் அங்கு பாதுகாப்பு இல்லை. அவர்கள் அவனை அங்கு இருக்க விடப்போவதில்லை.
“நானும் பிள்ளையும் உலுலங்காத்துக்குப் போகிறோம்.'' மொய்தீன் தன்னுடைய நண்பர்களிடம் கூறினான். “இன்ஷா அல்லா... பிறகு பார்ப்போம்.''
அவர்கள் அவனைத் தடுக்கவில்லை. அங்கிருந்து ஒன்பது மைல் தூரத்தில் உலுலங்காத் கிராமம் இருந்தது. காட்டு வழியில் பயணம் செய்ய வேண்டும். எனினும், கோம்பாக்கில் ஒளிந்து கொண்டிருப்பதைவிட உலுலங்காத்திற்குச் சென்று தப்பித்துக் கொள்வதுதான் நல்லது என்று அவர்கள் முடிவெடுத்தார்கள்.
அன்று நள்ளிரவு நேரத்தில் உலுலங்காத்திற்கு மறைந்து ஓடிய மொய்தீனையும் கோபால பிள்ளையையும் பற்றி அதற்குப் பிறகு இதுவரை யாருக்கும் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. மொய்தீனின் சோற்று வண்டி இன்றும் அந்த ஹோட்டலுக்குப் பின்னால் மழையில் நனைந்து பாசி பிடித்துக் கிடக்கிறது. மொய்தீன் வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்த இடத்தில் இப்போது ஒரு காசர்கோட்டைச் சேர்ந்தவனான அப்துல்லாவின் "நாசிகோரிங்” வியாபாரம் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.
உலுலங்காத்தின் காடுகளில் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் நடத்திய கம்யூனிஸ்ட் வேட்டையில் சிக்கி இறந்தவர்களின் கூட்டத்தில் இரண்டு இந்தியர்களும் இருந்தார்கள் என்ற பத்திரிகைச் செய்தியை அதிகமாக யாரும் கூர்ந்து கவனித்திருக்க மாட்டார்கள். மலேயாவின் காடுகளில் குண்டுகள் பட்டு இறப்பவர்கள் எல்லாரும் கம்யூனிஸ்ட்கள் என்றே எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள்.