மலையாளத்தின் ரத்தம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6769
மதிய நேரம் கடந்தபோது மொய்தீன் வழக்கம்போல தன்னுடைய உந்து வண்டியில் அடுப்பு, வாணலி, அரிசி, மசாலா பொருட்கள், கோழி முட்டைகள், காய்கறிகள் ஆகியவற்றை நிறைத்துக்கொண்டு தெருவின் மூலையை நோக்கிப் புறப்பட்டான். அப்போது அவனுடைய சிந்தனைகள் கிராமத்தையே சுற்றிக் கொண்டிருந்தன. "ஊருக்குப் போகணும்... ஊருக்குப் போகணும்...” அவனுடைய இதயத் துடிப்புகூட அதேபோல முணுமுணுப்பதைப்போல அவனுக்குத் தோன்றியது.
அவன் காய்கறிகளை அறுத்து ஒன்று சேர்த்துக் கொண்டிருந்தான். அப்போது தாழம்பூவின் வாசனையைப்போல ஒரு நறுமணம் அவனுடைய நாசிக்குள் நுழைந்தது. அவன் தலையை உயர்த்திப் பார்த்தான். மைமூணா அருகில் நின்று கொண்டிருந்தாள். அவளுடைய ஆடையில் தேய்க்கப்பட்டிருந்த ஏதோ தாழ்ந்த தரத்தில் இருந்த வாசனை திரவியம்தான் அந்த நறுமணத்தை உண்டாக்கியிருக்கிறது.
அவன் அவளைப் பார்த்ததைப்போல காட்டிக் கொள்ளவில்லை. அவளிடமிருந்து வெளிவந்த தாழம்பூவின் வாசனை அவனை கனோலி வாய்க்காலின் கரைக்கு அழைத்துக் கொண்டு சென்றது. சில குறிப்பிடத்தக்க வாசனைகள் உண்டாக்குகிற நினைவுகளுக்கு மறைந்து போகாத இனிமை இருக்கத்தான் செய்கிறது. கனோலி வாய்க்காலின் கரையில் தாழம்பூக்கள் மலர்ந்து நின்று கொண்டிருக்கும் காலம். அந்த தாழம்பூக்களைப் பறித்துக்கொண்டு போய் அவன் விற்றிருக்கிறான். அவனுடைய உம்மாவின் துணிப் பெட்டியைத் திறக்கும்போதுகூட அந்த தாழம்பூவின் நறுமணம் வருவதுண்டு.
அவன் வாணலியில் நிலக்கடலை என்ணெய்யை ஊற்றி, ஒரு வாத்து முட்டையை உடைத்தான். கெட்டுப்போன முட்டை. அதன் நாற்றம் அவனை மீண்டும் கிராமத்தின் வாய்க்கால் கரைக்கு அழைத்துக்கொண்டு சென்றது. நீரில் அழுகிக் கிடக்கும் தென்னை நாரின் நாற்றமது.
“பிக்கின் பை பை ஸத்துப்ளேட் நாசி கோரிங்.'' (ஒரு ப்ளேட் நாசிகோரிங்கை நல்ல முறையில் தயார் பண்ணிக் கொடு.)
மைமூணாவின் கொஞ்சலும் குழைவும் கொண்ட வார்த்தைகள் மொய்தீனைச் சுய உணர்வுக்குக் கொண்டுவந்தன. அவன் அவளை நோக்கி சிறிதும் சந்தோஷம் அளிக்காத ஒரு பார்வையைச் செலுத்தினான்.
தவிட்டு நிறத்தில் இருந்த ஒரு புதிய சாரோங்கையும், ரோஸ் நிறத்தில் உள்ள ஒரு சட்டையையும் அணிந்து, கையில் ஒரு நீல நிற ஹேண்ட் பேக்கை வைத்தவாறு மாலை நேர சுற்றுக் காக வெளியேறி வந்திருக்கும் மைமூணாவை மொய்தீனுக்கு மிகவும் நன்றாகவே தெரியும். அவள் ஒரு ஜகல். நாசிகோரிங்கை வாங்கி சுவைத்து சாப்பிட்டுவிட்டு, உதட்டை நக்கி விட்டு, கையைத் துடைத்தவாறு, "டுயி நங்யி போலெ காஸி” (பிறகு பைசா தருகிறேன்) என்று கூறிவிட்டு பல தடவைகள் அவள் கிளம்பிச் சென்றிருக்கிறாள். இனிமேல் அவளுடைய தந்திரங்கள் எதுவும் அவனிடம் செல்லுபடியாகாது. அவன் தன் கிராமத்திற்குச் செல்வதற்கான ஏற்பாடு களைச் செய்து கொண்டிருந்தான். வெள்ளை நிற மேலாடையும் தலைத் துணியும் காதில் வளையமும் அணிந்த மலையாள பீபியின் கனவு வயதில் இருக்கும் ஒரு ஓவியம் அவனுடைய இதயத்தில் நிறைந்து நின்று கொண்டிருந்தது. அவளுக்காக அவன் ஒவ்வொரு காசையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். மைணோவின் மயக்கத்தையும் கொஞ்சலையும் கடைக்கண் வெட்டலையும் இடுப்பு குலுக்கலையும் பார்த்து ரசிப்பதற்கு அவனுக்கு இப்போது நேரமில்லை.
“டூ லு காஸி டூயீ.'' (முதலில் காசைத் தா) மொய்தீன் மைமூணாவை நோக்கி கையை நீட்டிக்கொண்டே சொன்னான்.
“நங்யி...'' (பிறகு...) மைமூணா ஒரு மைனா குருவியைப்போல கூறினாள்.
“திட- பீகி பீகி...'' (இல்லை- போ... போ...) அவன் வெறுப்புடன் உறுதியான குரலில் கூறினான்.
மொய்தீனின் நடவடிக்கை அவளை ஆச்சரியப்படச் செய்தது. இந்த காகத்திற்கு என்ன ஆனது?
மொய்தீன் வெங்காயத்தை அறுத்து ஒன்று சேர்த்துக் கொண்டிருந்தான் மசாலா சாதத்தில் சேர்ப்பதற்காக. சற்று தலையை உயர்த்திப் பார்த்தபோது, சிறிது தூரத்தில் ஆஸ்ஸா வந்து கொண்டிருந்தாள். "மாத்தா மாத்த” (போலீஸ்காரர்) மஹ்மூத்தின் வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் ஆஸ்ஸாவும் இன்னொரு ஜகல்தான். "நாசிகோரிங்'கை வாங்கி சாப்பிட்டு விட்டு, ஒரு கவர்ச்சியான புன்சிரிப்புடன் "மாரிருமா இனி மாலம்”(இன்று இரவு வீட்டிற்கு வா) என்று அவள் நேற்று அவனிடம் கூறியிருந்தாள்.
அந்த நாற்றமெடுத்த வாத்து முட்டையை ஆஸ்ஸாவின் முகத்தை நோக்கி எறிய வேண்டும்போல மொய்தீனுக்குத் தோன்றியது. மொய்தீனின் முகத்தில் தெரிந்த கோபத்தின் அடையாளத்தைப் பார்த்த ஆஸ்ஸா அந்தப் பக்கம் வராமல் வேறொரு பாதையில் திரும்பினாள். என்னவோ முணுமுணுத்துக் கொண்டே மைமூணாவும் அங்கிருந்து கிளம்பினாள்.
கறுத்த நிறத்தில் இருந்த முக்கால் பேண்ட்டும் அரைக்கை சட்டையும் அணிந்து தோளில் நீளமான பையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்த ஒரு சீனப் பெண் மொய்தீனின் "நாசிகோரிங்” கை வாங்கிக் கொண்டு சென்றாள்.
பள்ளிக்கூட ஆசிரியர் அபூபக்கரும் போலீஸ்காரர் மஹ்மூத்தின் மூத்த மகள் ஸித்தியும்- அவர்களுடன் கலபலா என்று சத்தம் உண்டாக்கியவாறு அவளுடைய நான்கு தங்கைகளும் "நாசிகோரிங்” வாங்குவதற்காக வண்டிக்கு முன்னால் வந்து நின்று கொண்டிருந்தார்கள். மொய்தீனின் வியாபாரத்திற்கு கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.
ஒரு பேண்ட் அணிந்த தடிமனான மனிதன் வண்டிக்கு முன்னால் வந்து நின்றான். மொய்தீன் அலட்சியமாக அவனைச் சிறிது நேரம் பார்த்தான். முகத்தின் சாயலைப் பார்த்தால் ஒரு மலையாளியைப் போல அவன் தோன்றினான். எனினும், மொய்தீன் எதுவும் கேட்கவில்லை. கோலாலம்பூரில் இருந்து வந்திருக்கக் கூடிய ஆளாக இருக்க வேண்டும்- மொய்தீன் மனதில் நினைத்தான். சிறிது நேரம் கடந்ததும், அந்த தடிமனான மனிதன் அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டான். ஒரு விமானத்தின் சத்தம் வானத்தில் கேட்டது. ஆட்கள் மேல் நோக்கிப் பார்த்தார்கள். மொய்தீனும். அந்த விமானம் உலுலங்காத்தின் காடுகளில் இருக்கும் கம்யூனிஸ்ட் கூடாரங்களைத் தேடிப் போய்க்கொண்டிருக்கிறது என்பது மொய்தீனுக்குப் புரிந்துவிட்டது. உலுலங்காத்தின் காடுகளில் கம்யூனிஸ்ட்கள் மறைந்து இருக்கிறார்கள் என்ற செய்தி கோம்பாக்கில் சில நாட்களாகவே பரவிவிட்டிருந்தது.
கோம்பாக்கின் காஸியாரும் நாசிகோரிங் வாங்குவதற்காக வந்தார். கிராமத்தில் உள்ள எல்லாரையும் மொய்தீனுக்கு நன்கு தெரியும். அவனுடைய நாசிகோரிங்கை ஒவ்வொரு வீடாக எடுத்துச் சென்று விற்க வேண்டியதில்லை. தேவைப்படுபவர்கள் அவனைத் தேடி அவனுடைய இடத்திற்கே வர ஆரம்பித்திருந்தார்கள்.
விமானம் அங்கு சுற்றிச் சுற்றிப் பறந்து கொண்டிருந்தது. “உலுலங்காத்தில் உள்ள காடுகளில் இன்று இரவு அவர்கள் குண்டுகள் போடுவதைக் கேட்கலாம்'' ஸித்தி தன் தங்கைகளிடம் கூறினாள்.
குண்டு போடும் செய்தியைக் கேட்டதும், மொய்தீனுக்கு போர்க்காலம் பற்றிய நினைவு வந்தது. அன்று புகைவண்டி ஒர்க் ஷாப் இருந்த செம்துல் பகுதியில் ஜப்பான்காரர்கள் ஆயிரக்கணக்கான குண்டுகளைப் போட்டார்கள்.