வனவாசம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5669
ஆசிரியரால் அதை நம்ப முடியவில்லை.
பாட புத்தகம் எங்கே?
கணக்கு புத்தகம் எங்கே?
வரலாறு புத்தகம் எங்கே?
பவுண்ட் புத்தகம்....?
அவர் வேறு சில புத்தகங்களின் பெயர்ளையும் கூறுவது கேட்டது.
சிறுவன் தலையைக் குனிந்தவாறு நின்றிருந்தான்.
அவனுடைய கையில் ஒரு சிலேட்டும் ஒரு பழைய நோட்டு புத்தகமும் மட்டுமே இருந்தன.
ஆசிரியர் அவனுடைய கையிலிருந்து அந்த நோட்டு புத்தகத்தை வாங்கி பார்த்தார்.
உடனடியாக அவருடைய முகத்தைப் பார்த்தேன்.
'என்ன? இது என்ன காப்பி புத்தகம்? நான் குறிப்பிட்டு சொன்னேன்ல.... காப்பி எழுதக் கூடிய புத்தகம், கோடு போட்ட புத்தகமா இருக்கணும்னு?'
அவர் சிறுவனின் பழைய நோட்டு புத்தகத்தை உயர்த்தி, வகுப்பறை முழுவதும் காட்டினார்.
சிறுவன் எதுவுமே கூறாமல் தலையைக் குனிந்து கொண்டு நின்றிருந்தான்.
பிறகு..... அவர் சிறுவன் எழுதியதை வாசிக்க ஆரம்பித்தார். ஆனால், அதிகமாக எதையும் வாசிக்கவில்லை.
அவர் வெறுப்புடன் கூறினார்.'
'நீ என்ன எழுதி வச்சிருக்கே? ராமன் பணத்திற்குச் சென்றார் என்றா? பணமா? அப்படின்னா என்ன?
சிறுவன் எதுவுமே கூறவில்லை.
பொதுவாக அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் மற்ற குழந்தைகள் சத்தம் போட்டு சிரித்திருக்க வேண்டும். ஆனால், இங்கு அது நடக்கவில்லை.
சிறுவனின் கையில் புத்தகத்தைக் கொடுத்து விட்டு, ஆசிரியர் கூறினார்:
'நீ புறப்படு.... வீட்டிற்குப் போ...... இனி எல்லா புத்தகங்களுடனும் பள்ளிக் கூடத்திற்கு வந்தால் போதும்.'
சிறுவன் சந்தேகத்துடன் நின்றபோது, அவர் உறுதியான குரலில் கூறினார்.'
'ம் ..... புறப்படு'.
அதற்குப் பிறகு சிறுவன் அங்கு நிற்கவில்லை.
அவன் வாசலுக்கு வந்தபோது, நான் உடனடியாக தூணுக்குப் பின்னால் மறைந்து கொண்டேன்.
அவன் காலையில் வீட்டிலிருந்து வரும்போது என்ன சாப்பிட்டிருப்பான்? இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால்..... ஏதாவது சாப்பிட்டிருப்பானா? இப்போது அவனுடைய வீட்டில் அவனுடைய அப்பாவும் அம்மாவும் இருப்பார்களா? அவன் அவர்களிடம் என்ன கூறுவான்? - இவற்றையெல்லாம் நினைத்தபோது எனக்கு ஏதோ பயம் தோன்றியது.
* * *
அவன் என்னைப் பார்க்க வேண்டாம் என்று நினைத்தேன். அவனுடைய முகத்தைப் பார்ப்பதற்கு எனக்கு சக்தி இல்லை.
ஆனால், அதற்கு தேவையில்லாமல் போய் விட்டது. அவன் என்னை என்றல்ல - யாரையுமே பார்க்கவில்லை. ஒரு நிமிட நேரம் அவன் இருண்ட ஆகாயத்தைப் பார்த்தவாறு வாசலின் ஓரத்தில் நின்றான். பிறகு பொத்தான் இல்லாத அவனுடைய அரைக்கால் சட்டையை வேட்டியை அணிவதைப் போல இடுப்பில் இறுக்க நிறுத்தி விட்டு, சிலேட்டையும் நோட்டு புத்தகத்தையும் மார்போடு சேர்த்து வைத்தவாறு, மழையில் இறங்கி நடந்தான்.
அப்போது கறுத்து ஈரமான ஆகாயமும் அவனும் ஒன்றாகி விட்டார்கள்.
பிறகு நானும் அங்கே நிற்கவில்லை.