குளிர்பானம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4524
அஹம்மது சிரிப்பை அடக்கிக் கொண்டே காசை வாங்கி, குளிர்பானத்தைத் தயார் பண்ணுவதற்கு மத்தியில் கேட்டான்: ‘அடியே! நேற்று குளிர்பானம் வாங்கியதற்கு காசு எங்கே?’
‘அதை நாளைக்கு தர்றேன். இப்போ..... ஆறு காசுக்கு பாத்திரம் முழுக்க தரணும்.’
அவன் ஒரு கண்ணாடி டம்ளர் முழுவதும் நிறைத்து குளிர்பானத்தை ஜானுவிற்குக் கொடுத்தான். அவள் அதை பருகி விட்டு, அஹம்மதுவிடம் விடை கூட கூறாமல் போவதற்கு முயன்றாள். ஆனால், செல்வதற்கு அவளுக்கு ஒரு சங்கடம்! வீட்டிற்குச் சென்ற பிறகு, ஆறு காசுகளைச் செலவழித்ததற்கு அம்மா அவளை அடிப்பாள். அம்மாவிடம் என்ன பொய் கூறுவது? அவள் சிந்தித்தவாறு நின்று கொண்டிருந்தாள். அஹம்மதுவிடம் காசைத் திரும்ப கேட்பதற்கு அவளுக்கு தைரியமில்லை. அந்த நீரை வாங்கி பருகியிருக்கக் கூடாது என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால், இனி என்ன செய்வது? குடித்தாகி விட்டது.......... காசு கொடுத்தாகி விட்டது.
ஜானுவின் கண்கள் நிறைந்து கன்னங்களின் வழியாக வழிய ஆரம்பித்தது. சிரிப்பை அடக்கக் கூடிய அஹம்மதுவின் முயற்சி வீணானது. அவன் சத்தம் போட்டு சிரித்துக் கொண்டே கேட்டான்: ‘நீ ஏன் அழறே?’
ஜானு தேம்பித் தேம்பி அழுது கொண்டே கூறினாள் : ‘அம்மா அடிப்பாங்க.....’
அஹம்மது ஆறு காசுகளை எடுத்து அவளின் கையில் கொடுத்து விட்டு கூறினான்: ‘காசைக் கொண்டு போ. எனக்கு காசு வேண்டாம். புரியுதா? தினமும் மதிய வேளையில் இங்கே வா. குளிர்பானம் தர்றேன். ம்..... அழாமல் போ........’
ஜானு கண்ணீரைத் துடைத்து விட்டு, சிரித்தாள். அவள் நன்றியுடன் திரும்பிப் பார்த்து..... பார்த்துக் கொண்டே நடந்து மறையவும் செய்தாள்.
மறுநாளிலிருந்து அவன் தினமும் மதிய வேளையில் அஹம்மதுவின் மேஜைக்கு அருகில் வருவாள். அவன் அவளுக்கு ஒரு கண்ணாடி டம்ளர் குளிர்பானத்தை வழக்கமாக தருவான். அவள் அதைப் பருகி விட்டு, அஹம்மதுவின் மரப் பெட்டியின் மீது அமர்ந்து ஓய்வெடுப்பாள். சில நேரங்களில் அவள் அஹம்மதுவின் கடையைப் பெருக்கிச் சுத்தப்படுத்துவாள். பீடி வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பாள்.
ஒரு நாள் அவள் வந்தபோது அஹம்மதுவிற்கு ஒரு இலைப் பொட்டலத்தைக் கொண்டு வந்து கொடுத்தாள். அதில் கொஞ்சம் பலாப் பழங்கள் இருந்தன. அவளுக்குச் சாப்பிட்டுவதற்காக கொடுத்தவற்றை அவள் அஹம்மதுவிற்குக் கொடுப்பதற்காக பத்திரப்படுத்தி வைத்திருந்தாள். பாலை எடுத்துக் கொண்டு நகரத்திற்குப் புறப்பட்டபோது, அம்மாவிற்குத் தெரியாமல் அவள் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு வந்து விட்டாள். அஹம்மது சந்தோஷத்துடன் அவளுடைய பரிசை ஏற்றுக் கொண்டான். அன்றிலிருந்து அவள் வரும்போதெல்லாம் எதையாவது கொண்டு வருவாள் – அஹம்மதுவிற்குக் கொடுப்பதற்காக. எதுவும் கிடைக்காத நாளன்று அவளுக்கு மிகவும் கவலையாக இருக்கும்.
இப்படியே நாட்களும் வாரங்களும் கடந்தோடின. கோடை காலம் முடிந்தது. மழைக் காலம் ஆரம்பமானது. பிறகு அஹம்மதுவின் குளிர்பானத்திற்கு தேவையில்லாத சூழ்நிலை உண்டானது. வியாபாரத்தை நிறுத்தி விட்டு, வீட்டிற்குச் செல்ல அவன் முடிவு செய்தான்.
அஹம்மதுவின் வீடு நகரத்திலிருந்து நீண்ட தூரத்தில் ஒரு கிராமத்தில் இருந்தது. கிட்டத்தட்ட முப்பத்தைந்து வயது இருக்கும். கோடைக் காலம் வரும் வரை அவனுடைய தொழில் விவசாயம்தான். கோடைக் காலம் வந்து விட்டால், மனைவியையும் குழந்தைகளையும் தந்தையின் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு, அவன் குளிர்பான வியாபாரத்திற்காக நகரத்திற்குச் சென்று விடுவான்.
ஒரு நாள் ஜானு எப்போதும் போல வந்தபோது, மறுநாள் தான் வியாபாரத்தை நிறுத்தி விட்டு, வீட்டிற்குச் செல்லப் போவதாக அஹம்மது அவளிடம் கூறினான். ஜானு எதுவும் கூறவில்லை. அவள் அன்று நீண்ட நேரம் அஹம்மதுவின் மரப் பெட்டியின் மீது அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளுடைய மனதில் ஏதோ ஒரு கவலை! அது என்ன என்று அவளுக்கே தெரியவில்லை. அவளுடைய மனதிலிருந்து ஏதோ ஒரு அறிமுகமற்ற மனிதன் அவளிடம், அவளால் புரிந்து கொள்ள முடியாத மொழியில் பேசிக் கொண்டிருந்தான். அஹம்மது அவளிடம் பலவற்றையும் கேட்டான். அவை எதற்கும் அவள் பதில் கூறவில்லை. அவள் அமைதியாக எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள். இடையில் அவ்வப்போது அவள் அஹம்மதுவின் முகத்தையே பார்ப்பாள். அவன் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தான்.
இறுதியில் போவதற்காக ஜானு எழுந்தாள். அஹம்மதுவின் முகத்தைப் பார்ப்பதற்கான தைரியம் அவளுக்கு இல்லை. அமைதியான குரலில் அவள் கேட்டாள்: ‘நாளைக்கு எப்போ போறீங்க?’
ஜானுவின் இந்த உணர்ச்சி வேறுபாடு அஹம்மதுவை ஆச்சரியப்பட வைத்தது. அவன் அமைதியான குரலில் கூறினான்: ‘நாளை காலையில் புறப்படுவேன் .... நீ வருவதற்கு முன்னால் ....‘
ஜானு எதுவும் கூறாமல் அங்கிருந்து கிளம்பினாள். மறுநாள் அதிகாலையில் அஹம்மது வீட்டிற்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை முழுமை செய்தான், மேஜையை ஒரு நண்பனின் கடையில் ஒப்படைத்தான். புட்டிகளையும் கண்ணாடி டம்ளர்களையும் மரப் பெட்டியில் போட்டு அடைத்தான். அதுவரை இருந்த அவனுடைய சம்பாத்தியத்தை எண்ணிச் சரி பார்த்து விட்டு திரும்பிப் பார்த்தபோது, அவனுக்கு அருகில் ஜானு நின்று கொண்டிருந்தாள்! ஏதோ ஒரு அமைதியற்ற நிலை அவளை பாதித்திருந்தது. இனிமேல் குளிர்பானம் கிடைக்காது என்ற நினைப்பில்தான் அவள் கவலையுடன் நின்று கொண்டிருக்கிறாள் என்றுதான் அஹம்மது நினைத்துக் கொண்டிருந்தான். அவன் இரண்டு அணா காசை எடுத்து அவளை நோக்கி நீட்டிக் கொண்டே கூறினான்: ஜானு..... நான் போய் வரட்டுமா? இந்தா..... இதை நீ வச்சுக்கோ.’
ஜானு கோபத்துடன் அவனுடைய கையைத் தட்டி விட்டாள். அணா தெறித்து தூரத்தில் போய் விழுந்தது. அஹம்மது குனிந்து, அவளுடைய முகத்தையே பார்த்தான். அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவன் தெறித்து விழுந்த இரண்டணா நாணயத்தை எடுத்துக் கொண்டு வந்து, வேறு ஒரு இரண்டணா நாணயத்தையும் சேர்த்து அவளை நோக்கி நீட்டினான். அதற்குப் பிறகும் அவள் அவனுடைய கையை ஒரு முறை தட்டி விட்டாள். உடனடியாக அவன் கையை இறுக வைத்துக் கொண்டதால், அணா தெறித்து விழவில்லை. அவன் கேட்டான். ‘நீ ஏன் அழறே?’ அவள் பதில் கூறவில்லை.
அஹம்மதுவிற்கு செல்வதற்கான நேரம் வந்து விட்டது. மதிய வேளையில் வீட்டிற்குப் போய் சேர வேண்டுமென்றால், அவன் உடனடியாக புறப்பட வேண்டும். அவன் மரப் பெட்டியை எடுத்து தலையில் வைத்தான். ஜானுவிடம் இன்னொரு முறை விடை கூறி விட்டு நடக்க ஆரம்பித்தான்.
ஜானு கண்ணீரைத் துடைத்து விட்டு, அஹம்மது செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அவன் சிறிது தூரம் நடந்த பிறகு, திரும்பிப் பார்த்தான். ஜானு அங்கேயே நின்று கொண்டிருந்தாள். அவன் தெருவின் திருப்பத்தை அடைந்ததும், மீண்டும் திரும்பிப் பார்த்தான். அப்போதும் ஜானு அங்கேயே அவனைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள்.
அவன் தெருவில் திரும்பி மறைந்தான். ஜானு ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள்.
அதற்குப் பிறகும் ஜானு பால் விற்பதற்காக தினமும் நகரத்திற்கு வருவாள். அந்தத் தெருவை அடைந்ததும், அஹம்மதுவின் குளிர்பானம் விற்பனை செய்யப்படும் இடத்தைப் பார்த்தவாறு அவள் சிறிது நேரம் அப்படியே நின்று கொண்டிருப்பது என்பது வழக்கமாக நடைபெறும் ஒரு செயலாக இருந்தது.