குளிர்பானம்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4524
குளிர்பானம்
பி.கேசவதேவ்
தமிழில் : சுரா
குளிர்பானம் ... குளிர்பானம் .....’ தெருவின் ஒரு ஒடுங்கிய மூலையிலிருந்து தொடர்ந்து புறப்பட்டுக் கொண்டிருந்த அந்த குரல், சுட்டெரித்துக் கொண்டிருந்த வெயிலில் வியர்வை ஒழுக நடந்து கொண்டிருந்த ஜானுவை அந்தப் பக்கமாக ஈர்த்தது. சர்பத் நிறைக்கப்பட்டிருந்த சில புட்டிகளும் அந்த புட்டியின் வாய்ப் பகுதியில் ஒவ்வொரு எலுமிச்சம் பழமும் நான்கைந்து கண்ணாடி டம்ளர்களும் வரிசையாக வைக்கப்பட்டிருந்த ஒரு மேஜைக்குப் பின்னால் நின்றவாறு அஹம்மது கூறிக் கொண்டிருந்தான். !ஹாய்! ஹாய்! முதல் தரமான குளிர்பானம் .... ஒரு டம்ளர் குடித்து விட்டுச் செல்லுங்கள். குடிச்சிட்டுப் போங்க.. குளிர்பானம்.....குளிர்பானம்.....’
ஜானு பித்தளைப் பாத்திரத்தை இடுப்பில் வைத்தவாறு மேஜைக்கு அருகில் சென்று ஈர மண்ணில் மிதித்துக் கொண்டு நின்றிருந்தாள். அவள் அந்த புட்டிகளையும் அவற்றின் வாய்ப் பகுதியிலிருந்த எலுமிச்சம் பழத்தையும் மேஜைக்குக் கீழே ஒரு மண் பானையிலிருந்த சுத்தமான நீரையும் ஆவலுடன் பார்த்தாள். காய்ந்து வறண்டு போன தொண்டையில் ஒரு துளி - அந்த நீர் (குளிர்பானம் என்று கூறுவதற்கு தெரியவில்லை).... அதை பருகுவதற்கு அந்தச் சிறுமிக்கு தடுக்க முடியாத அளவிற்கு ஆர்வம் இருந்தது.
அஹம்மதின் சொற்பொழிவு தொடர்ந்து கொண்டிருந்தது: ‘குளிர்பானம்.... குளிர்பானம்..... வாய்க்குள் ஊற்றினால், தலையிலிருந்து பாதம் வரை குளிர்ச்சியாக இருக்கும். ஒரு டம்ளர் குடிச்சிட்டுப் போங்க.... குடிச்சிட்டுப் போங்க.’
தலையில் ஒரு ‘சும்மாடும்’ கையில் ஒரு பெரிய கூடையுமாக வந்த ஒரு சுமை தூக்கும் மனிதன் மேஜையின் அருகில் வந்து ‘ஒரு டம்ளர்’ என்று கட்டளை பிறப்பித்தான். அஹம்மது சொற்பொழிவை நிறுத்தாமல், மிகவும் வேகமாக அவனுடைய குளிர்பானத்தைத் தயார் பண்ண ஆரம்பித்தான். அவன் துணிக்குக் கீழேயிருந்து கத்தியை எடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை அறுத்தபோது, ஜானுவின் பார்வைகள் அந்த கத்தியைத் தாண்டி எலுமிச்சம் பழத்திற்குள் நுழைந்தன. அவன் எலுமிச்சம்பழ நீரை டம்ளரில் ஊற்றினான். அவன் புட்டியிலிருந்து இரண்டு கரண்டி சர்பத்தை டம்ளரில் ஊற்றிய போது, அவள் மேஜையுடன் சேர்ந்து நின்று கொண்டிருந்தாள். அவன் மேஜைக்குக் கீழேயிருந்து ஒரு தகரப் பாத்திரத்தில் சிறிது நீரை எடுத்து டம்ளருக்குள் தூக்கி ஊற்றிய போது, அவளுடைய ஆர்வம் கட்டுப்பாட்டை விட்டு வெளியே குதித்தது. ‘கொஞ்சம் எனக்கு தருவீங்களா?’
அஹம்மது தமாஷான ஒரு சிரிப்புடன் அவளுடைய முகத்தையே சற்று பார்த்தான். அவனுடைய குளிர்பானத்தை சுமை தூக்கும் மனிதனின் கையில் கொடுத்து விட்டு, அவன் மீண்டும் அவளைப் பார்த்து சிரித்தான். அந்த சுமை தூக்கும் மனிதனின் தொண்டைக்குள் நீர் அப்படியே இறங்கிச் செல்வதைப் பார்த்தவாறு ஜானு கேட்டாள்.
‘அதற்கு என்ன விலை?’
அஹம்மதுவிற்கு இரக்கம் உண்டானது. அவன் கேட்டான்! ‘மகளே ...... உன் கையில் எவ்வளவு காசு இருக்கு?’
ஜானு தன்னுடைய மடியைப் பிடித்தவாறு கூறினாள்: ‘என் கையில் பத்து அணா இருக்கு. ஐந்து நாழி பால் விற்றது......’
சுமை தூக்கும் மனிதன் நீட்டிய கண்ணாடி டம்ளரையும், காசையும் வாங்கியவாறு அஹம்மது கூறினான்: ‘அப்படின்னா..... ஆறு காசு எடு. ஒரு டம்ளர் குளிர்பானம் தர்றேன்.
‘இதுல இருந்து காசை எடுத்தால், என் அம்மா அடிப்பாங்க.’
அஹம்மது ஜானு கூறியதைப் போலவே கூறினான்: ‘காசு வாங்காமல் குளிர்பானம் தந்தால், என் வாப்பா அடிப்பார்.’
‘உங்களுடைய வாப்பா பார்க்கவில்லையே?‘
‘அந்த மடியிலிருந்து காசை எடுத்தால், உன் அம்மா பார்க்க மாட்டாங்க.’
‘அங்கே போன பிறகு, அம்மா எண்ணிப் பார்ப்பாங்க.’
‘இங்கே வர்றப்போ, வாப்பா எண்ணிப் பார்த்தால் ......?’
‘எனக்கு கொஞ்சம் போதும் ... தாகமா இருக்குறதாலதானே?’
‘அப்படின்னா...... உனக்கு பச்சைத் தண்ணி தர்றேன்.’
புட்டியைச் சுட்டிக் காட்டியவாறு ஜானு கூறினாள்: ‘கொஞ்சம் அதையும் சேர்த்து ஊற்றினால் போதும்.’
அஹம்மதுவிற்கு இரக்கம் உண்டானது. அவன் சிறிது குளிர்பானத்தைத் தயாரித்து ஜானுவிற்குக் கொடுத்தான். அவள் ஒரு புன்னகையுடன் அதை வாங்கி பருகினாள். கண்ணாடி டம்ளரைத் திரும்ப கொடுத்து விட்டு அவள் கூறினாள்: ‘எனக்கு அப்பா எப்போதாவது காசு தந்தால், உங்களுக்கு தர்றேன்......தெரியுதா?’
அஹம்மது கருணை மனதுடன் கூறினான்! ‘இதற்கு காசு தர வேண்டாம். உன் வீடு எங்கே இருக்கு?’
‘அதற்கு இங்கேயிருந்து தூரமா போகணும்.’
‘நீ தினமும் பால் விற்பதற்கு வருவாயா?’
‘ம் .... தினமும் வருவேன். லாட்டரிச் சீட்டுல பணம் கிடைச்சப்போ, அப்பா வாங்கிய பசு ஐந்து நாழி பால் தரும். அதை விற்று விட்டு வீட்டிற்குப் போறப்போ, சாயங்காலம் ஆயிடும்.’
‘அப்படின்னா ..... நீ நிற்க வேண்டாம். சீக்கிரம் போ.’
ஜானு நன்றியுடன் அஹம்மதுவைச் சற்று பார்த்து விட்டு, வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்.
* * * *
ஜானுவிற்கு பதின்மூன்று வயதுதான். நகரத்திற்கு வெளியே கிராமத்திலிருக்கும் ஒரு விவசாயத் தொழிலாளியின் ஒரே மகள் அவள். அதிகாலையில் கொஞ்சம் பழைய கஞ்சியை குடித்து விட்டு, அவள் பால் விற்பதற்காக நகரத்திற்குப் புறப்படுவாள். சாயங்காலம் ஆனதும், அவள் திரும்பி வருவாள். பால் விற்று கிடைக்கும் காசிலிருந்து ஒரு காசை எடுத்தால் கூட அவளுடைய அம்மா அடிப்பாள். மதிய வேளையில் ஏதாவது கடையிலோ வீட்டிலோ ஏறி கொஞ்சம் பச்சைத் தண்ணீரைக் குடித்து விட்டு, அவள் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் வெயிலில் வீட்டிற்கு வருவாள்.
அஹம்மது கொடுத்த குளிர்பானம் அவளுக்கு மிகவும் சுவையான ஒரு விருந்தைப் போல இருந்தது. அப்படிப்பட்ட ஒரு குளிர்பானத்தை அவள் அதுவரை குடித்ததே இல்லை. அதன் சுவையை மனதில் நினைத்துக் கொண்டே அவள் வீட்டிற்குச் சென்றாள். வீட்டிற்குச் சென்றவுடன் இனிப்பு நிறைந்த அந்த நீரைக் குடித்த கதையை அவள் அம்மாவிடம் கூறினாள். மறுநாள் அதிகாலையில் அவள் அந்த நீரின் சுவையை நினைத்துக் கொண்டே கண் விழித்தாள், பழைய கஞ்சியைக் குடித்து விட்டு, பால் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அவள் வேகமாக நகரத்தை நோக்கி நடந்தாள்.
பால் விற்பனை முடிந்து, ஜானு தெருவின் அந்த ஒடுங்கிய மூலையை அடைந்தாள். அஹம்மதுவின் சொற்பொழிவு அவளுக்குக் கேட்டது: ‘குளிர்பானம் ... குளிர்பானம் ..... பருகி விட்டுப் போங்க.’
ஜானு மேஜையின் அருகில் சென்று சற்று சிரித்தாள். அஹம்மது முந்தைய நாள் தான் அவளுடன் உரையாடியதைப் பற்றி எதுவும் காட்டிக் கொள்ளாமால், தன்னுடைய சொற்பொழிவைத் தொடர்ந்து கொண்டிருந்தான்:
சிறிது நேரம் ஜானு அவனுடைய முகத்தையே பார்த்தவாறு நின்று கொண்டிருந்து விட்டு, தன் மடியிலிருந்து ஆறு காசுகளை எடுத்து நீட்டியவாறு மிடுக்குடன் கூறினாள்: ‘இதோ ஆறு காசு ..... ஒரு பாத்திரம் முழுக்க தரணும்.’