பெண் விரிவுரையாளர் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4828
இவ்வாறு சில நாட்கள் கடந்ததும், ஆண் விரிவுரையாளர்களும் திருமதி.சவுதரிக்கு எதிராக ஒரு 'ஜாய்ன்ட் டிஃபன்ஸ்' அமைத்தார்கள்.
ஆனால், திருமதி.சவுதரி முன்பு இருந்ததைப் போலவே எதிலும் ஆர்வம் காட்டாமல் இருந்தாள். மவுனமாக ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து எதையாவது வாசித்துக் கொண்டிருப்பாள்.
ஆனால், மாணவர்களுக்கு அவளை மிகவும் பிடித்தது. முதலில் பின்னாலிருந்த பெஞ்ச்களில் அமர்ந்திருந்த இரண்டு மூன்று மாணவர்கள் குறும்புத் தனங்களை வெளிப்படுத்த முயன்றார்கள். அதற்குப் பிறகும் அவள் முழுமையான சம நிலை மனதுடன் சொன்னாள்: 'பாடம் சொல்லித் தரும்போது நான் பாடத்தில் மட்டுமே கவனம் செலுத்துவேன். மற்றவர்களை கவனமாக இருக்க வைக்கவும் செய்வேன். இனிமேல் யாருக்காவது என்னிடம் விளையாட வேண்டும், தமாஷாக பேச வேண்டும் என்று நினைத்தால் பீரியட் முடிந்த பிறகு, வகுப்பறைக்கு வெளியில் வைத்து பார்ப்போம்.' அதைக் கேட்டவுடன், எல்லோரும் அடங்கி உட்கார்ந்து விட்டார்கள்.
அது தவிர, திருமதி.சவுதரியின் கூர்மையான அறிவு காரணமாக எல்லோரும் அவளை விரும்பினார்கள். இதுவரை இன்னொரு ஆசிரியையை இந்த அளவிற்கு மதித்ததில்லை. அவள் இல்லாத நேரத்திலும், அவளைப் பற்றி கிண்டல் பண்ணிக்கூட பேசுவதில்லை. இன்னும் சொல்லப் போனால் - பீரியட் இல்லாத வேளையிலும் திருமதி.சவுதரியைத் தேடி 'ஸ்டாஃப் ரூமிற்கு' மாணவர்கள் தங்களுடைய பிரச்னைகளுடன் வந்து கொண்டிருந்தார்கள்.
வேலையில் மிகுந்த ஈடுபாட்டுடன் அவள் இவ்வாறு இருப்பதைப் பார்த்து, மற்ற விரிவுரையாளர்களுக்கு அவள் மீது பொறாமை உண்டானது.
இப்படியே பல நாட்கள் கடந்து சென்றன.
ஆனால், சிறிதும் எதிர்பாராமல் எல்லோரின் முகங்களும் பிரகாசமாயின. திருமதி. பட்நாகர் சூடான தகவலுடன் வந்திருந்தாள்... திருமதி.சவுதரியை அவளுடைய கணவர் ஒதுக்கி விட்டார். அவளுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இப்போது தனியாகத்தான் வசித்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய மோசமான குணத்தால்தான் தான் அவளை வேண்டாம் என்று ஒதுக்கியதாக அவளுடைய கணவர் மற்றவர்களிடம் கூறியிருக்கிறார்.
ஏழு கடல்களையும் தாண்டி ஏதோ புதிய தீவைக் கைப்பற்றியதைப் போல திருமதி. பட்நாகர் வந்தாள். 'யாரிடமும் சொல்லாதீங்க...' என்ற முன்னுரையுடன் அவள் தன்னிடமிருந்த ரகசியத்தை மெதுவான குரலில் கூறினாள். நடக்க வேண்டியதுதான் நடந்தது. ஒரே நொடியில் அந்தச் செய்தி காட்டுத் தீயைப் போல எல்லோரிடமும் போய்ச் சேர்ந்தது.
செல்வி.துபே தாழ்ந்த குரலில் கூறினாள்: 'செய்தி பொய்யா என்பதைப் பற்றி உறுதியில்லை. எந்த ஆணாக இருந்தாலும், பெண்ணிடம் அநியாயமாக நடக்கும்போது, அதை மறைப்பதற்காக 'மோசமான குணம்' என்ற காரணத்தைக் கூறுவார்கள்.'
ஆனால், ஏழு கடல்களைத் தாண்டிக் கொண்டு வந்த தன்னுடைய அற்புத செய்தி இப்படி நிராகரிக்கப்பட்டது திருமதி. பட்நாகருக்குப் பிடிக்கவில்லை. அவள் கூறினாள்: 'இது அப்படிப்பட்டதல்ல. எல்லோரும் இதைத்தான் கூறுகிறார்கள். தூதர்களின் கருத்து, கடவுளின் அங்கீகாரம்...'
'உண்மை...'- திருமதி. பாண்டே சுவாரசியமான அந்தச் செய்தியின் சுவாரசியத்தைக் காப்பாற்றுவதற்காக மனப்பூர்வமாக உதவினாள்.
திருமதி. சவுதரி 'ஸ்டாஃப் ரூமுக்கு' வந்தவுடன், எப்போதும் நடப்பதைப் போல பேச்சு நிற்கவில்லை. அதற்குப் பதிலாக ஒரு பெரிய குலுங்கல் சிரிப்பு கேட்டது. கடந்த எல்லா நாட்களிலும் காட்ட வேண்டிய பழிக்குப் பழியை ஒன்றாகச் சேர்த்து அவர்கள் திருமதி. சவுதரியின் முகத்தில் அடித்ததைப் போல இருந்தது.
எல்லோரின் பார்வையும் திருமதி.சவுதரியின் மீது பதிந்திருந்தது. இன்று யாரும் கண்ணை வேறு பக்கம் செலுத்தவில்லை. எல்லா கண்களிலும் சவால் விடும் அறிகுறி இருந்தது. 'என்ன மகாராணி, என்ன கோபமாக இருக்கே? இன்னைக்கு என்ன மூட் சரியில்லையா?'
ஆண் விரிவுரையாளர்கள் மிகுந்த கிண்டலுடன் அவளையே வெறித்துப் பார்த்தார்கள்: 'பாவம்... மாடப்புறா. இந்த முகமூடி... அப்படியென்றால்... இதற்காகத்தான். காரணம் என்ன என்று உங்களுடைய கணவர் கூறுகிறார்- நீங்கள்... ஹ்... ஹ்... என்று.'
எல்லா கண்களிலும் கேலியும் கிண்டலும் தெரிந்தன.
பேராசிரியர் பால் அன்று எந்தவொரு மரியாதையும் இல்லாமல் கூறினார்: 'திருமதி. சவுதரி... இப்போது ஒரு நல்ல திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. 'அன் அஃபயர் டூ ரிமெம்பர்.' சாயங்காலம் உங்களுக்கு குறிப்பிட்டுக் கூறும்படி வேலை எதுவுமில்லையென்றால், போகலாம். முகவரி சொல்லுங்க. நான் வண்டியைக் கொண்டு வந்து பிக்-அப் பண்ணிக் கொள்கிறேன்.'
பேராசிரியர் சிங், அவள் தனியாக கிடைத்தபோது கூறினார்: 'நீங்கள் பலருடன் போவீர்கள் அல்லவா? எப்போதாவது என் மீதும் தயவு காட்டணும். அந்த அளவிற்கு முடியாதென்றால், ஏதாவது ரெஸ்ட்டாரென்டில் ஒரு கப் காபி... ஹி... ஹி...'
பேராசிரியர் பாலும், பேராசிரியர் சிங்கும் ஒரு பெண்ணாக அல்ல- தங்களுக்கு முன்னால் டேபிளில் பரிமாறப்பட்ட சுவையான ஒரு உணவுப் பொருளாகவே நினைக்கிறார்கள் என்பதாக திருமதி. சவுதரிக்குத் தோன்றியது.
அவளுக்கு அனைத்தும் புரிந்தன. கிண்டல் நிறைந்த, மலர்ச்சியுடன் காணப்படும் அந்த கண்களுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பது அவளுக்குத் தெரியும்.
ஆனால், அவள் மிகவும் அமைதியாக இருந்தாள். தன்னுடைய வயிற்றில் யாரோ ஒரு மத்துவை வைத்து கடைவதைப் போல அவளுக்குத் தோன்றியது. தன்னுடைய சரீரத்திலிருக்கும் அனைத்து உரோமங்களும் பற்றி எரியக் கூடிய நெருப்புப் பொறிகளாக ஆகி விட்டிருக்கின்றன என்பதாக அவள் நினைத்தாள்.
மற்றவர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். காரணம்- அவர்கள் உயர்ந்து நின்று கொண்டிருந்த ஒரு பீடத்திலிருந்து தன்னைப் பிடித்து இழுத்து கீழே போட்டிருக்கிறார்கள். இப்போது அதை கிழித்தெறியவோ, உடைத்து வீசவோ, கால்களைக் கொண்டு மிதித்து நசுக்கவோ... அவர்கள் செய்யலாம்- எந்தவொரு சிரமமும் இல்லாமல்.