பெண் விரிவுரையாளர்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4830
பெண் விரிவுரையாளர் (பஞ்சாபி கதை)
அஜீத் கவுர்
தமிழில் : சுரா
கல்லூரின் 'ஸ்டாஃப் ரூமில்' திருமதி பட்நாகர், திருமதி.பாண்டே, செல்வி. துபே, திருமதி, சுத் ஆகியோர் ஏதோ ரகசிய விஷயத்தை விவாதித்துக் கொண்டிருந்தார்கள். நான்கு பேரும் மேஜையின் மீது கைகளை ஊற்றிக் கொண்டு முன்னோக்கி நகர்ந்து அமர்ந்திருந்தார்கள். அவர்களுடைய கண்களில் உற்சாகம் நிறைந்திருந்தது.
திருமதி. பட்நாகர் மேல்மூச்சு கீழ் மூச்சு விட்டுக் கொண்டே ஏதோ விஷயத்தைச் சொல்லி உறுதிப்படுத்திக் கொண்டிருந்தாள். திருமதி. சுத் மிகுந்த ஆச்சரியத்துடன் சொன்னாள்: 'ஆஹா! அப்படியென்றால்... மகாராணியின் கால்கள் தரையில் படாமல் இருக்குறதுக்குக் காரணம் அதுதான்...
எல்லோரும் அதைக் கேட்டு சிரித்தார்கள். ஒரு இனம் புரியாத சந்தோஷத்தையும் முழுமையான திருப்தியையும் அடைந்தவாறு...
திருமதி. சுத் பரபரப்புடன் வாசலைப் பார்த்தாள். திருமதி. சவுதரி உள்ளே வந்து கொண்டிருந்தாள். இளம் நிறத்தில் கைத்தறியால் ஆன பட்டுத் துணியில் செய்யப்பட்ட சல்வார் கம்மீஸும், மெல்லிய சாக்லேட் நிறத்தைக் கொண்ட துப்பட்டாவும், சாதாரணமாக இருந்த செந்தூர பொட்டும், நீளமான கூந்தலும், மிடுக்கு நிறைந்த அழகும், தேன் ததும்பிக் கொண்டிருக்கும் கண்களும், முத்துச் சிப்பிக்கு உள்ளே இருக்கும் நிறத்தைக் கொண்ட கன்னங்களும், மெல்லிய உதட்டுச் சாயமும், கையில் இரண்டு மூன்று புத்தகங்களும்...
எல்லோரும் மிகவும் அமைதியாக இருந்தார்கள்.
ஆனால், இன்று எப்போதும் போல எல்லோரும் கண்களைச் சிமிட்டி வேறு பக்கம் பார்க்கவேயில்லை. யாருடைய கண்களும் பதைபதைப்பு அடைந்து மாத இதழ்களைத் தேடி போகவில்லை. எல்லோரும் நேராக திருமதி. சவுதரியையே பார்த்தார்கள். எட்டு கண்கள் மலர்ச்சியுடன் தன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை திருமதி. சவுதரி உணர்ந்தாள். அந்த கண்கள் தன்னைப் பார்த்து சவால் விடுவதைப் போலவும், தன்னைப் பார்த்து சிரிப்பதைப் போலவும், சந்தோஷத்தால் பிரகாசிப்பதைப் போலவும் அவளுக்குத் தோன்றியது.
திடீரென்று திருமதி. பாண்டே சாதாரணமாக ஏதோ கூற, நான்கு பேரும் சேர்ந்து ஒரே குரலில் குலுங்கிக் குலுங்கி சிரித்தார்கள்.
தன்னுடைய முழு உடலும் 'க்ளோரோஃபாம்' மூலம் சுய உணர்வு இல்லாமற் போய் விட்டதைப் போல திருமதி சவுதரிக்குத் தோன்றியது. தன்னைத் தானே சற்று கட்டுப்படுத்திக் கொண்டு அவள் ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்தாள்.
'நான் இவர்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்?'- தனக்குள் பதைபதைப்பு அடைந்து கொண்டே அவள் மனதிற்குள் கூறினாள்.
ஆனால், வெளியே அவள் முன்பு இருப்பதைப் போலவே சாந்த நிலையில் காணப்பட்டாள்.
திருமதி. சவுதரி முதலில் அந்த கல்லூரிக்கு வரலாறு விரிவுரையாளராக வந்தபோது, அவளுடன் பணியாற்றும் ஆண்கள் அவள் மீது தனி கவனம் செலுத்தினார்கள்.
'க்ரேஸ்ஃபுல்'- போசிரியர் தர்மவீரா கூறினார்.
'அழகு நிறைந்த எளிமை'- பேராசிரியர் பால் அதிகமாக புகழ்ச்சியைக் கலந்து கூறினார்.
'இரெஸ்ஸிஸ்டப்லி சார்மிங்'- போராசிரியர் சிங் தனக்கென்றே இருக்கக் கூடிய கம்பீரமான குரலில் பேராசிரியர் மல்ஹோத்ராவிடம் கூறினார்.
விரிவுரையாளர்கள் மத்தியில் கொஞ்சம் பெண்களும் இருந்தார்கள். அவர்கள் திருமதி. சவுதரியையைத் தங்களுடைய குழுவில் சேர்ப்பதற்கு முயற்சித்தார்கள். திருமதி. சவுதரி மூன்று நான்கு நாட்கள் அவர்களுடன் சேர்ந்து பங்கு பெறவும் செய்தாள். ஆனால், சேற்றில் இறங்கி நீர் வரை சென்று ஆடைகளை ஈரமாக்கும் ஆட்களை கரையில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு ஆளைப் போல மட்டுமே அவர்களுடைய நடவடிக்கைகள் இருந்தன. திருமதி.பாண்டே திருமதி.பட்நாகரைப் பாராட்டினாள். 'திரு.பட்நாகரின் செலக்ஷனா... இல்லாவிட்டால், நீங்களே செலக்ட் செய்ததா?'- செல்வி. துபே ஒரு புன்சிரிப்பை வெளிப்படுத்தியவாறு கேட்டாள்.
'இப்போது மூலையில் இருக்கும் கடையில் நிறைய நல்ல புடவைகள் வந்திருக்கின்றன'- திருமதி. சுத் தன்னுடைய ஐந்து நாட்கள் சுற்றித் திரிந்த அனுபவத்தில் கிடைத்த அறிவை வெளிப்படுத்தினாள்.
'இல்லை... கைத்தறி பவனிலும் மிகவும் புதிய செலக்ஷன்கள் கிடைக்கும்' - திருமதி பட்நாயகருக்கு, திருமதி. சுத் இவ்வாறு வெறுமனே புகழ் பெறுவதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
திருமதி.சவுதரி இந்த 'போரடிக்கக் கூடிய' விஷயங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டிருந்தாள்.
அவர்கள் எல்லோரும் சேர்ந்து தங்களுடைய பிள்ளைகளைப் பற்றியோ இல்லாவிட்டால் கணவர்களைப் பற்றியோ அல்லது புதிய மாடல் கார்களைப் பற்றியோ அதுவும் இல்லாவிட்டால் புதிய திரைப் படங்களைப் பற்றியோ பேசிக் கொண்டிருப்பார்கள்.
எல்லோரும் திருமதி..சவுதரியை தங்களுடைய பல வர்ணங்களைக் கொண்ட உலகத்திற்கு பிடித்து இழுத்துக் கொண்டு வந்து, அதில் சிறிதளவிலாவது பங்கெடுக்க வைப்பதற்கு ஆசைப்பட்டார்கள். ஆனால், திருமதி, சவுதரி சிறிதும் ஆர்வம் காட்டவில்லை.
தன்னைத் தானே சுருக்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் இன்னொரு பெண்ணை மிகவும் சீக்கிரமே வெறுப்பதற்கு பெண்களால் முடியும். 'ஹோ! இந்த மகாராணிக்கு எதைப் பார்த்து இந்த மிடுக்கு? என்ன ஒரு சுப்பீரியாரிட்டி! என்ன... தங்கத்தால் ஆன சிறகுகளா இருக்கு?'
படிப்படியாக... நான்கைந்து நாட்களிலேயே... திருமதி சவுதரியை தங்களுடைய முழுவில் சேர்ப்பதற்கான முயற்சி முற்றிலும் வீணாகிப் போய் விட்டதைப் பார்த்தார்கள். எல்லோரும் உத்தியை மாற்றி பார்த்தார்கள்.
திருமதி. சவுதரியோ ஓய்வு பீரியடில் 'ஸ்டாஃப் ரூமின்' ஒரு மூலைக்குச் சென்று ஏதாவது ஸோஃபாவில் போய் அமர்ந்திருப்பாள். ஏதாவது பத்திரிகையையோ புத்தகத்தையோ வாசிப்பாள்.
மற்ற விரிவுரையாளர்கள் அவளுக்கு எதிராக 'ஒரு பொது அணியை' வடிவமைத்தார்கள். அவள் வரும்போது, திடீரென்று பேச்சை நிறுத்தி விடுவார்கள். குலுங்கிக் குலுங்கி சிரிப்பதும் ஆரவாரமும் நின்று விடும். அதற்குப் பிறகு உரையாடல் மிகவும் தாழ்ந்த குரலில் இருக்கும்.
உடன் பணியாற்றுபவர்களில் ஆண்கள் திருமதி. சவுதரியுடன் நட்பு உண்டாக்க முயற்சித்தார்கள். 'திருமதி - சவுதரி! நீங்கள் வாசிப்பதில் மிகவும் தீவிரமானவர் என்பது தோன்றுகிறது. என்ன வாசிக்கிறீங்க?'- பேராசிரியர் தர்மவீரா கேட்பார்.
'ஒரு கப் காபி பருகுவோம், திருமதி.சவுதரி'- பேராசிரியர் சிங் சிரித்துக் கொண்டே அவளை அழைப்பார்.
திருமதி. சவுதரி அழகாகவும், சாந்தமாகவும் சிரித்துக் கொண்டே 'நோ... தேங்க் யூ' என்று கூறும்போது, பேராசிரியர் சிங்கிற்கு சூடான காபி தன்னுடைய உடலின் மீது விழுந்ததைப் போல இருக்கும்.