Lekha Books

A+ A A-

விலைமகளிரே, உங்களுக்கு ஒரு ஆலயம் - Page 2

lai magalirae ungalukku ouu alayam

சூட்கேஸை பூட்டிவிட்டு, டாக்ஸிக்காக தொலைபேசியில் பேசினான். டாக்ஸி கூறியது:
“இரண்டு நிமிடங்கள் சார்.''

அறையைப் பூட்டிவிட்டு வெளியே வந்தபோது, டாக்ஸி வந்து சேர்ந்திருந்தது.
“எங்கே?''
டாக்ஸி கேட்டது.

“டிஃபன்ஸ் காலனி...''

“எந்த ப்ளாக்?''

டாக்ஸி ஓடுவதற்கிடையில் கேட்டது.

“லதா என்ற விலைமகள் வசிக்கக்கூடிய ப்ளாக்கிற்கு...''

டாக்ஸி பான் தின்று சிவக்க வைத்த சிரிப்புகளில் வெறுப்பு கலந்திருக்க, டிஃபன்ஸ் காலனியை நோக்கி வேகமாக விரைந்தது. லதாவின் வீடு அவனுக்குத் தெரியும். அவனுக்கு மட்டுமல்ல; எல்லா டாக்ஸி களுக்கும் தெரியும். டாக்ஸிகளுக்கு மட்டுமல்ல- காடிலாக்குகளுக்கும் ஷெப்ரோலாக்களுக்கும் தெரியும். அவளுடைய வீடு ஒரு புனிதத் தலம்...

புனிதப் பயணிகளே, நீங்கள் ஏன் ரிஷிகேஷுக்குச் செல்கிறீர்கள்? புனிதப் பயணிகளே, நீங்கள் ஏன் அலஹாபாத் சங்கமத்தில் மூழ்குகிறீர்கள்? புனிதப் பயணிகளே, நீங்கள் எதற்கு மலைமீது ஏறி அமர்நாத்துக்கும் பத்ரிநாத்துக்கும் செல்கிறீர்கள்?

சாந்தா வசித்துக்கொண்டிருக்கும் கரோல் பாக்தான் ரிஷிகேஷ். காந்தா வசித்துக்கொண்டிருக்கும் தரியாகஞ்ச்தான் பத்ரிநாத். லதா வசித்துக் கொண்டிருக்கும் டிஃபன்ஸ் காலனிதான் அமர்நாத்.

லதா வாசலில் எதிர்பார்த்துக் காத்திருந்தாள். கண்களில் தூக்க சாயல் இருந்தது. பச்சை நிறப் புடவையை உடலில் சுற்றியிருந்தாள். கன்னத்தில் பற்களின் சிவந்த அடையாளங்கள்...

“உன்னைப் பார்க்கும்போது விலைமகள் என்றே தோன்றுவதில்லை.''

“பிறகு... என்ன தோன்றுகிறது?''

“தேவதை என்று...''

“நான் விலைமகள்தான்... என்னுடைய உடலுக்கு பாவத்தின் நாற்றம் இருக்கிறது.''

“உன்னுடைய உடலுக்கு அமிர்தத்தின் நறுமணம் இருக்கிறது.''

அவள் இருக்கையில் அவனுடன் நெருங்கி உட்கார்ந்தாள்.

“நேற்று தூங்கவில்லையா? எத்தனை வாடிக்கை யாளர்கள் வந்தார்கள்?''

“இரண்டு...''

அவர்கள் யார் என்று அவள் விளக்கிக் கூறினாள். ஒரு மனிதன் ஒரு தூதரகத்தின் இரண்டாவது செகரட்டரி. அவனுக்கு பொன் நிறத்தில் கிருதாக்கள் இருந்தன. இன்னொரு ஆள் நகரத்தின் பெயர்பெற்ற ஒரு ஓவியன். அவனுக்கு நீளமான தலைமுடி இருந்தது.

“பல் யாருடையது?''

“ஓவியனின்...''

ஓவியன் அவளுடைய கன்னத்தில் தன்னுடைய பற்களால் ஓவியங்கள் வரைந்திருப்பானோ?

டாக்ஸி புதுடெல்லி புகைவண்டி நிலையத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

“நான் உன்னைத் தேடி ஏன் வருகிறேன்?''

"காமவெறியைப்போக்கிக் கொள்வதற்கு...''

“இல்லை.... என்னிடம் இருக்கும் பாவங்களைக் கழுவிக்கொள்வதற்கு...''

சாந்தாவின் கருத்து காய்ந்துபோன ஊனமுற்ற காலைக் கட்டிப் பிடித்துக்கொண்டு இவன் அழுதான்.

"என்னை என்னுடைய பாவங்களிலிருந்து காப்பாற்று!'

அவள் அழுதாள்.

"நீ தேவதை!'

பால்வினை நோயால் பாதிக்கப்பட்டிருந்த தேவதையின் கண்களிலிருந்து கண்ணீர் தொடர்ந்து வழிந்துகொண்டிருந்தது.

மஸ்ஸுரி எக்ஸ்பிரஸ்ஸின் முதல் வகுப்பு அறையில் விலைமாதுவின் தோளில் தலை சாய்த்துக் கொண்டு அவன் உறங்கினான்.

விலைமகளின் கையைப் பிடித்துக்கொண்டு அவன் ஹரித்வாரில் வண்டியைவிட்டு இறங்கினான்.

“உனக்கு பால்வினை நோய் இருக்கிறதா?''

“இல்லை... சீக்கிரம் வரும்...''

அவள் புன்னகைத்தாள்.

கஜுராஹோவில் இருக்கும் புண்ணிய ஆலயங்களே, என்னை உங்களுடைய சுவர்களில் பதித்துக் கொள்ளுங்கள்.

தேவதாசிகளே, சிதைகளிலிருந்து விழித்தெழுங்கள்... கலியுகத்தின் தலைவிதியைத் திருத்தி எழுதுவதற்காக வாருங்கள்.. வாருங்கள்...

நான் காத்திருந்தேன்.

முதல் உடலுறவின் களைப்பிலிருந்து விழித்தெழு...

அவன் சொன்னான்.

“நாம் மானஸாதேவியைப் பார்ப்பதற்காகச் செல்வோம்.''

ஆடைகளை மாற்றிக்கொண்டு அவர்கள் சுற்றுலா மாளிகையைவிட்டு வெளியே வந்தார்கள். அப்பர் சாலையின் வழியாக நடந்தார்கள். மானஸாதேவியின் சந்நிதிக்குப் போய்ச் சேரவேண்டுமென்றால் மலையில் ஏற வேண்டும். கணக்கற்ற படிகளின் வழியாக அவர்கள் மேலே ஏறினார்கள். படிகள் முடிவுக்கு வந்தன.

மலர்களுடனும் வாசனைப் பொருட்களுடனும் ஏராளமான பக்தர்கள் மலையின்மீது ஏறி வந்து கொண்டிருந்தார்கள்.

மானஸாதேவிக்கு முன்னால் நின்று வணங்கினார்கள்.

தேவி, உனக்காக நான் மலர்கள் கொண்டுவரவில்லை. என்னிடம் வாசனைப் பொருட்களும் இல்லை. மலர்களுக்கும் வாசனைப் பொருட்களுக்கும் பதிலாக நான் அவை எல்லாவற்றையும்விட மிகவும் புனிதமான விலைமகளை அழைத்து வந்திருக்கிறேன். ஏற்றுக் கொண்டாலும்...

மக்கள் ஏராளமாகக் குழுமியிருந்த படித்துறைகளின் வழியாக விலைமகளின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான்.

அவள் சொன்னாள்:

“நான் குளிக்க வேண்டும்.''

படித்துறையில் ஏராளமான புனிதப் பயணிகள் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர் களுடைய பாவங்களின் மூலம் நதி கலங்கிப் போயிருந்தது. அவர்களுடைய பாவத்தை உண்டு நாறிப்போன மீன்கள் நதியில் இப்படியும் அப்படியுமாக நெளிந்து விளையாடிக் கொண்டிருந்தன.

“நான் என்னுடைய பாவத்தை இங்கு கழுவட்டுமா?''

அவள் மீண்டும் கேட்டாள்.

அவள் எதற்காக கங்கையில் குளிக்கிறாள்? அவள் தானே கங்காதேவி?

ஆமாம்... நீ குளி... நீ தொடுவதால், கங்கைக்கு பாவத்திலிருந்து விடுதலை கிடைக்கட்டும். கங்கை புனிதமாகட்டும்...

"சப்த தாரை' பகுதியைக் கடந்து நதி மிகுந்த ஓசையுடன் ஓடிக்கொண்டிருந்தது.

“நாம் நிர்வாணமாகக் குளிப்போம்.''

“யாராவது பார்த்துவிட்டால்...?''

“உன்னுடைய நிர்வாணம் யாரும் பார்க்காததா என்ன?''

சப்தரிஷிகளே, லதா என்ற விலைமகளின் பாதம் பட்டு உங்களுடைய சப்ததீவுகள் புனிதமாகி விட்டிருக்கிறது.

ரிஷிகளே, லதாவிற்காக தியானம் செய்யுங்கள்.

ப்ரம்மகுண்டமே, லதாவிற்காக விளக்குகளை எரியச் செய்யுங்கள்.

"வா...'

நதி அழைத்தது.

விலைமகளின் கையைப் பிடித்துக்கொண்டுஅவன் நதிக்குள் இறங்கினான். நதியில் அவர்கள் பயணித்தார்கள். சப்த தரையைக் கடந்து, ப்ரம்ம குண்டத்தை கடந்து, ஏராளமான பாலங்களுக்குக் கீழே, வங்காள விரிகுடா கடலை நோக்கி அவர்கள் மிதந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel