என் உம்மா
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7307
நான் 24 மணி நேரமும் இந்த வீட்டில்தான் இருக்கிறேன். சில நேரங்களில் மருந்து வாங்குவதற்காக கோழிக்கோட்டிற்குச் செல்வேன். ஒன்றிரண்டு மணி நேரங்கள் கழித்து திரும்பி வருவேன். மாதத்தில் ஒரு நாள் திருச்சூருக்குச் செல்வேன். அங்கு போவது சாகித்ய அகாடெமி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நான் சாகித்ய அகாடெமியின் செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன். ஒரு இரவு திருச்சூரில் தங்கிவிட்டு வீட்டிற்குத் திரும்பி வருவேன். என்னைப் பார்க்க வீட்டிற்கு யாரும் வரவில்லையென்றால் மாலையில் வெளியே கிளம்புவேன்.
வெளியே செல்வது என்னுடைய நண்பர் டாக்டர் சரத்சந்திரனிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வாங்குவதற்காக. நான் தினந்தோறும் மாத்ரு பூமி, மலையாள மனோரமா, ஜனயுகம், கேரள கௌமுதி, சந்திரிகா ஆகிய பத்திரிகைகளைப் படிப்பதுண்டு. கேரள கௌமுதியும் ஜனயுகமும் சந்திரிகாவும் தபாலிலேயே எனக்கு வந்து விடுகின்றன. இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வெளிநாட்டு செய்திகள் அதிகமாக இருக்கும். அந்தப் பத்திரிகையை நான் சாப்பிட்டு முடித்து படுக்கையில் படுத்தவாறு படிப்பேன். சாப்பாடு என்று சொன்னால் இரவில் பெரும்பாலும் நான் சாப்பிடுவதில்லை. கஞ்சிதான் குடிப்பேன். காய்ந்த மிளகாயும் அப்பளமும் கஞ்சியுடன் எப்போதும் இருக்கும்.
நான் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை வாங்கிக் கொண்டு அடுத்த அறையில் இருக்கும் பள்ளிக்கூட ஆசிரியர்களைத் தேடிச் செல்வேன். பெரும்பாலான நேரங்களில் நாங்கள் சீட்டு விளையாடுவோம். எனக்கு வரும் தந்திகளும் கடிதங்களும் என் வீட்டிற்குத்தான் எப்போதும் வரும். தபால்காரன் ஒவ்வொரு நாளும் இரண்டு முறைகள் என் வீட்டிற்கு வருவான். தந்தியும் கடிதங்களும் வரும்போது நான் வீட்டில் இல்லாவிட்டால் என்னுடைய மனைவி ஃபாபி பஷீர் கையெழுத்துப் போட்டு வாங்குவாள். எனக்கு மத்திய சாகித்ய அகாடெமியின் ஃபெல்லோஷிப் கிடைத்தவுடன் என் உம்மா இறந்து விட்டாள். உம்மா என்றால் என்னை கர்ப்பம் தரித்து பத்து மாதங்கள் சுமந்து பெற்று தாய்ப்பால் தந்து வளர்த்த என் தாயைச் சொல்கிறேன். தாயிடமும் தந்தையிடமும் எனக்கு அன்பு அதிகம். இப்போதும் உம்மாவையும் வாப்பாவையும் நான் ஒவ்வொரு நாளும் நினைத்துப் பார்க்கிறேன். என்னை ஒரு எழுத்தாளனாக ஆக்கியது என்னுடைய தந்தையும் தாயும்தான். நான் அவர்கள் இருவருக்கும் கடமைப்பட்டிருக்கிறேன். பொதுவாகவே கல்வி விஷயங்களில் முஸ்லீம் சமுதாயம் விருப்பம் காட்டாமல் இருந்த காலத்தில் என்னுடைய வாப்பாவும் உம்மாவும் என்னை மலையாள பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டார்கள். ஆங்கில பள்ளிக் கூடத்திலும்தான். அரபு மொழியிலும் எனக்கு கல்வி கற்க ஏற்பாடு செய்து தந்தார்கள். படிக்கும் காலத்தில் இரவு நேரங்களில் இந்தி படிப்பதற்காக என்னை அனுப்பி வைத்தார்கள். நான் என்னுடைய தாய், தந்தையைப் பற்றியும் சகோதரி, சகோதரர்களைப் பற்றியும் நிறையவே எழுதியிருக்கிறேன்.
நான் ஒரு எழுத்தாளனாக ஆனபோது பெரும்பாலான நாட்கள் வசித்தது எர்ணாகுளத்திலும் திருச்சூரிலும் சென்னையிலும்தான்.
நான் தலையோலப் பறம்பிலிருக்கும் எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டுத் திரும்பும்போது என் உம்மா படிவரை வந்து அங்கு நின்றிருப்பாள். பிறகு என்னைப் பார்த்து கவலையுடன் கூறுவாள்: ‘மகனே, எங்களை மறந்துவிடாதேடா’. வாப்பா என்னுடன் வந்து இருந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் நான் மிகவும் சிரமத்தில் இருந்தேன். இருந்தாலும் வாப்பாவிற்கு சாப்பாடு, தேநீர், வெற்றிலை, பாக்கு இந்த விஷயங்களுக்கு எப்போதும் தட்டுப்பாடு என்பதே இல்லாமல் நான் பார்த்துக் கொண்டேன். எங்கள் இருவருக்குமிடையே மன ரீதியான உறவு இருக்கவே செய்தது. சிறு குழந்தையாக இருந்தபோது நான் தொந்தரவுகள் தரக்கூடிய ஒருவனாக இருந்தேன். யாரையும் ஒழுங்காக நான் தூங்க விடுவதில்லை. வாப்பா என்னைத் தன் தோள் மீது போட்டுக் கொண்டு ஒன்றிரண்டு மணி நேரங்கள் நள்ளிரவு தாண்டியிருக்கும் வேளையில் வீட்டில் இங்குமங்குமாக நடந்து கொண்டிருப்பார். சாப்பாடு, தூக்கம் எல்லாமே வாப்பாவுடன்தான். நான் வாப்பாவின் முகத்தை என்னுடைய நாக்கால் நக்குவேன். இந்த விஷயங்களெல்லாம் உம்மா என்னிடம் சொன்னதுதான். இப்போது என் மகன் அனீஸ் பஷீருக்கு இரண்டரை வயது நடக்கிறது. அவனும் பல தொந்தரவுகள் தரக்கூடியவனாகத்தான் இருக்கிறான். நான் இரவு நேரங்களில் அவனைத் தோள்மீது போட்டுக் கொண்டு நடக்கிறேன். சாப்பாடும் படுக்கையும் அவனுக்கு எப்போதும் என்னுடன்தான். மலம் கழித்தால் நான்தான் கழுவ வேண்டும். என்னை கடிப்பான், உதைப்பான். என் முகத்தை நாக்கால் நக்குவான். அவன் என் வாப்பாவையும் உம்மாவையும் பார்த்ததில்லை.
வாப்பா மரணமடையும்போது எனக்கு திருமணம் ஆகவில்லை. அப்போது நான் திருச்சூரில் இருந்தேன். அது ஒரு மாலை நேரம். சங்ஙம்புழ, முண்டசேரி, நான் - நாங்கள் மூவரும் வடக்கு நாத கோவிலின் மேற்குப் பகுதியிலிருந்த ஒரு ஆலமரத்திற்குக் கீழே அமர்ந்து பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். நான்தான் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தேன். சொல்லிக் கொண்டிருப்பதற்கு இடையில் வாயைத் திறந்து வைத்துக் கொண்டு கண்களை அகல விரித்துக் கொண்டு நான் மவுனமாக இருந்தேன். ஏதோ நடக்கக்கூடாதது நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட சங்ஙம்புழ பதறிப்போய் என்னைப் பார்த்து கேட்டார்:
‘என்ன ஆச்சுடா? என்ன ஆச்சு?’
என்னால் எதுவும் பேச முடியவில்லை. மூச்சு அடைத்துக் கொண்டு வருவதைப் போல் இருந்தது. இதய ஓட்டம் நின்று விட்டதைப் போல் இருந்தது. சிறிது நேரம் கழித்துத்தான் நான் சாதாரண நிலைக்கே திரும்பினேன். மூச்சு இப்போது சீராக வந்தது. இதயம் இயங்க ஆரம்பித்தது. நான் சொன்னேன்: ‘ஏதோ எனக்கு முடியல...’
மறுநாள் என் வாப்பா இறுதி மூச்சை விட்ட செய்தி எனக்கு வந்தது. வாப்பா மரணமடைந்து கொண்டிருந்த நேரத்தில்தான் எனக்கு முடியாமற் போயிருக்கிறது.
சாதாரணமாக நான் வீட்டிற்குப் போனாலே, அது ஒரு பெரிய கொண்டாட்டம் மாதிரி இருக்கும். நான் வரப்போகிறேன் என்பது தெரிந்து விட்டால் உம்மாவின் மேற்பார்வையில் வீடும் வராந்தாக்களும் முற்றமும் வெற்றிடமும் நன்றாகப் பெருக்கி சுத்தம் செய்யப்பட்டிருக்கும். என் சகோதரிகளான பாத்தும்மாவும் ஆனும்மாவும் தான் சுத்தம் செய்வார்கள். ஆனும்மா, பாத்தும்மா இருவரின் கணவன்மார்களான சுலைமானும் கொச்சுண்ணியும் பலவகைப்பட்ட பழங்களையும் சேகரித்து வைத்திருப்பார்கள். படித்த என்னுடைய எல்லோருக்கும் இளைய சகோதரன் அபுபக்கர் என் அபு அருமையான மீனை வாங்கி சமையல் செய்து வைத்திருப்பான். மற்ற விஷயங்களையெல்லாம் எனக்கு அடுத்த இளைய சகோதரன் அப்துல்காதர் சரிப்படுத்தி வைத்திருப்பான். நடுவில் உள்ள சகோதரனான முஹம்மது ஹனீஃபா சட்டை போடாமல் கிழிந்த துணியை உடலில் அணிந்து கொண்டு எல்லா விஷயங்களையும் மேற்பார்வை பார்ப்பான்.