பயணம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6890
உரிந்து போயிருந்த தோலின் மேல் வெண்மை நிறத்தில் பூ பூத்திருக்க, அதைத் தொட்டு குழந்தை முகர்ந்து பார்த்தது. தோல் உரிந்த இடத்தில் மரத்தின் மினுமினுப்பான தடி நன்றாக வெளியே தெரிந்தது. மரத்தின் தோலை இழுக்க முற்பட்ட குழந்தை மரத்தின் மேல் பகுதியிலும் இந்தமாதிரி தோல் உரிந்திருக்கிறதா என்பதைப் பார்ப்பதற்காக கண்களை உயர்த்தி பார்த்தது. அப்போதுதான் ஒரு சிறு எறும்பாகி விட்டதை குழந்தை உணர்ந்தது. மரம் உயர்ந்து ஆகாயத்தைத் தொடும் அளவிற்கு வளர்ந்து மேலே போய்க்கொண்டே இருந்தது. ஒரு பெரிய ராட்சசனைப் போல எந்தவித ஓசையும் இல்லாமல், அசைவே இல்லாமல் மரம் குழந்தைக்குப் பக்கத்தில் நின்றிருந்தது. அந்த ராட்சசனை மேல்நோக்கி பார்க்க குழந்தைக்கு பயமாக இருந்தது. குழந்தைக்கு மரத்தை விட்டு போகவே மனதிற்கு அச்சமாக இருந்தது. மரம் பின் தொடர்ந்து வந்தால்...? குழந்தை மரத்தையே உற்றுப் பார்த்தது. அப்போது அதன் தோலுக்கடியில் சிறிய பூச்சிகளும், ஈக்களும் போய்க் கொண்டிருப்பதை குழந்தை பார்த்தது. பெரிய பாறைகளுக்கிடையே போவது மாதிரி ஏறுவதும் இறங்குவதும் சுற்றுவதும் திரும்புவதும் சுறுசுறுப்பாக அலைவதுமாக அவை இருந்தன. குழந்தை மீண்டும் நடக்க ஆரம்பித்தது. ஒன்றிரண்டு முறை பின்னால் அது திரும்பிப் பார்த்தது.
திடீரென்று பாதை மரக்கூட்டங்களை விட்டு ஒரு மலைச்சரிவு வழியாக கீழ்நோக்கி வளைந்து சென்றது. புற்கள் வளர்ந்திருந்த சிறு பாறைகளுக்கிடையே போன பாதையில் குழந்தை கீழ் நோக்கி நடந்தது. குழந்தைக்குப் பின்னால் மரங்கள் ஏதோ காவல்காரர்களைப் போல் உள்ளே இருள் படர்ந்து நின்று கொண்டிருந்தன. குழந்தையின் இடது பக்கத்தில் முன்பு பார்த்த மலை தலையை உயர்த்தி நின்றிருந்தது. மலை முழுவதுமாக இருளில் மூழ்கிப் போயிருந்தது. மலைக்குப் பின்னால், மேகம், பனிப் படலம் ஆகியவற்றுக்குள் சூரியன் கடலை நோக்கி பயணம் போய்க் கொண்டிருந்தான். குழந்தை இதுவரை கடலைப் பார்த்ததில்லை. குழந்தையின் தந்தை ஒருமுறை ஒரு மலை உச்சியில் நின்றவாறு தூரத்தில்... ரொம்பவும் தூரத்தில், ஆகாயத்தின் விளிம்பில் மேற்கு திசையில் ஒரு கோடு போல நெளிந்து நெளிந்து போய்க் கொண்டிருந்த ஏதோ ஒன்றைச் சுட்டிக் காட்டிய ஞாபகம் எழும்பி மேலே வந்தது. அதுதான் கடலோ? கண்ணுக்கெட்டாத தூரத்தில் ஆகாயத்தில் விரிந்து கிடக்கும் ஏதோ ஒன்று என்று நினைத்தது குழந்தை. சூரியன் கடலுக்கடியில் கொஞ்சம் கொஞ்சமாக ஒருவித ஓசையை இலேசாக எழுப்பியவாறு கீழே தாழ்ந்து போவதை குழந்தை நினைத்துப் பார்த்தது. நீல வர்ணத்தில் இருக்கும் நீருக்குள் சிறிது சிறிதாக கீழ் நோக்கி போகும் ஒரு மஞ்சள் தட்டு, மறுநாள் காலையில் மீண்டும் பிரகாசமான ஒளியுடன் எப்படி வருகிறது என்பதுதான் குழந்தைக்குப் புரியவேயில்லை.
குழந்தை பாதையில் இருந்த சின்னச் சின்ன கற்களை கால்களால் உருட்டியவாறு வேகமாக நடந்தது. குழந்தையிடமிருந்து ஒரு பாட்டு கிளம்பி வந்தது. ஒரு கிளி பச்சை மரமொன்றில் போய் அமர்ந்ததும், குழந்தை அந்தப் பாட்டைப் பாடியது: ‘மாத்தன் வந்து அந்த மூங்கில் கொண்டு அடித்துக் கொன்றானம்மா...’ பின்னர் என்ன நினைத்ததோ, அந்தப் பாட்டை நிறுத்தியது. பாட்டை மனதில் விட்டு அழிக்க முயற்சித்தது குழந்தை. மீண்டும் அது கவலையில் மூழ்கியது. ஆகாயத்தையும் கீழே ஓடிக்கொண்டிருந்த அருவியையும் அது பார்த்தது. வெண்மை நிறத்தில் பனிப்படலம் மூடியிருந்த ஆகாயம் குழந்தைக்கு மிகவும் பக்கத்திலேயே இருந்தது. அருவிக்கு மேலேயும் பனிப்படலம் போர்வை என மூடியிருந்தது. அடித்ததால் மரணத்தைத் தழுவும் ஒரு கிளிக் குஞ்சின் உருவம் குழந்தையின் கண்களுக்கு முன்னால் மறையாமல் வலம் வந்தது. மாத்தன் எதற்காக கிளிக் குஞ்சைக் கொன்றான்? ஏன் என்று கடைசி வரை குழந்தைக்குப் புரியவே இல்லை. திடீரென்று பாட்டின் வரிகளுக்கு மத்தியில் மாத்தன் ஒரு பெரிய கம்புடன் நடந்து வந்து கொண்டிருந்தான். கிளிக்குஞ்சை அடித்துக் கொன்றுவிட்டு அவன் மறைந்துவிட்டான். மாத்தன் எங்கிருந்தோ வந்தான், எங்கேயோ போய்விட்டான். கிளிக்குஞ்சு மட்டும் நிலத்தில் செத்துக் கிடந்தது. குழந்தை கவலை மேலோங்க பாறை வழியே கீழ்நோக்கி ஓடியது.
பறவைக் கூட்டைப் போய் பார்ப்பதற்கு குழந்தை இலேசாக தயங்கியது. இருந்தாலும் கீழே அருவியில் இறங்கி குளிர்ந்த நீரில் நின்று கொண்டு பாதங்களுக்குக் கீழே மணல் நகர்வதால் உண்டாகும் அனுபவத்தில் மூழ்கிப் போயிருந்த குழந்தை இந்த விஷயத்தை மறந்து போனது. அருவியின் ஓரங்களில் நனைந்து இறுகிப் போயிருந்த மண்ணில் புற்கள் பெரிய இலைகளுடன் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. புற்களுக்குக் கீழே ஈர மண்ணில் தவளைகள் கண்களை அகலமாக விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. குழந்தை கொஞ்சம் மணலை எடுத்து ஒன்றிரண்டு தவளைகள் மேல் எறிந்துவிட்டு, கரையில் ஏறியது. இங்கிருந்து முன்னால் ஒரு குன்று இருந்தது. மீண்டும் மரங்கள்... குழந்தை ஏதோ அடையாளத்தை வைத்துக் கொண்டு பாதையை விட்டு, குன்றின்மேல் ஏறியது. புற்களையும், பாறைகளையும் தாண்டி மரங்களை நோக்கி நடந்தது. திரும்பி மேற்கு திசையைப் பார்த்துவிட்டு, வேகமாக குன்றின்மேல் ஓடியது. ஓடிக்கொண்டிருக்கும்போது நகரத்தில் இருந்து வந்தவர்கள் யாரும் கண்ணில் தட்டுப்படவில்லையே என்பதையும், குழந்தை நினைத்துப் பார்த்தது. குளிர் கொஞ்சம் கூடுதலாக இருப்பது காரணமாக இருக்கலாம்.
குழந்தை ஓடி மரங்களுக்கு மத்தியில் ஏறியது. மேல் மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு பறவைக் கூடு இருக்கின்ற மரம் இருக்கும் இடத்தை நோக்கி அது நடந்தது. குழந்தையின் தந்தை இப்போது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கலாம். மீண்டும் ஒரு ஒல்லியான மினுமினுப்பான பொருளைப் பற்றிய நினைவு வந்து குழந்தையை பாடாய் படுத்தியது. இருந்தாலும், குழந்தை நடந்தும் ஓடியும் போய்க்கொண்டிருந்தது.
கடைசியில் மரத்தைக் குழந்தை கண்டுபிடித்து விட்டது. உயரம் குறைவாக, தடிமனாக விரிந்து நின்றிருந்த ஒரு மரம் அது. குழந்தை அதன் அடிப்பகுதியை அடைந்து பறவைக்கூடு இருக்கும் இடத்தை தலையைத் தூக்கிப் பார்த்தது. பறவைக்கூடு அதன் கண்களுக்குத் தெரிந்தது. ஒரு கிளையில் கையை வைத்து மரத்தில் ஏற முயற்சித்தது. கை எட்டவில்லை. மறுபக்கம் நடந்து சென்ற ஒரு பாறையின் மேல் ஏறி வேறொரு கிளையைப் பிடிக்கலாம் என்று முயற்சித்தபோது வேறு ஏதோவொன்று குழந்தையின் கண்களில் பட்டது. ஒரு பாறைக்கு அருகில் தவிட்டு நிறத்தில் உள்ள ஒரு கம்பளி கோட்டும் வேறு ஏதோ வெள்ளை நிறத்திலும், சிவப்பு நிறத்திலும் இருந்த துணிகளும் தெரிந்தன. சிவப்பு துணி ஒரு புடவையைப் போல குழந்தைக்குத் தெரிந்தது. நகரத்தில் இருந்து வந்தவர்கள் யாரோ மறந்து வைத்து விட்டுப் போயிருக்கலாம். குழந்தை பாறைக்கருகில் போவதற்காக நடந்தது. பாறையின் மறுபக்கத்திற்கு நடந்து எட்டிப் பார்த்தது. திடீரென்று தரையிலிருந்து ஒரு இளைஞன் ட்ரவுசரை மேல் நோக்கி இழுத்து விட்டவாறு எழுந்து நின்றான். குழந்தை ஆச்சரியப்பட்டு நின்றுவிட்டது. அடுத்த நிமிடம் அந்த இளைஞன் குழந்தையைக் கீழே தள்ளுவதைப் போல் அதற்கு அருகில் போய் நின்றான். அவன் கையில் ஒரு கல்லை எடுத்து ஓங்கியவாறு குழந்தையைப் பார்த்துச் சொன்னான்: “போ... போ... பிச்சைக்கார நாயே! இங்கேயே பார்த்துக்கிட்டு இருக்கியா? ஓடு...” குழந்தை ஓரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுவிட்டு அடுத்த நிமிடம் ஓடியது.
குழந்தை பறவைக் கூடு இருக்கின்ற மரத்தைத் தாண்டி ஓடியது. அழுது கொண்டே அது ஓடியது. ஒரு கரையான் புற்றில் தட்டி அது கீழே விழுந்தது. குழந்தைக்கு ஒன்றுமே புரியவில்லை. எதற்காக அந்த இளைஞன் தன் மீது கல்லெறிய வந்தான்? அதற்கு எதுவுமே புரியவில்லை.தேம்பியவாறு கண்ணீர் வழிந்து கொண்டிருந்த கன்னங்களுடன் அருவியைக் கடந்து இருண்டு வந்து கொண்டிருந்த மாலை நேரத்தில் குழந்தை வீட்டை நோக்கி ஓடியது.