பயணம்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6896
குளிர்காலத்தின் ஒரு மாலை நேரத்தில் ஒரு மலையோரத்தின் அடிவாரத்தில் இருந்த ஒற்றையடிப் பாதை வழியே ஒரு சிறு குழந்தை நடந்து போய்க் கொண்டிருந்தது. படர்ந்து கிடந்த மரங்களுக்குக் கீழே ஒரு நூலைப்போல போய்க்கொண்டிருந்த அந்தப் பாதையில் மரங்களின் பழுத்த இலைகள் விழுந்து விழுந்து காலப்போக்கில் பாதையே காணாமல் போயிருந்தது.
குவியல் குவியலாகக் கிடந்த இலைகளின்மேல் நடந்து சென்ற குழந்தையின் கால் பாதங்கள் பஞ்சைப்போல மிகவும் மிருதுவாக இருந்தன. இரவில் விழுந்திருந்த பனி இனியும் உலராமல் அப்படியே மரங்களின் பட்டையில் இருந்தன. மரங்களின் பச்சைக் குடைகளுக்கு மேலே இலேசாக மேகங்களுக்கு மத்தியில் சூரியன் தன் முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தான். பனி ஆகாயத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விழ தொடங்கியிருந்தது. அதனால் மரங்களுக்கிடையே பனியும் பகல் நேர வெளிச்சமும் சேர்ந்து உண்டாக்கிய மங்கலான இருட்டு இருந்தது. குளிர் வேறு பயங்கரமாக ஆட்டிப் படைத்து கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மரங்களுக்கு மத்தியில் புகுந்து, காற்றில் உயர்வதும் தாழ்வதுமாய் இலைகளை அடிக்கொரு தரம் முழுமையாக மூடியும் மறைத்தும் போய்க் கொண்டிருந்த பனிப்படலத்தையே குழந்தை பார்த்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் சென்ற பிறகு பனிப்படலங்கள் முழுமையாக ஒன்று சேர்ந்து மரங்களைப் பூரணமாக விழுங்கப் போவது உறுதி என்று குழந்தை உறுதியாக நம்பியது.
மரங்களுக்குக் கீழே ஒரு சிற புள்ளியைப் போல மெதுவாக நடந்து கொண்டிருந்த அந்த குழந்தை ஒரு தோட்டக்காரனின் குழந்தை. சுகமாக தங்கிவிட்டுப் போகலாம் என்று வெளியூரிலிருந்து வந்திருந்தவர்களுக்கு என்னவோ ஏற்பாடு பண்ணுவதற்காக அவனுடைய தந்தை வெளியே போயிருந்த நிமிடத்தில் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டது அந்த குழந்தை. தந்தை வீடு திரும்புவதற்கு முன்னால் காட்டில் இருக்கும் ஒரு இடத்தில் இருக்கும் ஒரு மரத்தில் இருக்கும் பறவைக் கூட்டில் முட்டைகள் விரிந்து விட்டதா இல்லையா என்று பார்த்துவிட்டு அந்தக் குழந்தை வீட்டிற்கு திரும்ப வேண்டும். நகரங்களில் இருந்து வந்திருப்பவர்கள் கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டு இங்குமங்குமாய் அலைந்து கொண்டிருப்பது அந்தக் குழந்தையின் கண்களில் பட நேரிடலாம். குழந்தை வேகமாக நடந்தது. சிறிது தூரத்தில் மரங்களுக்குப் பின்னால் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. குழந்தை குளிர்ந்துபோய் கீழே கிடந்த காய்ந்த இலைகள் மீது நடந்து காட்டிற்குள் சென்றது. நெருப்பு எங்கே எரிந்து கொண்டிருந்தது? குழந்தை ஆச்சரியத்துடன் பார்த்தது. அப்போது ஓரு பாறைக்குப் பின்னால் நெருப்பு தன் தலையை நீட்டிக் கொண்டிருந்தது. பாறையை நோக்கி வேகமாக குழந்தை நடந்து சென்றது. எரிந்து கொண்டிருந்த நெருப்பின் மீது காய்ந்துபோன குச்சிகளையும் இலைகளையும் பொறுக்கி போட்டவாறு பாறைக்குப் பின்னால் கறுப்பு நிறத்தில் ஒரு கிழவன் உட்கார்ந்திருந்தான். குழந்தைக்குப் கிழவனைப் பார்த்ததும் அவன் யாரென்று தெரிந்துவிட்டது. அந்தக் கிழவன் பச்சிலை மருந்து பறிக்கக் கூடியவன். கிழவன் குழந்தையைப் பார்த்து தலையை ஆட்டினான். அவன் திடீரென்று தன்னை மறந்து பச்சை இலைகளை நெருப்பில் எடுத்து போட்டான். அவ்வளவுதான் - புகை வர ஆரம்பித்துவிட்டது. புகைக்கு நடுவில் நெருப்பு ஜொலித்துக் கொண்டிருந்தது. குழந்தை புகையின் வாசனையை முகர்ந்தவாறு மீண்டும் திரும்பி பாதையை நோக்கி நடந்து தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தது.
தூரத்தில் மலையில் நிழல் எதுவரை இருக்கிறது என்று குழந்தை பார்த்தது. மலைச் சரிவின் ஒரு பக்கத்தில் பாதியை ஒரு கறுப்புத் துணியைப் போல ஒரு பெரிய நிழல் மூடியிருந்தது. நிழலுக்குள் பெரிய பாறைகளின் மங்கலான கறுப்பு நிறத்தையும், காட்டின் இருண்ட பச்சை நிறத்தையும் குழந்தையால் பார்க்க முடிந்தது. காலையில் நிழல் வருவதற்கு முன்பு மலையோரங்களில் மனிதர்கள் ஊசி முனையைப் போல சின்னஞ் சிறியவர்களாய் தெரிவதை குழந்தை பலமுறை பார்த்திருக்கிறது. இப்போதும் மனிதர்கள் நடந்து கொண்டுதான் இருப்பார்கள் என்று குழந்தை நினைத்தது. ஆனால், கண்ணில் தெரிந்தால்தானே! நிழல் கொஞ்சம் அதிகமாகவே ஆக்கிரமித்துவிட்டிருக்கிறது. இனிமேலும் தாமதிக்கக்கூடாது. குழந்தை தன் நடையை மேலும் வேகப்படுத்தியது. வீட்டினுள் அறையின் இருண்டுபோன ஒரு மூலையில் இருக்கும் மெல்லிய மினுமினுப்பான நீளமுள்ள ஒரு பொருளை இலேசான தயக்கத்துடன் குழந்தை நினைத்துப் பார்த்தது. குழந்தையின் தந்தை சமீபத்தில் ஆற்றங்கரையில் இருந்த புதரில் கண்டெடுத்துக் கொண்டு வந்தது அது. குழந்தை அதைப் பற்றியே சிறிது நேரம் மனதிற்குள் நினைத்துப் பார்த்தவாறு தன் நடையில் வேகம் கூட்டியது.
குழந்தையின் நடைக்குக் கீழே பதுங்கித் தாழ்ந்த காய்ந்த இலைகளுக்கு அடியில் ஆங்காங்கே வெண்மை நிற புழுக்கள் இருந்தன. இலைகளில் சின்னஞ்சிறு காளான்களும் வளர்ந்திருந்தன. இலைகளுக்கு மத்தியில் ஒரு ரகசியத்தைப் போல இருண்டு கிடக்கும் மண்ணில் பெரிய வேர்களுக்கு நடுவில் சிறு விதைகள் பச்சைச் சிறகுகள் விரித்து உயர்ந்து எழுந்து நிற்க முயற்சித்துக் கொண்டிருந்தன. விதைகள் முளைத்து நிற்கும் காலத்தை நினைத்துப் பார்த்தபோது குழந்தையின் மனதில் கவலை உண்டானது. இலைகள் அழுகிப்போயிருக்கும் மண்ணில் முளைத்து நிற்கின்ற செடிகளில் எத்தனை ஒடிந்தும், வாடியும், கால்கள் மிதித்தும் மீண்டும் மண்ணிலேயே போய் மடிந்துவிழப் போகின்றவை! குழந்தையே முளைத்துக் கொண்டிருக்கம் எத்தனைச் செடிகளின் சின்ன இறகுகளை ஒடித்திருக்கிறது! ஒடித்த இடத்தில் இருந்து வெண்மை நிற பால் திரண்டு வருவதைப் பார்ப்பதற்காக இத்தகைய ஒரு செயலை அது எத்தனை முறை செய்திருக்கிறது! அந்த வெண்மையான பாலைத் தொட்டு குழந்தை நாக்கில் வைத்து பார்த்திருக்கிறது. இலேசான இனிப்பைக் கொண்ட பால். ஆனால், அப்படி முளைக்கும் வித்து ஒற்றைச் சிறகுடன் நின்று அங்கேயே மரணத்தை தழுவும். இனி எந்தக் காலத்திலும், முளைத்துவரும் செடியை ஒடிக்கக் கூடாது, அவற்றை எந்தக் காரணத்தைக் கொண்டும் மிதிக்க கூடாது என்று மனதிற்குள் சபதம் செய்து கொண்டு குழந்தை நடக்க ஆரம்பித்தது. இப்போது அதற்கு பயங்கர கவலை வர ஆரம்பித்தது. பனிப் படலம் புகையைப் போல மரங்களுக்கு மத்தியில் அலைந்து கொண்டிருந்தது.
குழந்தை குனிந்து காய்ந்து போய் கிடந்த ஒரு கம்பைக் கையில் எடுத்து, வேகமாக நடக்கும்போது, மரங்களை அந்தக் கம்பால் அடிக்கத் தொடங்கியது. அடுத்தடுத்து இருந்த மரங்களைக் கம்பால் அடித்தபோது உண்டான சத்தத்தைக் கேட்டவாறு குழந்தை நடந்தது. மரங்களின் மேல் தோல் உரிந்து காய்ந்து உதிரும் நிலையில் இருந்தது.