விருந்தாளி - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7217
"மாமாவுக்குப் புரியவில்லை. தினமும் ஒன்றாக உட்கார்ந்து முடிவு செய்த விஷயம். பிறகு... என்ன காரணத்தாலோ, அது நடக்கவில்லை.''
அது பாட்டிக்கு தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் நடைபெற்ற திருமணப் பேச்சைப் பற்றியது...
"நல்ல நிறமும்... அனைத்தும் இருந்தன. சுருண்ட குடுமி... விசேஷமாகக் கூறுகிற மாதிரி நான் எதையும் கேட்டதில்லை.''
அவரை பாட்டிக்கு பிடித்திருந்ததா? பாட்டியைப் பார்த்து சிரித்தாரா? அவருக்கு என்ன வயது? அது வேண்டாம் என்று கூறிய போது, பாட்டி அழுதாளா? இப்படி நான் கேள்விகளைக் கேட்டேன்.
பாட்டி சந்தேகத்துடன் என்னைப் பார்ப்பாள். எனினும், அதற்குப் பிறகு எதுவும் பேசாமல் எழுந்து போய் விடுவாள். எனினும், எனக்கு ஒருவிதத்தில் எல்லா தகவல்களும் கிடைத்துவிட்டன. பாட்டி திருமணம் செய்து கொண்டது வேறொரு மனிதரை. தாத்தா கறுத்து, தடிமனாக இருந்த ஒரு மனிதர். பெரிய பணக்காரர். அவர்கள் சந்தோஷத்துடன்தான் வாழ்ந்தார்கள். தாத்தா மிகுந்த இரக்க குணம் கொண்டவராக இருந்தார். ஆனால், அன்று காலையில் மாமாவுடன் பேசி, கருத்து வேறுபாடு உண்டாகிப் பிரிந்து சென்ற அந்த குடுமி வைத்த மனிதரைப் பற்றிக் கூறும்போது பாட்டியின் கண்கள் பூவிதழ்களைப் போல மென்மையானவையாக ஆகிவிடும். எனினும், அவரைப் பற்றி மேலும் கேட்டால், பாட்டி கோபத்துடன் எழுந்து போய் விடுவாள்.
பாட்டி சொன்னாள்: "முன் பிறவி பழக்கம் காரணமாகத்தான் அந்த ஆளுக்கு இந்த அளவிற்கு நெருக்கம் தோன்றியிருக்க வேண்டும். அது உண்மையாகவே இருக்கும்.''
யாரைப்பற்றிக் கூறுகிறாள் என்று முதலில் எனக்குப் புரியவில்லை. பாட்டி பார்த்துக் கொண்டிருந்த இடத்தை நான் பார்த்தேன். நிலத்தில் வெயில் வந்து விழுந்து கொண்டிருந்தது.
"பாட்டி, யாரைப் பற்றி சொன்னீங்க?''
"போன வருடம் இங்கே ஒரு ஆள் வரவில்லையா?''
"சற்று வயதான யாருமா?''
"இல்லை... அன்று வரவில்லையா, ஒரு இளைஞன்? அப்பாவைத் தேடி...''
"ஓ... அந்த சுருட்டை முடி மனிதர்... நிறைய பேசக் கூடியவர். அவர் தானே?''
பாட்டி சிரித்தாள். தொடர்ந்து சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். நான் பள்ளிக் கூடத்தில் தையல் ஆசிரியை செய்யச் சொன்ன வேலையைச் செய்து கொண்டிருந்தேன். ஒரு வெள்ளை நிற மேஜை விரிப்பின்மீது, சிவப்பு நூல்களைக் கொண்டு பன்னீர் மலர்களைத் தைத்துக் கொண்டிருந்தேன். ஒரு மலரின் ஓவியத்தை ஆசிரியை மையால் வரைந்து தந்திருந்தாள். துணி அழுக்காகிக் கொண்டிருந்தது.
"மொத்தத்தில் இது அழுக்காகிவிட்டது. தையல் ஆசிரியை என்ன கூறுவாங்களோ?''
பாட்டி அதை கவனிக்கவேயில்லை. பாட்டியின் கண்களில் வெயிலில் குளித்துக் கொண்டிருந்த வாழைத் தோட்டத்தையும் மேற்கு திசையில் இருந்த வயலையும் நான் பார்த்தேன்.
"பாட்டி, அந்த விருந்தாளியைப் பற்றி நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?''
பாட்டி எதுவும் கூறவில்லை. நான் தொடர்ந்து சொன்னேன்: "பாட்டி, ஒருவேளை உங்களுக்கு முன்பு நன்கு பழக்கமான யாருடைய மகனாகவோ அவர் இருக்கலாம். அதனால்தான் இப்படி அறிமுகமானதைப் போல தோன்றுகிறது.''
"என்னவோ... யாருக்குத் தெரியும்?''
பாட்டி தன் கையிலிருந்த துளசி மாலையின் மணிகளை அலட்சியமாக எண்ணியவாறு மேற்குப் பக்கம் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். வெயில் நெருங்கி நெருங்கி வயலின் ஓரத்தில் நின்றிருந்த மஞ்சள் நிற அரளி மலர்களில் போய் விழுந்து கொண்டிருந்தது.