விருந்தாளி
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7217
மதியத்திற்குச் சற்று முன்புதான் பாட்டியின் விருந்தாளி வந்து சேர்ந்தார். கிட்டத்தட்ட பன்னிரண்டு மணி ஆகியிருக்க வேண்டும். சற்று முன்போ, அதற்கும் சற்று பின்போ அந்த ஆள் வந்திருந்தால், அவரை நாங்கள் பாட்டியின் விருந்தாளி என்று அழைத்திருக்க மாட்டோம். அதற்குக் காரணம்- நாங்கள் யாராவது அங்கு இருந்திருந்தால், அவருக்கு பாட்டியைப் பார்ப்பதற்குக்கூட சந்தர்ப்பம் கிடைத்திருக்காது.
அவர் வந்து நுழைந்தபோது, நாங்கள் யாரும் அங்கு இல்லை. எங்களின் தாய் பக்கத்து வீட்டிற்குப் பேசிக் கொண்டிருப்பதற்காக போயிருந்தாள். தந்தை வெளியே எங்கோ போயிருந்தார். என்னுடைய சகோதரர்கள் கடைத்தெருவில் இருக்கும் வைத்தியரின் கடைக்குச் சென்று உட்கார்ந்து நாட்டு விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்க வேண்டும். நான் உள்ளே குளியலறையில் எண்ணெய் தேய்த்துக் குளித்துக் கொண்டிருந்தேன். ஒரு மனிதர் வாசலில் வந்து நின்று கொண்டிருக்கிறார் என்ற தகவல் தெரிந்து பாட்டி எழுந்து வெளியே சென்றாள். தங்களுக்குள் பழக்கம் உண்டானதிலிருந்து பாட்டியும் அந்த ஆளும் இடைவெளி விடாமல் பேசிக் கொண்டிருந்தார்கள். இடையில் அவ்வப்போது ஒருசில வார்த்தைகள் குளியலறைக்குள்ளும் வந்து விழுந்து கொண்டிருந்தன.
"இப்படி ஏன் வாழ வேண்டும்? பாவத்தின் விளைவாக இருக்க வேண்டும்.''
பாட்டி சாதாரணமாகக் கூறக்கூடிய அந்தக் கருத்தை அவரிடமும் கூறினாள்.
"அப்படிச் சொல்லக்கூடாது, அம்மா. இவ்வளவு வருடங்களாக கடவுளின் பெயர்களைக் கூற முடிகிறதே என்பதை நினைத்து சந்தோஷப்பட வேண்டும்.''
அதைக் கேட்டவுடன், பாட்டிக்கு இனி அந்த மனிதர்மீது விருப்பம் கொள்ளாமல் இருக்க முடியாது என்பதை நான் உறுதியாகத் தெரிந்து கொண்டேன். அது உண்மைதான். நான் குளித்து முடித்து என்னுடைய அறைக்குச் சென்று ஆடைகளை மாற்றும்போதுகூட பாட்டியின் உரத்த குரலில் இருந்த பேச்சு கேட்டுக் கொண்டே இருந்தது. இந்த அளவிற்கு உற்சாகத்துடன் பாட்டி உரையாடியதாக எனக்கு ஞாபகத்தில் இல்லை. பாட்டியின் இளம் வயது அறிமுகங்களைப் பற்றியும் காலத்தின் மாற்றங்களைப் பற்றியும் வினோபாவைப் பற்றியும் மகாத்மாஜீயைப் பார்ப்பதற்காக முன்பொருமுறை ஒரு படகில் பாட்டி சென்றிருந்ததைப் பற்றியும் நான் கேட்டேன். விருந்தாளியும் விடவில்லை. இறுதியில் அவர்கள் கிட்டதட்ட ஒரு மணி நேரம் உரையாடி முடித்தபோது நான் அங்கு சென்றேன்.
பார்ப்பதற்கு பரவாயில்லை என்பதைப் போல ஒரு இளைஞராக இருந்தார் விருந்தாளி. சற்று பெண்மைத்தனம் தெரியக்கூடிய முக வெளிப்பாடு. எப்போதும் சிரிப்பதற்குத் தயாராக இருக்கும் உதடுகள், சுருட்டை முடி, புதிய தேனின் நிறத்தில் இருந்த மெலிந்த உடல்... இப்படி மொத்தத்தில் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிகிற மாதிரியான ஒரு விருந்தாளி. அவர் என்னிடம் பேசினாலும், அந்தப் பேச்சு பாட்டியைப் பார்த்துக் கொண்டேதான் நடந்தது.
"நான் அப்பாவைப் பார்ப்பதற்காக வந்தேன். அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.''
பாட்டி பெருமையுடன் சிரித்தாள். சாதாரணமாக நாற்காலிகளை விரும்பாத பாட்டி நாற்காலியில் அமர்ந்துதான் பேசிக் கொண்டிருந்தாள். எதிரில் தூணில் சாய்ந்து கொண்டு விருந்தாளி நின்றிருந்தார் -மகனைப் போல. சிறிது நேரம் நான் உபாச்சார வார்த்தைகளைக் கூற முயற்சித்தேன். ஆனால், அந்த மனிதர் என்னைக் கவனிக்கக்கூட இல்லை. இறுதியில் அவர்கள் இருவரையும் தனியே இருக்கச் செய்து விட்டு, நான் உள்ளே சென்று விட்டேன்.
அன்று அவர் திரும்பிச் சென்றதும், பாட்டியின் முகம் வாடி விட்டது. வெளியே பார்த்துக் கொண்டே பாட்டி சொன்னாள்: "அம்மு, எனக்கு அந்த மனிதரைப் பார்க்கும்போது நீண்ட நாட்கள் பழக்கமான ஒருவரைப் பார்ப்பதைப் போல தோன்றுகிறது. சந்திப்பதற்கு எந்தவொரு வழியும் இல்லை. திருப்புணித்துறையிலோ வேறு எங்கோ வீடு...''
நான் வெறுப்புடன் சொன்னேன்: "ஒரு போர் அடிக்கக்கூடிய மனிதர். என்னைத் திருப்பிக்கூட பார்க்க வில்லை.''
பாட்டி பற்கள் இல்லாத ஒரு அழகிய சிரிப்பை வெளிப்படுத்தினாள்.
"என்னையும் முன்பே தெரியும் என்று அவர் சொன்னார். அப்படி எப்படித்தான் தோன்றுகிறதோ? ஒரு முன் பிறவி...''
"முன் பிறவியில் இருந்த நண்பனாக இருக்க வேண்டும்.'' நான் சொன்னேன். சாதாரணமாக விருந்தாளிகள் வரும்போது, வெளியே எடுக்கக்கூடிய சிவப்பு நிறப் பாவாடையைத்தான் நான் அணிந்திருந்தேன். அதை அவிழ்த்து மடித்து கொடியில் போட்டுக் கொண்டே நான் மீண்டும் சொன்னேன்: "ஒரு போர் அடிக்கும் மனிதர்...''
இவை அனைத்தும் ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்றவை. அப்போது நான் அதைப்பற்றி நினைத்துப் பார்த்ததேயில்லை. நேற்று எல்லாரும் வெளியே எங்கோ போயிருந்தபோது, பாட்டி வாசலில் இருந்த திண்ணையில் உட்கார்ந்து கொண்டு சொன்னாள்: "அம்மு, அந்த ஆள் என்ன சொன்னார் தெரியுமா? எவ்வளவு வருடங்கள் உயிருடன் இருக்கிறோமோ, அவ்வளவு வருடங்கள் கடவுளின் பெயர்களைச் சொல்லலாமாம்! உண்மைதான்... இல்லையா?''
நான் தலையை ஆட்டினேன். ஆனால், அதை யார் சொன்னார்கள் என்பது உடனடியாக எனக்கு ஞாபகத்தில் வரவில்லை. பாட்டிக்கு அப்படி ஒரு குணம் இருந்தது. ஒவ்வொரு சிந்தனைகளுக்கு மத்தியிலும் திடீரென்று ஒன்றை எடுத்துக் கூறுவது... சில நேரங்களில் முன்பு எப்போதோ நடந்து முடிந்த ஏதாவது விஷயமாக இருக்கும்.
"சாயங்காலம் புறப்பட தயாரானபோதுதான், துணியின் ஓரத்தில் நெருப்பு பிடித்து விட்டது.''
எப்போது, யாருடைய துணியில் என்று யாருக்கும் தெரியாது. சில நேரங்களில் பாட்டி கருணை காட்டி எங்களுக்கு ஒரு கதை முழுவதையும் கூறுவாள். சில நேரங்களில் நடுவில் நிறுத்தி விட்டு, உள்ளே அறைக்கு வெற்றிலையைத் தேடிச் சென்றுவிடுவாள். ஆனால், பாட்டியின் மனதில் இருந்த பெரும்பாலான கதைகளும் எனக்குத் தெரியும். கிடைப்பவை அனைத்தையும் பொறுக்கி ஒன்று சேர்த்து நான் கதைகளாக ஆக்குவேன்.