பத்திரிகைச் செய்தி
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7309
"மே9... என்ற இடத்தில் இருக்கும் ... நதியில் பயங்கரமாக பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தைப் பொருட்படுத்தாமல் தன்னுடைய உயிரை ஆபத்தில் சிக்க வைத்துக் கொண்டு, அங்குள்ள இளைஞர்கள் சங்கத்தின் முக்கிய உறுப்பினரான திரு கெ., இன்று மதியம் ஆற்றின் நீரோட்டத்தில் சிக்கி மரணத்தின் பிடிக்குள் நிரந்தரமாக கீழ் நோக்கிச் சென்ற - யாரும் இல்லாத ஒரு வயதான மனிதரைக் காப்பாற்றி, சிகிச்சைக்காக ஊரில் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
திரு கெ.யின் தைரியமான இந்த செயல் ஊரில் இருக்கும் இளைஞர்களுக்கு எப்போதும் மிகச் சிறந்த ஒரு முன்மாதிரியாக விளங்கிக் கொண்டிருக்கும்” என்று இருந்த பத்திரிகைச் செய்தியை, ஒரு தைரியமான செயல் என்று பூசணிக்காய் அளவு எழுத்துகளைக் கொண்ட தலைப்புடன் அரசாங்க பதவியில் இருப்பவர்களும் செல்வந்தர்களும் எத்தனையோ அரசியல் அமைப்புகளின் தலைவர்களும் மதத் தலைவர்களும் இலக்கியவாதிகளும் தொழிலாளர்களின் தலைவர்களும் என்று ஊரின் எல்லா பகுதிகளிலும் இருக்கும் ஏராளமான ஆட்கள் தினசரி பத்திரிகையில் வாசித்தாலும், யாருமே இல்லாத அந்தக் கிழவன் மரணப்பாதாளத்திற்குள் நிரந்தரமாகக் கீழ்நோக்கி போனதற்கு காரணம் என்ன என்பதைப் பற்றிய ரகசியத்தை அறிந்திருக்கும் இரண்டு மூன்று நபர்களில் ஒருவராக இருந்தார் 39-ஆம் எண் போலீஸ் கான்ஸ்டபிள்.
அந்த மனிதர் அந்தப் பத்திரிகைச் செய்தியை வாசித்து, அந்தக் கிழவனைப் போய் பார்த்து, அவனுடன் உரையாடி, அதைத் தொடர்ந்து நடைபெற்ற பயங்கரமான சம்பவங்களுக்கு சாட்சியாக இருந்து, அந்தச் சம்பவத்தைப் பற்றி வந்த பத்திரிகைச் செய்தியை வாசித்த மனிதராக இருந்தார்.
பி.ஸி. 39-க்கு மருத்துவ மனையில்தான் வேலை. லாக் அப்பில் இருந்த குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர்களில் இரண்டு பேர் மருத்துவமனையில் இருந்தார்கள். கிழவனைக் காப்பாற்றிய செய்தியை வாசித்த மறுநாள் பகல் ஐந்து மணிக்கு திரு கெ.யின் தலைமையில் பத்து இருபது இளைஞர்கள் மருத்துவமனைக்குள் ஜுரம் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கக் கூடிய வார்டில் இருந்த கிழவனை ஒரு நோயாளிக்கு முன்னால் கூட்டமாகக் கூடி நிற்பதையும் புகைப்படம் எடுப்பதையும் பார்த்தார். அப்போது தான் பி.ஸி. 39-க்கு பத்திரிகைச் செய்தி ஞாபகத்தில் வந்தது. திரு கெ., அவர்களுக்கும் இளைஞர்கள் சங்கத்திற்கும் புகழ் வாங்கித் தந்த வயதான கிழவனைச் சற்று பார்க்க வேண்டும் என்ற ஆசை பி.ஸி. 39-க்கும் உண்டானது. பார்க்க வந்திருந்தவர்கள் எல்லாரும் சென்றவுடன் பி.ஸி. 39 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த பிரிவிற்குள் சென்றார். கிழவனுக்கு முன்னால் போய் நின்றார். வெள்ளைத் துணி விரிக்கப்பட்டிருந்த கட்டிலில் அசைவே இல்லாமல் கிழவன் படுத்திருந்தான். வெறும் எலும்பும் தோலும் மட்டுமே இருந்தன. கண்கள் சிவந்து தீப்பந்தங்களைப் போல இருந்தது. அவற்றில் பயங்கரமான கோபம் வெளிப்பட்டது. யாருடன்...? எதற்கு? பி.ஸி. 39 ஆச்சரியப்பட்டார். ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் தனக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறார் என்ற உணர்வு கூட கிழவனிடம் இல்லை. கவனம் முழுவதும் மருத்துவமனையைச் சுற்றிலும் இருந்த அடர்ந்த மரங்களிடையே இருந்தன.
கிழவனிடம் உரையாடலை எப்படி ஆரம்பிப்பது என்பதைப் பற்றி பி.ஸி. 39-க்கு வடிவமே கிடைக்கவில்லை. எனினும், ஆள் அதுதானா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்த பி.ஸி. 39 கிழவனிடம் கேட்டார்:
"மாமா, உங்களையா ஆற்றில் இருந்து காப்பாற்றியதாகக் கூறுகிறார்கள்?''
கிழவன் மெதுவாக முகத்தைத் திருப்பினான். கடினமான கோபத்துடன் அந்த தீப்பந்தங்களைப் போல இருந்த கண்கள் பி.ஸி. 39-ன் முகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. கொலை செய்தவர்களுடனும் பிக்பாக்கெட்களுடனும் தினமும் வாழ்ந்த தன்னுடைய பதினேழு வருட டிப்பார்ட்மெண்ட் வாழ்க்கைக்கு மத்தியில் இந்த அளவிற்கு கூர்மையாக பி.ஸி. 39-ஐ பார்ப்பதற்கான துணிச்சல் யாருக்கும் இருந்ததில்லை.
மீண்டும் பி.ஸி. 39 கேள்வியைத் திரும்பக் கேட்டபோது, கிழவன் மெதுவான குரலில் கேட்டான்:
"அதைத் தெரிந்து?''
"தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை'' - பி.ஸி. 39-ன் குரல் அமைதி தவழ்வதாகவும் கருணை நிறைந்ததாகவும் இருந்தது.
"மாமா, உங்களையா ஆற்றில் இருந்து நீர் குடித்து இறக்காமல் காப்பாற்றினார்கள்?'' என்று போலீஸ்காரர் கேட்டதற்கு கிழவன் "ஆமாம்” என்று பதில் கூறினான்.
பி.ஸி. 39 ன் கேள்வி தொடர்ந்தது:
"ஆற்றில் விழுவதற்குக் காரணம்? குளித்துக் கொண்டிருந்தீர்களா?''
அதற்கான பதிலைக் கேட்டதும் பி.ஸி. 39 நடுங்கிவிட்டார். கிழவன் சொன்னான்:
"நான் ஆற்றில் குதித்தேன்.''
"அது எதற்காக?''
அதற்கு பதில் கூறும் வகையில் கிழவன் கேட்டான்:
"ஓடிக் கொண்டிருக்கும் நீரில், நீச்சல் தெரியாத ஒருவன் எதற்காக குதிக்க வேண்டும்? என்னிடம் முழுமையாக பலம் இருந்த காலத்தில் நான் வேலை செய்து வாழ்ந்தேன். இப்போ எனக்கு சக்தி இல்லை. எனக்கு உணவு தருவதற்கு யாரும் இல்லை. நான் இந்த உலகத்தில் தனி மனிதனாக இருக்கிறேன். பிச்சை எடுத்து வாழ்வது என்பது... அது இருக்கட்டும்... இந்த உடலால் எனக்கு இனிமேல் சிறிதளவு கூட பயன் இல்லை. இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?''
பி.ஸி. 39 எதுவும் கூறவில்லை. அவருக்கு சட்டம் தெரியும். தற்கொலை செய்து கொள்வதற்கு முயற்சிப்பது குற்றச் செயல். கிழவனைக் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து மேஜிஸ்ட்ரேட்டிற்கு முன்னால் கொண்டு போய் நிறுத்த வேண்டும். சட்டப்படி அதைத்தான் செய்ய வேண்டும். எனினும், "மாமா, இந்த விஷயத்தை யாரிடமாவது கூறியிருக்கிறீர்களா?'' என்று கேட்ட பி.ஸி. 39-ன் கேள்விக்கு கிழவன் பதில் சொன்னான்:
"எல்லாரிடமும் நான் சொல்லிவிட்டேன்.''
"யாரிடமெல்லாம்?''
"என்னைப் பிடித்து கரைக்குக் கொண்டு வந்த அந்த இளைஞர்களிடமும் இங்குள்ள டாக்டரிடமும்.''
"அவங்க இரண்டு பேருக்குத்தானே தெரியும்? இனிமேல் இதை யாரிடமும் கூறக்கூடாது. மாமா நீங்க நடந்து கொண்டது தவறானது. தற்கொலை செய்து கொள்வதற்கு முயற்சி செய்தால், அதற்கு தண்டனை இருக்கிறது. ஆறு மாதம் முதல் இரண்டரை வருடங்கள் வரை...''
கிழவனுக்கு நிம்மதியாக இருந்தது. "அப்படியென்றால் என்னைக் கைது செய்து தண்டனை கொடு. சிறைக்குச் சென்றால் உணவு கிடைக்குமா?''
"அதற்கெல்லாம் மிகவும் தாமதம் ஆகும். சிறைக்குப் போவதற்கு முன்பு கொஞ்ச காலம் லாக் அப்பில் இருக்க வேண்டும். மூட்டைப் பூச்சி கடிப்பதைத் தாங்கிக் கொண்டு, தொற்று நோய் உள்ளவர்களுடன், காற்றும் வெளிச்சமும் இல்லாத இருட்டு அறைகளுக்குள், சிறுநீருக்கு மத்தியில் படுத்திருக்க வேண்டும்.