பத்திரிகைச் செய்தி - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7307
சரியான நேரத்திற்கு உணவு கிடைக்காது. அதே நிலையில் ஒன்றரை வருடம் வரை சில நேரங்களில் இருக்க வேண்டியதிருக்கும். அதற்குப் பிறகுதான் தண்டிப்பார்கள். மாமா, நீங்க இந்த வயதான காலத்தில் சிறைக்கு ஏன் செல்ல வேண்டும்?''
"எனக்கு சிறைக்குப் போக வேண்டும் என்றில்லை. என்னுடைய இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். பிரகாசமும் தெம்பும் இல்லாமல், படுப்பதற்கு இடமில்லாமல், உணவிற்கு வழியில்லாமல் ஆதரவற்ற ஒரு உயிராக வாழ்வதற்கு நீங்கள் விரும்புவீர்களா?''
"இருந்தாலும்... தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. அது அரசாங்கத்தின் சட்டம். மாமா, உங்களைப்போல ஆதரவு இல்லாத எவ்வளவு பேர் இந்த ஊரில் வாழ்கிறார்கள்? யாரும் தற்கொலைக்கு முயற்சிப்பதில்லையே!''
"இரண்டு கால்களைக் கொண்ட மாடுகள்! சுய உணர்வு இல்லாமல் போய்விட்டது. அதனால்தான் தங்களுடைய வாழ்க்கை தேவையற்ற ஒரு சுமை என்று அவர்களுக்குத் தோன்றாமல் இருக்கிறது. நடந்து திரியும் பிணங்கள்!''
"ஆனால்... மாமா, உங்களுடைய நம்பிக்கை நெறிமுறைச் சட்டத்திற்கு எதிராக இருக்கிறது.''
கிழவன் சற்று நேரம் பார்த்தான். தொடர்ந்து நடக்கும் விஷயங்களைப் பற்றி மெதுவான குரலில் ஒரு சொற்பொழிவு:
"ஆமாம்... நான் எந்தவொரு உடல்நலக்கேடும் இல்லாமல் இந்த மருத்துவமனையில் படுத்திருக்கிறேன். எனக்கென்று இருக்கும் ஒரே உடல் நலக்கேடு- பசிதான். அதற்கு எனக்கு பார்லி நீர் தர்றாங்க! மிகுந்த படிப்பையும் நல்ல சம்பளத்தையும் கொண்ட அரசாங்க அதிகாரிதானே டாக்டர்? அவர் கூறுவதுதானே சரியாக இருக்கும்? அதாவது - பணம் இல்லாத நோயாளிகள் எல்லாருக்கும் இங்கே பார்லி நீர்! பணம் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவமனை சார்பிலேயே பாலும் ரொட்டியும்.''
கிழவன் கடுமையான வேதனையுடன் தொடர்ந்து சொன்னான்: "சொல்லப் போனால்... உள்ளவன் இல்லாதவனுக்குக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நெறிமுறைச் சட்டம் இருக்கிறது. நம்முடைய ஊரில் உள்ளவன் இல்லாதவனுக்கு நாழி கஞ்சி நீராவது கொடுப்பானா? இறக்கும் நிலையில் இருந்தாலும், இன்னும் ஒரு நெறிமுறைச் சட்டம் இருக்கிறது- நாம் அனைவரும் சகோதரர்கள், கடவுளுக்கு முன்னால் சமமானவர்கள், இந்த பூமி நம்முடைய பொதுவான சொத்து- இப்படியெல்லாம்... ஆனால், மிகச் சிலர் இதைத் தங்களின் கைக்குள் போட்டுக் கொண்டு இதில் கிடைக்கும் உற்பத்திப் பொருட்களை அதிகமான விலைக்கு விற்று லாபத்தை அதிகமாக்கி பணக்காரர்களாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியே நூற்றாண்டுகள் கடந்த பிறகு அதுவும் ஒரு நெறிமுறைச் சட்டமாக ஆனது. வறுமையில் இருப்பவன் பணக்காரனின்- அரசாங்க பதவியில் இருப்பவனின்- அரசியல் தலைவரின்- மதத் தலைவரின் முகத்தை பயமில்லாமல் சற்று நேரம் பார்த்து விட்டால், அது நெறிமுறைச் சட்டமாகி விடுகிறது! அவனை தண்டிப்பதற்கு சட்டமும் போலீஸும் பட்டாளமும் சிறையும் தூக்குமரமும் இருக்கின்றன! ஊரில் இருக்கும் வறுமையில் சிக்கிக் கிடக்கும் ஏழைகளுக்காக அரசாங்கமோ அரசியல் தலைவர்களோ மதங்களின் தலைவர்களோ... யாராவது ஏதாவது செய்கிறார்களா? குப்பைத்தனமான சட்டங்கள்! பட்டினி கிடந்து சாகப்போகும் ஒருவன் ஒரு நாளுக்கு முன்னால் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது! நெறிமுறைச் சட்டம்!''
அதிகமான கோபத்துடன் கிழவன் காறித் துப்பினான். ஒரு கப குவியல்! "பாருங்க... உங்களுடைய நெறிமுறைச் சட்டம்... ஒழுங்கு... அது வெறும் கபம்! அவ்வளவுதான்.''
பி.ஸி. 39 அதிர்ச்சியடைந்து விட்டார். சதை முழுவதும் வறண்டு போய் வெறும் தோலால் மூடிய உயிருள்ள அந்த எலும்புக் கூட்டிற்குள் இருந்து அப்படிப்பட்ட கருத்துகள் வெளியே வரும் என்று பி.ஸி. 39 எந்தச் சமயத்திலும் எதிர்பார்க்கவில்லை. பி.ஸி. 39-க்கு தாங்க முடியாத கவலை உண்டானது.
கிழவனிடம் என்ன மாற்று வழி கூறுவது? வேலை செய்து சாப்பிடுவதற்கான சக்தி இல்லை. காப்பாற்றுவதற்கு ஆள் இல்லை. வாழ்வதற்கு ஆசை இல்லை. அப்படியே இருந்தாலும், யார் காப்பாற்றப் போகிறார்கள்?
பி.ஸி. 39 திரும்பிச் செல்வதற்கு முன்னால் ஒரு மேலோட்டமான அறிவுரையைக் கூறினார்:
"மாமா, எதையாவது சிந்தித்து மனதைக் கவலைக் குள்ளாக்காதீங்க!''
அதற்கு பதிலாக கிழவன் சற்று நேரம் பார்த்தான். கோபமும் வெறுப்பும் கலந்த ஒரு கூர்மையான பார்வை! அதைத் தொடர்ந்து உண்டான பயங்கரமான சம்பவம் மறுநாள் இரவு கிட்டத்தட்ட மூன்று
மணிக்கு நடைபெற்றது. நிலவு வெளிச்சத்தில் அதை பி.ஸி. 39 மிகவும் தெளிவாகப் பார்த்தார்; தடுக்கவில்லை.
அந்தச் சம்பவத்தைப் பற்றி அரசாங்க அதிகாரிகளும் வர்த்தகர்களும் அனைத்து மதங்களின் தலைவர்களும் தொழிலாளர்களின் தலைவர்களும் சமூக அமைப்புகளின் தலைமைப் பதவிகளில் இருப்பவர்களும் பத்திரிகை ஆசிரியர்களும்- இப்படி நாட்டின் நாலா பக்கங்களிலும் இருக்கும் பல கோடி மனிதர்களுடன் சேர்ந்து பி.ஸி. 39 நாளிதழில் வாசித்த முக்கியமான செய்தி இப்படி இருந்தது:
"மே 16: ... ஊரில் இருக்கும் மருத்துவமனையில் இருந்த ஒரு நோயாளி கடந்த இரவு மருத்துவமனை பகுதியில் இருந்த ஒரு மரத்தின் கிளையில் தூக்குப் போட்டு இறந்துவிட்டார். கயிறுக்கு பதிலாக அவர், கிழிந்து தைக்கப்பட்ட மருத்துவமனையின் வேட்டியைப் பயன்படுத்தி இருக்கிறார்.'