தங்க மோதிரம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8146
அதற்குப் பிறகு என் மனம் கட்டுப்பாடில்லாமல் அலைய ஆரம்பித்துவிட்டது. சுகமான பல விஷயங்களையும் மனதில் அசை போட்டவாறு நான் நடந்து செல்லும்போது, இந்துக்கள் என்னைப் பார்த்துக் கேட்டார்கள்.
"பிரசவம் ஆயிடுச்சா? பொண்ணுதானே?''
நான் சொன்னேன்:
"இந்துக்கள் இந்த விஷயத்துல ஏமாறப் போறது உண்மை. என்னோட மனைவி பெறப் போறது தங்கக்கட்டி மாதிரி ஒரு ஆண் குழந்தையைத்தான். நீங்க ஐம்பது ரூபா எனக்குத் தந்தே ஆகணும்...''
இப்படி இரவும் பகலும் மாறி மாறி ஓடிக்கொண்டிருக்க, இனிமையான ஒரு காலைப் பொழுதில் நான் திடுக்கிட்டு எழுந்தேன். அடுத்த அறையில் இருக்கும் என்னுடைய மனைவியின் உரத்த சத்தம்... முனகல்கள்... முணுமுணுப்புகள்... பிரசவம் ஆகப் போகிறது!
குஸால்!
நான் சொன்னேன்:
"சிரிடீ... எவ்வளவு பெரிய காரியத்தை நீ செய்யப்போற! நல்லா வாய் விட்டுச் சிரி...''
அவள் பிரசவமாவதை நான் இன்னொரு அறையில் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பது தெரிந்ததும், அவளுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! அவள் உரத்த குரலில் கூப்பாடு போட்டாள்.
நான் சொன்னேன்:
"பேசாம இருடி! இதென்ன பெரிய விஷயமா? எத்தனையோ ஆயிரம் பெண்கள் இந்த உலகத்துல பிள்ளை பெத்துக்கிட்டுத்தான் இருக்காங்க. இந்த பிரசவ வேதனை அது இதுன்னு சொல்றாங்கள்ல... ஆண்களான எங்களுக்கு இதைப் பற்றி நல்லாவே தெரியும். போசாம இரு...
மூச்... ஜாக்கிரதை!''
அடுத்த சில நிமிடங்களுக்கு எந்தவித ஆர்ப்பாட்டத்தையும் காணோம். தொடர்ந்து வேதனையின் வெளிப்பாடு மாதிரி... பல கடவுள்களின் பெயர்களைச் சொல்லியவாறு கூப்பாடு போட்டாள். நான் அவளை அழைத்துச் சொன்னேன்:
"அடியே... பெரிய பெரிய பெயர்களைச் சொல்லுறதுக்கு மத்தியில "அல்லாமா பஷீர்” என்ற பேரையும் சேர்த்துச் சொல்லுடி. உனக்கு ஒரு பிரச்சினையும் இருக்காது. ம்... சீக்கிரம்!''
அப்போது அவளிடமிருந்து ஆர்ப்பாட்டமெல்லாம் அடங்கி விட்டது. வெறும் முக்கலும் முனகலும் மட்டும்தான். இந்த நேரத்தில் பிரசவம் பார்க்கும் ஒரு அழகான நர்ஸ் என் அருகில் வந்து நின்றாள். அவள் ஒரு இந்து அழகி! அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இன்னும் அவள் குழந்தையும் பெறவில்லை. இருந்தாலும், அவளை ஐந்து ரூபாய்க்கு பந்தயம் கட்டச்சொன்னால் என்ன என்று நினைத்தேன். அதற்குள் அவள் என்னைச் சத்தம் போட ஆரம்பித்தாள்.
நர்ஸ் சொன்னாள்:
"பேசாம அமைதியா இருங்க. எதையாவது சொல்லி அவுங்களை சிரிக்க வைக்காதீங்க. பிரசவ வேதனையைப் பற்றி ஆம்பளைகளுக்கு என்ன தெரியும்?''
இப்படி என்னைப் பார்த்து சொல்லியவாறு அந்தப் பெண் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். நான் ஒரு சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்து புகைக்க ஆரம்பித்தேன். மனதில் ஒரே பரபரப்பு. பிறக்கப் போவது ஆணாக இருக்குமா, பெண்ணாக இருக்குமா? எது வேண்டுமானாலும் இருக்கட்டும். எந்தவித பிரச்சினையும் இல்லாமல் பிரசவம் நல்ல முறையில் நடந்து முடிந்தால் சரி என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். அதாவது- பந்தயம்... பணம் எல்லாவற்றையும் கொஞ்ச நேரத்திற்கு நான் மறந்துவிட்டேன் என்று இதற்கு அர்த்தம். அதன் விளைவு- இனிமையான குழந்தையின் அழுகை!
நான் ஓடிப்போய் வாசல் பக்கத்தில் நின்றேன். கதவை மூடி வைத்திருக்கிறார்கள். ஆர்வத்தில் உரத்த குரலில் நான் சொன்னேன்:
"கொஞ்சம் நான் குழந்தையைப் பார்க்கணும்!''
நான் சொன்னதற்கு பதில் மாதிரி குழந்தையின் அழுகைக் குரல்! ஆண்களைத் திட்டிக்கொண்டிருக்கும் நர்ஸின் குரல்!
சிறிது நேரம் சென்றதும் கதவு திறக்கப்பட்டது. தங்க விக்ரகத் தைப் போல ஒரு அழகான குழந்தை! அதன் இரண்டு கால்களையும் பிடித்து தலைகீழாகத் தொங்கவிட்டவாறு நர்ஸ் என்னை நோக்கி கொண்டு வந்தாள். நான் அதை வாங்கி நேராகப் பிடித்து ஒரு இனிய முத்தத்தைப் பதித்து, குழந்தையுடன் நேராக என் மனைவியிடம் போனேன். அவள் வியர்வையில் குளித்துப் படுத்திருந்தாள். கண்கள் திறந்திருக்கவில்லை. குழந்தையை நான் அவளுக்குப் பக்கத்தில் படுக்க வைத்தேன். பிறகு... மெதுவாக அவளின் விரலில் இருந்த தங்க மோதிரத்தை நான் கழற்றி எடுத்தேன். தொடர்ந்து... தர்ம கணக்கில் என் மனைவிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்.
"அடியே... ரொம்ப ரொம்ப சந்தோஷம். வாழ்த்துகள்!'' என்று அவளைப் பார்த்துச் சொல்லியவாறு வெளியே வந்தேன். சுவரில் இருந்து கொஞ்சம் சுண்ணாம்பை எடுத்து மோதிரத்தின் மேல் தேய்த்து மினுமினுப்பாக்கியவாறு, அதை என் விரலில் அணிந்தேன்.
"சலாம் மன்னரே!” என்று மோதிரத்தைப் பார்த்துச் சொல்லியவாறு, பற்கள் தேய்த்து, சவரம் செய்து, குளித்து முடித்து, நன்கு தோய்க்கப்பட்ட உடைகள் அணிந்து, காப்பி குடித்து, சிகரெட்டைப் புகைத்தவாறு இந்துக்களைத் தேடி நடந்தேன். அடுத்த சில நிமிடங்களிலேயே அவர்களைக் கண்டுபிடித்து நான் சொன்னேன்:
"என் பொண்டாட்டி பிரசவமாயிட்டா...''சொல்லிவிட்டு இந்துக்களை உற்றுப் பார்த்தேன். அதோடு நிற்காமல், ஒரு வெற்றி வீரனைப்போல பயங்கரமான ஒரு சிரிப்பு சிரித்தேன். அதைப் பார்த்து இந்துக்கள் நடுங்கிவிட்டார்கள். நான் சொன்னேன்:
"காலம் காலமாக இங்கே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பந்தயமும் போட்டியும் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. அப்பல்லாம் ஜெயிச்சது யாரு? முஸ்லிம்தானே! ஒழுங்கா எடுங்க காசை...!''
இந்துக்கள் அதற்கு பதிலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அந்த ஐந்து பேரும் சேர்ந்து ஐம்பது ரூபாயை என் கையில் தந்தார்கள். அவர்களிடம் என் விரலில் இருந்த தங்க மோதிரத்தைக் காட்டினேன்.
"பாருங்க... மன்னர் தந்த மோதிரம். சுத்தத் தங்கத்தால் ஆனது. இது விக்ரமாதித்த மகாராஜாவுக்குச் சொந்தமானது. இல்ல... இல்ல.. அசோக சக்கரவர்த்தியோடது... ஸாரி... ஹாரூண் அல் ரஷீதுக்குச் சொந்தமானது...''
"இது எப்படி உங்களுக்குக் கிடைச்சது...?'' இந்துக்கள் விசாரித்தார்கள்.
நான் சொன்னேன்: "இது எங்களோட குடும்பச் சொத்து!''
"அப்படியா?'' ஒரு இந்து சொன்னான்: "இது உங்க குடும்பச் சொத்தா? இதைப் பற்றிய சரித்திரம் எங்களுக்குத் தெரியாதுன்னு நினைச்சீங்களா? திருடர்களின் ராஜாவான காயங்குளம் கொச்சுண்ணியோ, சீப்பவரானோ இந்துக்களிடமிருந்து தட்டிப் பறிச்சதா இருக்கும் இது!''
எது எப்படியோ... இந்துக்களிடமிருந்து வாங்கிய ஐம்பது ரூபாயில் அவர்களுக்கு தேநீரும் பலகாரமும் வாங்கிக் கொடுத்தேன். ஆளுக்கு ஒரு கோல்ட் ஃப்ளேக் பிடித்தோம். இந்துக்கள் எல்லாரும் லாட்டரி டிக்கெட் வாங்க நினைத்தார்கள். முதல் பரிசு ஒரு அருமையான முதல் தர கார். ஒரு ரூபாய்க்கு ஒரு கார் கிடைக்கிறது என்றால் சாதாரண விஷயமா? இந்துக்கள் இரண்டு மூன்று டிக்கெட்டுகள் வாங்கினார்கள்.