படுக்கையில் சிறுநீர் கழிப்பவன் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8079
யானையைத் தாண்டி ஓலைக் கீற்றில் வாப்பா, மாமா, மாதவன் நாயர், சங்கரன் குட்டி, கிருஷ்ணன், அவுஸேப் மாப்பிள்ளை -எல்லா ரும் உட்கார்ந்து பழம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாமா வின் மடியில் எப்போதும் போல அப்துல் காதர் உட்கார்ந்திருக்கிறான். அவனுடைய வாயிலும் இரண்டு கைகளிலும் ஒவ்வொரு பழம்.
வாப்பா பெரிய ஒரு குலை பாளேங்கோடன் பழத்தைக் கொண்டு வந்து யானைக்கும் யானைக்காரர்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுத் தார். எனக்கு மட்டும் தரவில்லை. கால் குலை பழம் வாப்பாவிற்கு அருகில், அப்துல் காதருக்கு அருகில் ஓலையில் இருக்கிறது. நான் உரத்த குரலில் அழைத்துச் சொன்னேன்: “வாப்பா... எனக்குப் பழம் தரவில்லை.''
“இங்கு வச்சிருக்குடா.'' வாப்பா சொன்னார்: “நீ யானையின் அடியின் வழியாக வா.''
இந்தப் பக்கம் முழுவதும் பெண்கள். என்னுடைய உம்மா, தங்கைமார்கள், உம்மாவின் உம்மா, அத்தை, நங்ஙேலி, அவுஸேப் மாப்பிள்ளையின்- சங்கரன் குட்டியின்- கிருஷ்ணனின் மனைவி மார்கள்... பெண்களின் கூட்டத்தில் நத்தை தாமுவும் இருந்தான்.
உம்மா சொன்னாள்: “பயப்படாதடா.''
பயத்தைவிட பழம் கிடைக்காததால் உண்டான கோபமும் வருத்தமும்தான் அதிகமாக இருந்தன. அப்துல் காதர் குப்புகுப்பு என்று பழத்தைத் தின்று கொண்டிருந்தான். நான் பெண்களுக்கு அருகில் யானையின் இந்தப் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறேன். கோபமும் பதைபதைப்பும் பயமும்... கால்கள் இரண்டையும் பூமி விழுங்கிவிட்டதைப் போல இருந்தன. அசையவில்லை. வியர்வையில் குளித்துக் கொண்டிருந்தேன். வாயில் நீர் இல்லை. சிறுநீர் கழிக்க வேண்டும் போல தோன்றுகிறது. கஷ்டம்... தலை சுற்றுகிறதோ? கண்களின் பார்க்கும் சக்தி இல்லாமல் போய்விட்டதோ? இல்லை. கருகருத்த வாசல் வழியாகப் பார்ப்பதைப் போல யானையின் அடிப்பகுதியின் வழியாக வாப்பாவையும் மற்றவர்களையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. பழக்குலையையும். அப்துல் காதர் கைகளில் இருந்த இரண்டு பழங்களையும் விழுங்கி முடித்துவிட்டான். மீண்டும் அவன் பழத்தை உரிக்கிறான். நான் அழைத்துச் சொன்னேன்:
“வாப்பா... அவன் அந்தப் பழங்கள் முழுவதையும் தின்று விடுவான்.''
வாப்பா பழக்குலையை எடுத்து எனக்கு நேராக நீட்டினார். மாமா பயங்கரமான குரலில் கட்டளையிட்டார்.
“இங்கே வாடா!''
நான் அசையவில்லை.
கிருஷ்ணனின் மனைவி சக்தி சொன்னாள்:
“அந்த கால்களுக்கு நடுவில் நுழைந்து அந்தப் பக்கம் போ. உனக்கு வெட்கமாக இல்லையா? கல்யாணம் பண்ண வேண்டிய வயசு வந்தி டுச்சு. அதற்குப் பிறகும் படுத்துக் கொண்டு சிறுநீர் கழிக்கிறது...''
“படுத்துக் கொண்டு சிறுநீர் கழிப்பது நான் இல்லை. அப்துல் காதர்தான்.''
“நீதான்!'' உம்மா சொன்னாள்.
நங்ஙேலி சொன்னாள்: “ஏன் பயப்படுறே? நான் இங்கே நிற்கிறேன்ல?''
அப்போது அவனுடைய கழுத்தைப் பிடித்து நெறிக்க வேண்டும் போல எனக்குத் தோன்றியது.
உம்மா சொன்னாள்:
“மகனே, பிஸ்மி சொல்லிட்டுப் போ.''
நான் பிஸ்மி சொன்னேன். வாப்பா பழக்குலையை நீட்டிக் கொண்டிருந்தார். பயங்கரமான கோபம். யானையின் பலமான வாசனை. அப்துல்காதர் குமுகுமா என்று பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் பழங்கள் முழுவதையும் சாப்பிட்டு விடுவான். நான் கனவில் நடப்பதைப் போல நடந்தேன். யானையின் தாங்கிக் கொள்ள முடியாத நாற்றம். நான் குகைக்குள் செல்வதைப் போல யானையின் கால்களுக்கு நடுவில் நுழைந்து அந்தப் பக்கத்தை அடைந்தபோது என்னுடைய தலையில் சிறுநீர் கழிப்பதற்கு யானை ஒரு வீணான முயற்சியைச் செய்தது. யானை மிகவும் தாமதமாக சிறுநீர் கழிக்கத் தொடங்கியது. யானையின் சிறுநீர் என்னுடைய தலையில் விழவில்லை.
மக்கள் சந்தோஷத்துடன் சத்தம் போட்டார்கள். வாப்பா என்னை அள்ளி எடுத்தார். நான் கைகளையும் கால்களையும் உதறி, கீழே இறங்கினேன். பழக்குலையைக் கையில் எடுத்தேன். அப்துல் காதரின் கையில் இருந்த பழங்களைப் பிடுங்கினேன். பிறகு என்னுடைய நண்பர்கள் எல்லாருக்கும் ஒவ்வொரு பழமாகக் கொடுத்தேன். கணக்கு காட்டித் தரும் சினேகிதிக்கும் ராதாமணிக்கும் ஆளுக்கு இரண்டு பழங்கள் வீதம் கொடுத்தேன். நாங்கள் பழத் தோல்களை ஒன்று சேர்த்து ஒரு உருண்டையாக ஆக்கி யானைக்குக் கொடுத்தோம். கொடுத்தவன் யானைக்காரன்.
யானையின் கால்களுக்கு நடுவில் பயமே இல்லாமல் நுழைந்த யோக்கியன்! மகான்!
நான் அப்படி சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கால்களுக்கு நடுவில் நுழைந்த பிறகு நான் படுத்துக் கொண்டு சிறுநீர் கழிக்கவில்லை என்று உம்மா கூறுகிறாள். காரணம்- நான் படுப்பது வாப்பாவுடன் அல்ல. உம்மாவுடன். அப்படி அனைத்தும் நல்ல முறையில் போய்க் கொண்டிருக்கும்போது ஒரு பாதி இரவு வேளை யில், "அய்யோ' என்றொரு அழுகைச் சத்தம் கேட்டது. வாப்பா அப்துல் காதரை மனம் போனபடி அடித்துக் கொண்டிருக்கும் கோலாகலம். தீப்பெட்டியை உரசி விளக்கைப் பற்ற வைத்துப் பார்க்கும்போது, அப்துல்காதர் வாப்பாவின் படுக்கையில் சிறுநீர் கழித்திருக்கிறான்!
அப்படியென்றால் இவ்வளவு காலமாக வாப்பாவின் படுக்கையில் தொடர்ந்து சிறுநீர் கழித்த குற்றவாளி யார்? இவ்வளவு காலமும் பழி சுமத்தப்பட்ட நிரபராதி யார்? உலகம் போகும் போக்கைப் பார்த்தீர்களா? ஆண் யானையின் கால்களுக்கு நடுவில் நுழைந்திருக்க வேண்டியவன் அப்துல் காதர்தானே? ஆனால், அப்துல் காதர் இரண்டு கைகளாலும் நெஞ்சில் அடித்துக் கொண்டு வாயைப் பிளந்து கொண்டு அழுது கொண்டிருக்கிறான். செல்லப் பிள்ளை அழுது கொண்டே சொன்னான்:
“சிறுநீர் கழித்தது நான் இல்லை. அண்ணன் மறைந்து வந்து சிறுநீர் பெய்துவிட்டுப் போய்விட்டார்.''
அவன் தவறு செய்தவன் அல்ல!
“உண்மையாக இருக்கும்.'' உம்மா சொன்னாள்.
உலகத்தின் போக்கைப் பார்த்தீர்களா? நிரபராதிகள் தண்டிக் கப்படுகிறார்கள். குற்றவாளி நான்! சமீபத்தில் பார்த்த சிறுநீரான சிறுநீரைக் கழித்த அப்துல் காதர் பரம யோக்கியன்!
சிறுநீர் பற்றிய வழக்கு ஆதாரம் எதுவும் கிடைக்காமல் கிடக்கிறது. உம்மாவிற்கும் வாப்பாவிற்கும் சந்தேகம் இருந்தது. குற்றவாளி நானா, அப்துல் காதரா? எது எப்படி இருந்தாலும், மக்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்துவிட்டார்கள். பள்ளிக்கூடத்திலும் இரண்டு கருத்துகளையும் கொண்டவர்கள் இருந்தார்கள். அப்துல் காதர் பலருக்கும் பலவற்றையும் கொடுத்து தன் பக்கம் சேர்த்துக் கொண்டான். நத்தை தாமு அணி சேரா கொள்கையைப் பின்பற்றி னான். அவன் சொல்லித் தந்தான்:
"படுக்கையறையில் படுத்துக் கொண்டு சிறுநீர் கழிப்பது நானோ அப்துல் காதரோ அல்ல... வாப்பாதான்!'
அதைக் கேட்டு நங்ஙேலியும் சங்கரன் குட்டியும் சேர்ந்து நத்தை தாமுவை வயல் முழுவதும் விரட்டி மனம் போனபடி அடித்தார்கள்.