
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு வந்த நோய்களையும், நல்லெண்ணெய்யைப் பயன்படுத்தி வாய் கொப்பளித்ததன் மூலம் அவை முழுமையாக குணமடைந்ததைப் பற்றியும் சந்தோஷத்துடன்
கூறிக் கொண்டிருக்க, மைலாப்பூரிலிருந்து வந்திருந்த ராமமூர்த்தி என்ற அரசு ஊழியர் தன்னுடைய ‘ஆயில் புல்லிங்’அனுபவத்தைக் கூறினார்:
“தமிழக அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனத்தில், 20 வருடங்களுக்கும் மேலாக நான் பணியாற்றி வருகிறேன்.
சில வாரங்களாக என் குதிகாலில் உண்டான வெடிப்பு என்னைப் பாடாகப் படுத்திக்கொண்டு இருந்தது. கோடைகாலத்தில் காய்ந்து கிடக்கும் நிலத்தில் உண்டாகும் வெடிப்பு மாதிரி, என் குதிகாலில் திடீரென வெடிப்பு வந்தது. இரண்டு கால்களிலும் வெடிப்பு இருந்தால் எப்படி இருக்கும்?!
வழக்கமாக பேருந்தில் அலுவலகத்துக்குச் செல்லும் நான், பஸ் நிறுத்தத்தில் இறங்கி, அலுவலகத்துக்குச் செல்ல கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். அப்படி, நடக்கும்போது குதிகால்களில் உண்டான வெடிப்பால், கீழே கால்களை வைக்கமுடியாத அளவுக்கு தாங்கமுடியாத வலியும் வேதனையும் நான் உணர்ந்தேன். பல நேரங்களில் இந்த வேதனையைத் தாங்கமுடியாமல், தெருவின் ஓரத்தில் உட்கார்ந்து கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.
மருந்து கடைகளில் கால் வெடிப்புக்கென விற்கப்படும் க்ரீம்களை வாங்கித் தடவிப் பார்த்தேன். அதனால், எந்தப் பலனும் இல்லை. என்ன செய்வது என்று தவியாகத் தவித்துக்கொண்டு இருந்த சமயத்தில்தான், உடல்நலம் பற்றி வரக்கூடிய ஒரு மாத இதழில், ‘காலில் உண்டாகும் வெடிப்புகள் இல்லாமல் போக வேண்டுமானால் அதற்குச் சரியான மருந்து நல்லெண்ணெய்யை கொப்பளிப்பதுதான்’என்று வெளியாகி இருந்தது.
பாலைவனத்தில் தாகம் ஏற்பட்டு நீருக்காக ஏங்கிக்கொண்டு இருப்பவனின் மனநிலையில் அப்போது நான் இருந்தேன்.
அந்தச் செய்தியைப் படித்த அடுத்த நிமிடமே, வீட்டுக்கு அருகில் இருந்த மளிகைக் கடைக்குச் சென்று, ‘ஆயில் புல்லிங்’குக்காகவே தயாரித்து விற்பனை செய்யப்படும் சின்ன சின்ன ‘இதயம்’ நல்லெண்ணெய் பாக்கெட்களை வாங்கினேன்.
மறுநாளே ஆர்வத்துடன் ‘ஆயில் புல்லிங்’ செய்ய ஆரம்பித்துவிட்டேன். பத்து நாட்கள் தொடர்ந்து அதை பண்ணியிருப்பேன். என் உடல் நிலையில் உண்டான முன்னேற்றத்தைப் பார்த்து நானே வியப்பில் ஆழ்ந்துவிட்டேன்.
பல நாட்களாக என்னை வேதனையில் மூழ்கச் செய்து, நடக்கும்போது நரக வேதனையைத் தந்துகொண்டு இருந்த குதிகால் வெடிப்பு, இப்போது இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது. குதிகால் வெடிப்பு உண்டான நாளில் இருந்து இரவு வேளையில் வேதனையின் காரணமாக, தூங்கமுடியாமல் வெறுமனே புரண்டுகொண்டு இருப்பேன். இப்போது அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது.
இரவில் எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியாக தூங்குகிறேன். நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு, நல்லெண்ணெய்க்கு இப்படியொரு சக்தியா?” என்று உருகிவிட்டார் அந்த அரசு ஊழியர்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook