கண்கள் இங்கே! கருவளையம் எங்கே?
- Details
- Category: ஆரோக்கியம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6337
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
அவரைத் தொடர்ந்து, ‘ஆயில் புல்லிங்’செய்ததன் மூலம் சிறிதும் எதிர்பாராத பலனைக் கண்டதாகக் கூறி, மேடைக்கு வந்தார் ஒரு கல்லூரி மாணவி. பெயர் -பத்மப்ரியா. வயது 19. அவர் மேடையில் ஏறியதும்,‘என்ன சொல்லப் போகிறார் அந்தப் பெண்’என்று எல்லோரும் அவரையே பார்த்தார்கள். அந்த மாணவி சொன்னார்:
“நான் சென்னையிலுள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் எம்.ஏ., முதலாம் ஆண்டு படித்துக்கொண்டு இருக்கிறேன். எல்லாப் பெண்களையும் போல நானும் உடல் நலனில் மிகவும் அக்கறையுடன் இருக்கக்கூடிய பெண்தான். முகத்திலிருந்து... உடல் உறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்பதில் எப்போதும் மிகவும் கவனத்துடன் இருப்பேன்.
ஆனால், நான் வருத்தப்படும் அளவுக்கு என் கண்களுக்குக் கீழே கருவளையம் உண்டாகிவிட்டது. இயற்கையாகவே நல்ல நிறத்தைக் கொண்ட எனக்கு கண்களுக்குக் கீழே இருந்த அந்த கருவளையம் மிகுந்த கவலையைத் தந்தது.
மூன்று மாதங்களுக்கு முன், என் கல்லூரி தோழிகளுடன் மைசூருக்குச் சுற்றுலா சென்றிருந்தேன். அங்கு, பல இடங்களுக்கு நாங்கள் சென்றோம். எல்லா இடங்களிலும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அந்தப் புகைப்படங்களை சென்னைக்கு வந்து டெவலப் செய்து, பிரிண்ட் போட்டுப் பார்த்தபிறகு எனக்கு கண்கள் கலங்கிவிட்டன. காரணம், எல்லாப் படங்களிலும், கண்களுக்குக் கீழ் இருக்கும் கருவளையம் ‘பளிச்’சென தெரிந்ததுதான். என் தோழிகள் ‘என்ன ப்ரியா? உனக்கு எப்படி கருவளையம் வந்தது? இது வந்தபிறகு, உன் முக அழகே கெட்டுவிட்டது. சீக்கிரம் இதை குணப்படுத்த ஒரு வழியைத் தேடு...’ என்று கூறினார்கள்.
நான் பல க்ரீம்களையும் வாங்கித் தடவிப் பார்த்தேன். அவற்றால் எந்தப் பலனும் இல்லை. ஒருநாள், மதுரையிலிருந்து என்னுடைய பெரியம்மா எங்கள் வீட்டுக்கு வந்தார்.
அவர் என் கண்களுக்குக் கீழே இருந்த கருவளையத்தைப் பார்த்து விசாரித்தார். நான் அதைப் பற்றியும், க்ரீம்களைப் பயன்படுத்தி பலன் கிடைக்காததைப் பற்றியும் கூறினேன்.
அப்போது அவர், ‘கவலைப்படாதே. இதற்கு ஒரு மருந்து இருக்கிறது. செலவும் மிகக் குறைவு. அந்த மருந்து நல்லெண்ணெய்தான். தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன்னால், வாயில் நல்லெண்ணெய்யை ஊற்றி கால் மணி நேரம் கொப்பளி. தொடர்ந்து சில நாட்களுக்கு இதைச் செய். அதன்பிறகு உன் கண்களுக்குக் கீழ் இருக்கும் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறைகிறதா இல்லையா பார். முதலில் உடனடியாக நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளி’என்றார்.
என் பெரியம்மா கூறியபடி தினமும் காலையில், நல்லெண்ணெய்யை எடுத்து வாயில் ஊற்றி கொப்பளிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் வாயில் எண்ணெய் ஊற்றியதும் என்னவோ போல் இருந்தது. பேசாமல் துப்பிவிடலாமா என்றுகூட நினைத்தேன். அப்போது கண்களுக்குக் கீழ் இருந்த கருவளையம் கண்களுக்கு முன்னால் வந்து நின்றது. வாயை மூடிக்கொண்டு ‘ஆயில் புல்லிங்’செய்தேன்.
தினமும் ‘ஆயில் புல்லிங்’பண்ணப் பண்ண, அது எனக்கு பழக்கமான ஒரு விஷயமாகிவிட்டது. தினந்தோறும் சுமார் பதினைந்து நிமிடங்கள் நல்லெண்ணெய்யை வாயில் வைத்திருப்பேன். ஒருநாள்கூட விடாமல் அதைச் செய்தேன்.
ஒரே மாதத்தில் எனக்கு முழு பலனும் கிடைத்துவிட்டது. என் கண்களுக்குக் கீழ் இருந்த கருவளையம் மாயமாக மறைந்துவிட்டது. எத்தனையோ க்ரீம்களால் குணப்படுத்த முடியாமல் போன கருவளையங்கள் மிகச்சாதாரண செலவில் ‘ஆயில் புல்லிங்’ பண்ணியதால், இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன.
இப்போது என் முகத்தைப் பார்க்கும் என்னுடைய தோழிகள், ‘என்ன அழகான முகம்! இந்த முகத்தை அந்தக் கருவளையங்கள் கெடுத்துக் கொண்டிருந்தனவே? இப்போது கருவளையம் எங்கே போச்சு..?!’ என்று ஆச்சரியம் கலந்த சந்தோஷத்துடன் பேசினார்கள். பல நாட்களாக கவலையுடன் இருந்த என் முகத்தில் இப்போதுதான் சிரிப்பே தவழ்கிறது” என்று சொல்லி முடித்தார் மாணவி பத்மப்ரியா.