
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
அடுத்து பேச வந்தவர், போரூரைச் சேர்ந்த ராஜேந்திரன். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இவருக்கு வயது 44. தொடர்ந்து நான்கு மாதங்கள் நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளித்ததால், தனக்கு ஏற்பட்ட உடல் ஆரோக்கியத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டார்:
“நான் நிறைய டீ, காப்பி பருகுவேன். ஒரு நாளைக்கு எத்தனை காப்பி, எத்தனை டீ என்ற கணக்கே இருக்காது. பெரும்பாலும் நான் பருகுவது வெளியில் இருக்கும் தேநீர் கடைகளில்தான். நிறைய சர்க்கரை போடச்சொல்லி, திகட்டத் திகட்ட அருந்துவேன். தவிர, இனிப்புப் பலகாரங்களையும் நிறைய சாப்பிடுவேன். ஜிலேபி, லட்டு, பூந்தி என்று எதையும் விட்டுவைப்பதில்லை. அப்படிச் சாப்பிட்டுக்கொண்டு இருந்த நாட்களில், என் உடல்நலத்தைப் பற்றி சிறிதும் சிந்தித்துப் பார்த்தது இல்லை.
ஒரு நாள் என் நண்பருடன் உடல் பரிசோதனைக்குச் சென்றேன். அவரோடு, நானும் சாதாரணமாகவே என் ரத்தத்தையும் சிறுநீரையும் சோதித்துப் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது, எனக்கு சர்க்கரை நோய் இருப்பது...
மிகவும் அதிர்ச்சியடைந்தேன். எனக்கு சர்க்கரை நோய் வரும் என்று எந்தக் காலத்திலும் மனதில்கூட நான் நினைத்துப் பார்த்தது இல்லை.
எதைப் பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷப் பறவையாக சிறகடித்துப் பறந்துகொண்டு இருந்த நான், அந்த சோதனைக்குப் பிறகு கவலையிலேயே உறைய ஆரம்பித்தேன். பலருக்கும் இருப்பதைப் போல எனக்கும் சர்க்கரை நோய் வந்துவிட்டதே என்று கவலைப்பட்டேன்.
எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் நான், சோகத்துடன் இருப்பதைப் பார்த்து என் நண்பர்கள்,‘உனக்கு என்ன ஆச்சு?’ என்று என்னைக் கேட்கத் தொடங்கினர். எனக்கு சர்க்கரை நோய் இருக்கும் விஷயத்தைக் கூறினேன்.
ரவிச்சந்திரன் என்கிற என்னுடைய நண்பர், ‘சர்க்கரை நோய் இருக்கிறது என்று எதற்காக கவலைப்படுகிறீர்கள்?
ரத்தத்திலும் சிறுநீரிலும் சர்க்கரையின் அளவை சீராக்குவதற்கு ஒரு வழி இருக்கிறது. அது நல்லெண்ணெய்யை பயன்படுத்துவதுதான்.
தினந்தோறும் காலையில் குளிப்பதற்கு முன்னால், நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளியுங்கள். அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
வெறுமனே நான் இதைச் சொல்லவில்லை. என் அனுபவத்தில் இருந்துதான் சொல்கிறேன். நல்லெண்ணெய்யைப் பயன்படுத்தி, நான்
பயனடைந்து இருக்கிறேன். அந்தப் பயனை நீங்களும் பெறவேண்டும்’ என்று கூறி, நல்லெண்ணெய்யால் எப்படி வாய் கொப்பளிப்பது என்ற விவரத்தையும் சொன்னார்.
அதன்படி மறுநாளே நல்லெண்ணெய் கொப்பளிப்பைத் தொடங்கினேன். தினமும் அதை கடைப்பிடித்தேன். ஒரு மாதம் தொடர்ந்து ‘ஆயில்
புல்லிங்’கில் ஈடுபட்ட பிறகு, ரத்தத்தையும், சிறுநீரையும் சோதனைக்குக் கொடுத்தேன்.
என்ன ஆச்சரியம்! இரண்டிலும் சர்க்கரையின் அளவு சரியாகவே இருந்தது. உண்மையிலேயே என்னால் நம்ப முடியவில்லை.
‘சிறிதளவு நல்லெண்ணெய்யை தினமும் கொப்பளித்ததில் இந்த அளவுக்கு பலனா...?’ நினைக்கும்போதே எனக்கு அளவுகடந்த வியப்பு!
இப்போது நான் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறேன். கலகலப்புடன் இருக்கிறேன்.‘சர்க்கரை நோய் இருக்கிறதே!’ என்ற கவலையுடன் இருந்தவன், உற்சாகத்துடன் இருப்பதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியமும் சந்தோஷமும் அடைகின்றனர்.”
ராஜேந்திரன், நல்லெண்ணெய்யைக் கொப்பளித்ததன் மூலம், சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டுவந்த விவரத்தைக் கூறியவுடன், அரங்கு நிறைந்த கரகோஷம்!
சர்க்கரை நோய் எந்த அளவுக்கு பரவலாகப் பலரிடமும் இருக்கிறது என்பதையும், அந்தக் குறைபாடு இல்லாமல் சந்தோஷத்துடன் இருக்க எல்லோரும் எந்த அளவுக்கு விருப்பத்துடன் இருக்கிறார்கள் என்பதையும் அந்தக் கரவொலியில் இருந்து என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook