
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா (Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
அடுத்ததாக மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மீனாட்சி, தன் அனுபவங்களை அடுக்கினார்:
“என்னைப் பல நாட்களாக தொல்லைப்படுத்திக் கொண்டு இருந்தது வாய்ப்புண். பலரும் கூறினார்கள் என்பதற்காக, ஏதேதோ களிம்புகளையும் மருந்துகளையும் பயன்படுத்திப் பார்த்தேன்.
மாத்திரைகளைக்கூட உட்கொண்டேன். அந்த நேரத்தில் பயன் தந்ததே தவிர, முழுமையாக குணமடையவில்லை.
அப்போதுதான், எங்கள் வீட்டில் இருந்து நான்கு வீடுகள் தள்ளியிருந்த வனிதாவின் சிநேகம் கிடைத்தது.
அவர், ‘நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளித்தால், வாய்ப்புண் வெகு சீக்கிரமே குணமாகிவிடும்’என்று கூறினார்.
வாய்ப்புண்ணால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்த நான், யார் எந்த மருந்தைச் சொன்னாலும், உடனடியாக அதைப் பயன்படுத்துவது என்ற நிலையில்தான் இருந்தேன்.
எப்படியாவது வாயில் இருக்கும் புண் முழுமையாக ஆறி, குணமடைய மாட்டோமா என்ற ஆதங்கமே அதற்குக் காரணம்.
அதனால், வனிதா கூறியபடி நல்லெண்ணெய்யைப் பயன்படுத்தி கொப்பளிக்க ஆரம்பித்தேன். தினமும் காலை ஒரு முறை... மாலை ஒரு முறை... என்று இரண்டு தடவை நல்லெண்ணெய்யால் வாய் கொப்பளித்தேன்.
இருபது நிமிடங்கள் வரை என் வாயில் நல்லெண்ணெய் இருக்கும். அவ்வளவு நேரம் எண்ணெய்யை வாயில் வைத்திருப்பது என்பது ஆரம்பத்தில் சிரமமாகத்தான் இருந்தது. சிரமத்தைப் பார்த்தால் வாய்ப்புண்ணை குணப்படுத்துவது எப்படி? அதனால், போகப்போக பழகிக்கொண்டேன்.
முதல் நாள், ‘ஆயில் புல்லிங்’ செய்ய ஆரம்பித்ததில் இருந்தே அதற்கான பலன் தெரிய ஆரம்பித்தது. இருந்தாலும், நிறுத்தவில்லை. விடாமல் செய்துவந்தேன். பத்து நாட்கள், தினமும் இரண்டு தடவை. இறுதியில், என்னுடைய வாய்ப்புண் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது!
வாய்ப்புண்ணை வைத்துக்கொண்டு, எதையும் சாப்பிட முடியாமல், எதையும் அருந்த முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டு இருந்த நான், இப்போது முழுமையான சந்தோஷத்துடன் இருக்கிறேன்.
எதையெல்லாம் சாப்பிட நினைக்கிறேனோ, அதையெல்லாம் சாப்பிடுகிறேன். ஆசைப்படும் எதையும் பருகுகிறேன். வாய்ப்புண் தொல்லையில் இருந்து முற்றிலுமாக விடுபட்டுவிட்டேன்.
என்னை பாடாகப் படுத்திக்கொண்டு இருந்த வாய்ப்புண்ணை ஒரேயடியாக விரட்டி ஓடச் செய்து, மகிழ்ச்சிக் கடலில் என்னை மிதக்கவைத்த நல்லெண்ணெய்யே உனக்கு நன்றி!”
இந்த வார்த்தைகளைக் கூறியபோது, மீனாட்சியின் முகத்தில் பரவியிருந்த அளவற்ற சந்தோஷத்தையும் கண்களில் இருந்த பிரகாசத்தையும் பார்க்க முடிந்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook