Lekha Books

A+ A A-

ஹமூன்

Hamoun

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

ஹமூன் - Hamoun

(ஈரானிய திரைப்படம்)

1990ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஈரானிய திரைப்படம் - Hamoun. 122 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்தத் திரைப்படத்தை இயக்கியவர் உலக புகழ் பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குநரான Dariush Mehrjui. பொருளாதார ரீதியாக நடுத்தர நிலையில் இருக்கும் Hamid Hamoun என்ற 30 வயதைத் தாண்டிய மனிதனையும், அவன் திருமணம் செய்து கொண்ட பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த, அழகான பெண்ணான Mahshidஐயும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமிது.

பாரசீக மொழியில் இப்படம் எடுக்கப்பட்டது.

1997ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு திரைப்பட ஆய்வில், ஈரான் நாட்டைச் சேர்ந்த திரைப்பட விமர்சகர்கள்' The best Iranian Film ever made' என்று 'Hamoun' படத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். இந்தப் படத்தின் இயக்குநரான Dariush Mehrjui அதற்கு முன்பு இயக்கி, உலகமெங்கும் பேசப்பட்ட 'The cow' என்ற படத்திற்கு  இதே மரியாதை, ஈரானிய திரைப்பட விமர்சகர்களால் தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த அளவிற்கு எல்லோராலும் தலையில் வைத்து கொண்டாடப்பட்ட 'Hamoun' படத்தின் கதை என்ன? இதோ:

Hamid Hamoun முப்பது வயதைத் தாண்டிய ஒரு மனிதன். அவன் ஏற்றுமதி - இறக்குமதி செய்து கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தில் ஒரு முக்கியமான பொறுப்பில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். பகுதி நேர பள்ளிக்கூட ஆசிரியராகவும் அவன் ஒரு உயர்நிலைப் பள்ளிக் கூடத்தில் பணியாற்றுகிறான். இது தவிர, பி.எச்.டி. வேறு பண்ணிக் கொண்டிருக்கிறான். ஒரு மிகப் பெரிய எழுத்தாளனாக வர வேண்டும் என்பது அவனுடைய தீராத ஆசை. அதனால் எப்போது பார்த்தாலும் புத்தகங்களும் கையுமாக அவன் அலைந்து கொண்டிருக்கிறான். Kierkegaard எழுதிய 'Fear and Trembling', J.D. Salinger எழுதிய 'Franny and zooey', Pirsig எழுதிய 'Zen and the Art of Motorcycle Maintenance' ஆகிய நூல்களை அவன் எப்போதும் தன்னிடம் வைத்திருக்கிறான்.

Mahshid நல்ல வசதி படைத்த குடும்பத்தில் பிறந்த இளம்பெண். அவள் தன் வாழ்க்கைப் பாதையில் ஹமூனைப் பார்க்கிறாள். அவன் அறிவாளித்தனமாக பேசுவதும், முற்போக்கான சிந்தனைகளுடன் இருப்பதும், கவிதைகளை சுவாரசியமாக கூறுவதும், எப்போதும் பலவகையான நூல்களைப் படித்துக் கொண்டிருப்பதும் அவளுக்குப் பிடிக்கிறது. அவன் பண வசதி நிறைந்த குடும்பத்தில் பிறந்தவனல்ல. சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன் என்ற உண்மை நன்கு தெரிந்தும், அவனை அவள் திருமணம் செய்து கொள்கிறாள். Mahshid இன் தாய், தந்தை இருவருக்குமே அவளுடைய அந்தச் செயல் சிறிதும் பிடிக்கவில்லை. 'நம் நிலை எங்கே? அவன் எங்கே?' என்கிறார்கள் கவலையுடனும், கோபத்துடனும். எனினும், பணக்கார இரத்தம் அவளுக்குள் ஓடிக் கொண்டிருந்ததால், தன் பெற்றோர் கூறியதை மஷித் சிறிது கூட காதில் போட்டுக் கொள்ளவில்லை. கட்டுப்பாடுகள் நிறைந்த ஈரானில், பெற்றோருக்கு எதிராக ஒரு பெண் இப்படி முடிவு எடுப்பது என்பது சாதாரண ஒரு விஷயமல்ல. எனினும், மஷித் தன் விருப்பப்படி ஒரு முடிவை அழுத்தமாக எடுக்கிறாள் என்று தன் திரைப்படத்தில் காட்டுவதன் மூலம், ஒரு பெண் நல்லதோ - கெட்டதோ சுயமாக தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஈரானின் மற்ற பெண்களின் மனங்களில் ஆழமாக ஊன்றுவதற்கு இப்படத்தின் இயக்குநரான Dariush Mehrjui ஆசைப்படுகிறார் என்பதை எல்லோராலும் புரிந்து கொள்ள முடிந்தது.

எல்லோரின் விருப்பத்தையும் மீறி, தான் நினைத்தபடி ஹமூனுடன் இல் வாழ்க்கையில் மஷித் இணைந்ததென்னவோ நல்ல விஷயம்தான். ஆனால், அந்த திருமண உறவு எவ்வளவு நாட்கள் நீடித்தது? 'ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள்' என்று அவர்களுடைய வாழ்க்கை ஆகிப் போனதுதான் நமக்கு வருத்தத்தைத் தரக் கூடிய விஷயமே.

ஆரம்பத்தில் அவர்களுடைய திருமண வாழ்க்கை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. தன் மனைவி மஷித் மீது நிறைய அன்பும், காதலும் வைத்திருந்தான் ஹமூன். அவளுக்கும் அவன் மீது முழுமையான ஈடுபாடும், அன்பும் இருந்தன. மஷித்திற்குள்ளும் ஒரு தனிப்பட்ட கலை ஆர்வம் இருந்தது. ஒரு abstract painter ஆக வர வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். அதற்காக வீடெங்கும் ஓவியங்களை வரைந்து வைத்து, வீட்டையே ஓவியக் கூடமாக ஆக்கி வைத்திருந்தாள். தன் விருப்பப்படி பல வர்ண சாயங்களையும் தெளிப்பது, தான் நினைத்தபடி தகர டப்பாவில் சாயத்தைக் கொண்டு வந்து எதைப் பற்றியும் கவலைப்படாமல், தன்னுடைய ஓவியத்தின் மீது ஊற்றுவது, அதை மிக உயர்ந்த 'abstact' ஓவியமாக நினைப்பது என்று அவளுடைய நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. அவளுடைய ஓவிய ஆர்வத்தை வளர்ப்பதற்கும், அட்டைகளையும் துணிகளையும் வாங்கிக் கொடுப்பதற்கும், பல வர்ண சாயங்களை வாங்கித் தருவதற்குமே ஹமூனின் வருமானத்தின் பெரும் பகுதி செலவாகிக் கொண்டிருந்தது.

ஒரு வகையில் அது அவனுக்கு வெறுப்பை அளிக்கும் ஒரு விஷயமாகத்தான் இருந்தது. எனினும், அவள் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பு காரணமாகவும், பெற்றோரின் எதிர்ப்பை மீறி தன்னை ஏற்றுக் கொண்டவள் என்ற உயர்ந்த எண்ணத்தின் காரணமாகவும் அவன் அவளுடைய செயல்கள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டான். இப்படியே அவர்களுடைய திருமண வாழ்க்கை ஏழு வருடங்களைத் தாண்டி விட்டது. அந்த உறவின் பரிசாக அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு இப்போது வயது ஐந்து. அவன் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்தான். தன் மகனின் மீது அளவற்ற பாசம் ஹமூனுக்கு.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel