
வீடெங்கும் தான் வரைந்து அடுக்கி வைத்திருந்த தன்னுடைய மாறுபட்ட சிந்தனையில் பிறந்த ஓவியங்களை வைத்து ஒரு கண்காட்சி நடத்தினாள் மஷித். தன் விருப்பப்படி சாயங்களைத் தெளித்தும், சிதறச் செய்தும், ஊற்றியும் உண்டாக்கிய அவளுடைய 'நவீன ஓவியங்களை'ப் பார்க்க வந்தவர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தனர். அவற்றில் ஏதோ மிகப் பெரிய விஷயங்கள் பூடகமாக மறைந்திருக்கின்றன என்று அவளைப் பார்த்து பாராட்டினர். ஒரு மிகப் பெரிய தொழிலதிபர் அதிகமான விலைக்கு காசோலையில் கையெழுத்துப் போட்டுத் தந்து, நான்கு ஓவியங்களை வாங்கினார்கள். அவரைப் போலவே வேறு சிலரும் கூட ஓவியங்களை விலைக்கு வாங்கினார். தன்னையே மஷித்தால் நம்ப முடியவில்லை. தன்னுடைய ஓவியங்களுக்கு இப்படியொரு வரவேற்பா, இந்த அளவிற்கு மதிப்பு இருக்கிறதா என்று மனதிற்குள் கேள்விகள் கேட்டு, அவளே சந்தோஷப்பட்டும் கொண்டாள். தன் மனைவியின் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரத்தைப் பார்த்து உண்மையிலேயே ஆச்சரியப்பட்டுப் போய் விட்டான் ஹமூன். ஒரு வகையில் அந்த விஷயம் அவனுக்கு சந்தோஷத்தைத் தந்தாலும், இன்னொரு கோணத்தில் - அவள் மீது அவனுக்கு அது பொறாமையையும் உண்டாக்கியது.
ஒரு நாள் தன்னுடைய வீட்டின் படிகளில் ஹமூன் ஏறிச் சென்று கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் அவனுடைய வயதான வீட்டின் வேலைக்காரப் பெண் பழங்கள், காய்கறிகள், இரண்டு பெரிய மீன்கள் ஆகியவற்றுடன் ஏறி போய்க் கொண்டிருந்தாள். ஏதோ அவசரத்தில் அவளை முந்திச் செல்ல ஹமூன் முயல, சற்று அவன் இடித்து, அந்தப் பெண் படிகளில் தடுமாறி கீழே விழுகிறாள். அவளின் கையிலிருந்த பழங்கள், காய்கறிகள், மீன்கள் அனைத்தும் சிதறி கீழே விழுகின்றன. அதற்கு அருகில் - மஷித் வரைந்து வைத்திருந்த ஓவியம் இருக்கிறது. அதன் மீது மீன்கள், பழங்கள், காய்கறிகள் அனைத்தும் விழ, ஓவியம் பலமாக பாதிக்கப்பட்டு விடுகிறது. அதைப் பார்த்து ஆவேசத்தின் உச்சிக்கே சென்று விடுகிறாள் மஷித் 'நான் சிரமப்பட்டு வரைந்த ஓவியம்! இப்படி பாழ் பண்ணி விட்டீர்களே!' என்று வாய்க்கு வந்தபடி கடுமையான சொற்களை பயன்படுத்தி, ஹமூனைத் திட்டுகிறாள் மஷித். அவனும் அவளை விடுவதாக இல்லை. 'யாரைப் பார்த்து திட்டுகிறாய்? நான் இவ்வளவு நாட்களும் ஏதோ பொறுமையாக இருந்தேன். எல்லா இடங்களிலும் ஓவியங்களை வரைந்து வைத்து, எனக்கு வீட்டில் சிறிது கூட மன நிம்மதி இல்லாமல் ஆக்கி விட்டாய். நான் பி.எச்டி. படித்து, அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்று எவ்வளவோ ஆசையுடன், அதில் முழுமையாக ஈடுபட்டேன். ஆனால், வீடு முழுக்க 'நவீன ஓவியங்கள்' என்ற பெயரில் எதையெதையோ வரைந்து, எங்கு பார்த்தாலும் அடுக்கி வைத்திருக்கும் சூழ்நிலையில் நான் எப்படி முழு மனதுடன் என் படிப்பில் கவனம் செலுத்த முடியும்? உன் சுய நலத்தால் என்னுடைய பல வருட இலட்சியத்தை நிறைவேற்ற முடியாத மன நிலையில் நான் இருக்கிறேன்' என்கிறான் ஹமூன்- கோபம் நிறைந்த குரலில். அதைக் கேட்டு ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று விடுகிறாள் மஷித்.
ஓவியக் கண்காட்சியில் தன்னை எல்லோரும் மனம் திறந்து பாராட்டியதும், தன்னுடைய ஓவியங்களை நல்ல விலை கொடுத்து வாங்கியதும் அவனுக்குப் பிடிக்காமல் போய் விட்டது என்றும், அதனால் தன் மீது அவனுக்குப் பொறாமை உண்டாகி விட்டது என்றும், தன்னுடைய வளர்ச்சி அவனுக்குப் பிடிக்காத விஷயமாகி விட்டது என்றும் அவள் குற்றம் சுமத்துகிறாள். அத்துடன் நின்றால் பரவாயில்லை- அவனை தான் விவாகரத்து செய்ய தீர்மானித்து விட்டதாகவும் கூறுகிறாள். இனிமேல் அவனுடன் தான் ஒரு நிமிடம் கூட வாழ விரும்பவில்லை என்று திடமான குரலில் கூறுகிறாள் அவள். அதைக் கேட்டு ஹமூன் அதிர்ச்சியடைந்து விடுகிறான். அவளின் மீது அவனுக்கு இப்போதும் அன்பு இருக்கத்தான் செய்கிறது. அதை அவன் அவளிடம் திரும்பத் திரும்ப கூறவும் செய்கிறான். ஆனால், அவள்தான் அதைக் காது கொடுத்து கேட்காமலே இருக்கிறாள். 'நீ இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை' என்கிறான் அவன். அவளோ 'நான் எடுத்த முடிவில் மாற்றமே இல்லை. நீங்கள் எனக்கு தேவையே இல்லை. விவாகரத்து செய்யப் போவது உறுதி' என்கிறாள் அவள். தன் மனைவிக்கு சிறிது கூட தன் மீது அன்பு என்ற ஒன்று இல்லாமற் போய் விட்டதே என்று நினைத்து அவன் கவலைப்படுகிறான். அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் மஷித் விவாகரத்துக்கு மனு போடுகிறாள்.
இதுவரை நாம் வாசித்தது அனைத்தும் 'ஃபிளாஸ் பேக்' காட்சிகள். ஹமூன்- மஷித் இருவரின் வாழ்க்கையிலும் இதற்கு முன்பு நடைபெற்ற சம்பவங்கள்.
படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு வக்கீலின் வீட்டு மொட்டை மாடியில் அழுக்கு பேன்ட்டுடனும், பனியனுடனும் அமர்ந்திருக்கிறான் கவலையே உருவான ஹமூன். அவன் மஷித்திடமிருந்து வெளியேற்றப்பட்டு விட்டான். தற்போது வக்கீல் வீட்டு மொட்டை மாடிதான் அவனுடைய இருப்பிடம். அவனைச் சுற்றிலும் தாள்கள். அனைத்தும் பிஎச்டி. ஆய்வுக்காக அவன் எழுதிய ஆராய்ச்சி கட்டுரைகள். காற்று பலமாக வீச, அந்த தாள்கள் பறக்கின்றன. அவன் சில தாள்களை ஓடி ஓடி பிடிக்கிறான். சில வானத்தில் பறந்து கீழே இருக்கும் சாலையில் போய் விழுகின்றன. அமைதியற்ற மனதுடன் தவித்துக் கொண்டிருக்கிறான் ஹமூன். அப்போது வக்கீல் வருகிறார். 'உன்னை இங்கு பத்திரமாக நான் பார்த்துக் கொண்டிருப்பதே பெரிய விஷயம்' என்னும் வக்கீல் தொடர்ந்து 'உன் மனைவி மஷித் உன்னை விவாகரத்து செய்வதில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறாள். நீ பணக்காரப் பெண் வேண்டும் என்று ஆசைப்பட்டாய் அல்லவா? நன்கு அனுபவி' என்கிறார். அதற்கு ஹமூன் 'நான் எந்தக் காலத்திலும் அவளின் வசதி மீது ஆசைப்பட்டதில்லை. நான் அவளின் மீது உண்மையான அன்பு வைத்திருந்தேன். அவளின் மீது எனக்கு அளவற்ற அன்பு இருக்கிறது' என்கிறான். அதற்கு வக்கீல் 'இனி அதைப் பற்றி கூறி பிரயோஜனமே இல்லை. நீ மஷித்தைத் திருமணம் செய்ததை அவளுடைய பெற்றோர் எந்தக் காலத்திலும் விரும்பியது இல்லை. இப்போது, உன் மனைவியை வேறொரு பணக்கார இளைஞனுக்கு திருமணம் செய்து கொடுப்பது என்று அவளுடைய பெற்றோர் முடிவு செய்திருக்கிறார்கள்' என்று கூறுகிறார். அதைக் கேட்டு மிகவும் கவலைப்படுகிறான் ஹமூன்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook