டிபார்ச்சர்ஸ் - Page 2
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 4478
அங்கு போன பிறகுதான், அவனுக்கே தெரிகிறது- அது ஒரு சுற்றுலா நிறுவனம் அல்ல என்ற விஷயமே. இறந்து போன உடல்களை அழகுபடுத்தி, அலங்காரங்கள் செய்து பெட்டிக்குள் வைத்து இடுகாட்டிற்கு 'சந்தோஷமாக வழியனுப்பி வைக்கக் கூடிய' சடங்குகளைச் செய்யக் கூடிய நிறுவனம் அது என்பதை அவன் தெரிந்து கொள்கிறான். அவனுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. 'இப்படி ஒரு வேலையைத் தான் செய்ய வேண்டுமா?' என்று அவன் நினைக்கிறான், 'இசைக் கலைஞனாக மேடைகளில் திறமை காட்டிக் கொண்டிருந்த தன்னுடைய விரல்கள், இறந்த பிணங்களுக்கு பூக்களையும் நகைகளையும் வைத்து அலங்காரம் செய்வதா?' என்று வெறுப்புடன் நினைத்து, மனதிற்குள் ஒரே குழப்பத்துடன் அமர்ந்து இருக்கிறான். ஆனால், அந்த இடத்திலேயே அவனுக்கு முன் பணம் கொடுக்கப்பட்டு விடுகிறது. வேலை இல்லாமல் இருந்தவனுக்கு, வேலையைச் செய்வதற்கு முன்பே முன் பணம் கிடைத்தது ஒரு வகையில் சந்தோஷமாகக் கூட இருக்கிறது. தன்னுடைய புதிய முதலாளியான Sasakiயிடமிருந்து அந்த வேலைகளை அவன் கற்றுக் கொள்கிறான்.
ஆரம்பத்தில் வெறுப்புடனும், கவலையுடனும் இருந்த அவன் அந்த வேலையை காலப் போக்கில் மிகுந்த விருப்பத்துடன் செய்ய ஆரம்பிக்கிறான்.
ஏதோ பணத்திற்காக வேலை செய்தோம் என்றில்லாமல், அவன் முழுமையான அர்ப்பணிப்புடன் அந்த வேலையைச் செய்கிறான். அந்த வேலையில் ஈடுபடும்போது, ஒரு நாள் அவனுக்கு ஒரு புதிய அனுபவம். ஒரு பெண் இறந்து வீட்டில் அனாதையாக கிடக்கிறாள். அவள் இறந்ததை இரண்டு வாரங்களாக யாரும் பார்க்கவில்லை. அவன் அந்த இறந்த பிணத்திற்கு அலங்காரங்கள் செய்கிறான். மணப் பெண்ணுக்கு அலங்காரம் செய்வதைப் போல, அலங்கரிக்கிறான். அனைத்தும் முடிந்து, பேருந்தில் திரும்பி வருகிறான். அவனிடமிருந்து வரும் அருவருக்கத்தக்க வாசனையை முகர்ந்து, பேருந்தில் இருப்பவர்கள் ஒரு மாதிரியாக அவனைப் பார்த்து முகத்தைச் சுளிக்கிறார்கள். அவனை அவர்கள் அனைவரும் வெறுப்புடன் பார்க்கிறார்கள். அவன் உடலிலிருந்து ஏன் அப்படியொரு 'பிண வாடை' வருகிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். தன் உடம்பிலிருந்து வரும் வாசனையை அகற்றுவதற்காக, அவன் ஒரு பொது குளியலறைக்குச் செல்கிறான். அந்த பொது குளியலறையில் சிறுவனாக இருந்தபோது, அவன் எத்தனையோ முறைகள் குளித்திருக்கிறான். அந்த குளியலறையின் உரிமையாளர் Tsuyako Yamashita என்ற பெண். அவளுடைய மகன், இளம் வயதில் டைகோவுடன் ஒன்றாகச் சேர்ந்து ஒரே வகுப்பில் படித்தவன்.
தான் என்ன வேலை பார்க்கிறோம் என்பதை அவன் தன் மனைவி 'மிகா'விடம் இதுவரை கூறவில்லை. நவ நாகரீகமான அந்த இளம் பெண், 'பிணத்தை அலங்கரிக்கும் வேலைகளை' செய்யக் கூடியவன் தன் கணவன் என்ற உண்மை தெரிந்தால், எங்கே வெறுத்து ஒதுக்கி, வீசி எறிந்து விடுவாளோ என்று அவன் தன் மனதில் நினைக்கிறான். அதனால், எந்த காரணத்தைக் கொண்டும், தான் பார்க்கும் வேலை அவளுக்குச் சிறிது கூட தெரிந்து விடக் கூடாது என்பதில் அவன் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கிறான்.
ஆரம்பத்தில் தன்னுடைய வேலையைப் பற்றி எதுவுமே தெரியாமல் இருந்த டைகோ, நாட்கள் செல்லச் செல்ல, தன் வேலைகளில் ஏராளமான அனுபவங்களைப் பெற்ற மனிதனாக ஆகிறான். எந்த வீட்டில் சாவு நடந்தாலும், அடுத்த நிமிடம் அவனைத்தான் தேடுகிறார்கள்.
பிணத்தை அலங்கரிப்பதில் அவன் மிகச் சிறந்த தொழில் நுட்ப கலைஞனாக ஆகிறான். ஏராளமான பிணங்களுக்கு அவன் அழகுபடுத்தும் கலைஞனாக பணி புரிகிறான். அதில் முழுமையான நிபுணத்துவம் பெற்றவனாக ஆகிறான். முழுமையான அர்ப்பணிப்புடன் அவன் வேலை செய்வதைப் பார்க்கும்போது, நமக்கே அவன் மீது ஒரு அளவற்ற அன்பும், ஈடுபாடும் உண்டாகிறது. இறந்தவர்களின் வீட்டில் இருப்பவர்கள், தங்களின் இழப்பினை மறந்து, அவனுடைய திறமையைப் பார்த்து பாராட்டும்போது, அவனுக்கு மனதில் சந்தோஷம் உண்டாகிறது. தங்களின் இறந்த உறவினர் மிகவும் அழகான தோற்றத்துடன், மயானத்திற்குச் செல்வதைப் பார்த்து, அவர்களின் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சியைப் பார்த்து அவனுக்கு மனதில் இனம் புரியாத பெருமிதம் உண்டாகிறது.
இதற்கிடையில் அவன் என்ன வேலை பார்க்கிறான் என்ற விஷயம் அவனுடைய மனைவி Mikaவிற்குத் தெரிந்து விடுகிறது. இறந்த ஒரு பிணத்திற்கு தன் தணவன் Daigo, மணிக் கணக்கில் அலங்காரங்கள் செய்து கொண்டிருப்பதை ஒரு டி.வி.டி. மூலம் அவள் தெரிந்து கொள்கிறாள். தன் கணவனைப் பார்த்து 'உடனடியாக அந்த பாழாய்ப் போன வேலையை விட்டொழியுங்கள்' என்று அவள் கூறுகிறாள். பலரையும் சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்கும் தன் வேலையை விடுவதற்கு அவன் மறுத்து விடுகிறான். விளைவு- மிகா அவனிடமிருந்து கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள். டோக்யோவிலிருக்கும் தன் பெற்றோரிடம் அவள் சென்று விடுகிறாள். தன் மனைவி தன்னை தனியாக விட்டு விட்டு, புறப்பட்டுச் செல்கிறாளே என்று மனதில் கவலைப்பட்டு கண்ணீர் விடுகிறான் டைகோ. அதற்காக தான் முழுமையான ஈடுபாட்டுடன் செய்து, இழப்பில் இருக்கும் பலரையும் சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்கும் 'புனிதப் பணி'யை விட்டு விட முடியுமா என்ன? அவன் தன் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான். அவனுடைய பால்ய கால நண்பனான Yamashita 'உன் மனைவியின் செயலைப் பார்த்து, கவலையில் மூழ்குவதை விட்டு விடு. இன்னொரு மரியாதைக்குரிய வேலை கிடைக்கும் வரையில் இப்போது செய்து கொண்டிருக்கும் வேலையையே செய்' என்று கூறுகிறான்.