ஹைவே - Page 2
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 4681
அந்த பழைய லாரியில் வீராவும், மஹாவீரும் மட்டும்... என்னதான் நடக்கிறதோ, அது நடக்கட்டும் என்ற மனத் துணிவுடன் இருக்கிறான் மஹாவீர். இப்போது அவர்களுடைய லாரி பயணம் ஆரம்பமாகிறது- நெடுஞ்சாலையில். காவல் துறையினரின் கண்களில் பட்டு விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு மாநிலமாக அவர்கள் பயணிக்கின்றனர். நகரங்கள், கிராமங்கள் என்று லாரி பயணிக்கிறது. ஏற்றம், இறக்கம், மேடு, பள்ளம், மலை, வயல் வெளிகள், அடர்ந்த காடுகள், பாலைவனம் என்று லாரி பல வகையான இடங்களையும் கடந்து பயணித்துக் கொண்டே இருக்கிறது.
ஆரம்பத்தில் பயங்கமான கூட்டமொன்றால் கடத்தப்பட்டு விட்டோமே என்று பதட்டமும், பயமும் அடைந்த வீராவிற்கு இப்போது சிறிது கூட அச்சமோ, பதைபதைப்போ இல்லாமற் போகிறது. எந்தவிதமான அதிர்ச்சியும் இல்லாமல் மிகவும் சர்வ சாதாரணமாக லாரியின் முன் இருக்கையில் அவள் அமர்ந்திருக்கிறாள். மலர்ந்த முகத்துடனும், பயமற்ற கண்களுடனும், புன்னகை தவழும் அதரங்களுடனும் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணைப் பார்த்து மஹாவீர் ஆச்சரிப்படுகிறான். சிறிது கூட கலக்கமே இல்லாமல் அந்தப் பெண்ணால் எப்படி இருக்க முடிகிறது என்று அவன் நினைக்கிறான்.
இன்னும் சொல்லப் போனால்- மஹாவீர்தான் கலங்கிப் போன மனதுடனும், பய உணர்வுடனும் இருக்கிறான். எங்கே வீராவின் தந்தை தன்னுடைய அரசாங்க செல்வாக்கை வைத்து, காவல் துறையை முழுமையாக பயன்படுத்தி தன்னை வளைத்து ஒரு வழி பண்ணி விடுவாரோ என்ற அச்சத்துடன் அவன் லாரியை ஓட்டிக் கொண்டிருக்கிறான். அவன் பெரும்பாலும் பேசுவதே இல்லை. எப்போதாவது ஒரு முறைதான் வாயையே திறக்கிறான். முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு, சிறிது கூட உதட்டில் புன்னகையோ, மென்மைத்தனமோ இல்லாமல் கோபக்கார இளைஞனைப் போல காட்டிக் கொண்டு லாரியை ஓட்டுவதில் மட்டுமே கவனமாக இருக்கும் மஹாவீரையே வியப்புடன் பார்க்கிறாள் வீரா.
ஒவ்வொரு மாநிலமாக லாரி கடந்து சென்று கொண்டிருக்கிறது. இடையில் ஆங்காங்கே சோதனைகள்... கெடுபிடிகள்... எல்லாவற்றையும் தாண்டித்தான் லாரி பயணிக்கிறது. பயணத்திற்கு மத்தியில் வீராவிற்கு தேநீர், சிற்றுண்டி, உணவு என்று பலவற்றையும் வாங்கித் தருகிறான் மஹாவீர். அவற்றை ஆவலுடன் வாங்கிச் சாப்பிடுகிறாள் வீரா.
இரவு, பகல், வெயில், மழை, குளிர் என்று பயணம் தொடர்கிறது. இப்போது மஹாவீரைப் பற்றி எந்தவித பயமும் இல்லை வீராவிற்கு. பல்வேறு இடங்களையும் தாண்டிச் செல்லும் அந்த பயணத்தை மிகவும் விரும்பி ரசிக்கிறாள் வீரா. பயணத்திற்கு மத்தியில் தன்னைப் பற்றி மனம் திறந்து அவள் மஹாவீரிடம் கூறுகிறாள். தான் மிகப் பெரிய பணக்காரரின் மகளாக இருந்தாலும், செல்வத்திற்கு மத்தியில் புரண்டு கொண்டிருந்தாலும், அரண்மனையைப் போன்ற வீட்டில் இருந்தாலும், தான் ஒரு கூண்டுப் பறவையே என்கிறாள் அவள். சிறிய வயதிலிருந்து இப்போது வரை சுதந்திரம் என்றாலே என்னவென்று தெரியாத அளவிற்கு, தான் ஒரு அடைக்கப்பட்ட கிளியாக இருந்து வரும் உண்மையை அவள் வெளிப்படுத்துகிறாள். வீட்டைத் தாண்டி எங்கும் தனியாக போவதற்கு வீட்டிலுள்ளவர்கள் தன்னை அனுமதித்ததில்லை என்கிறாள் அவள். இப்போது பல்வேறு நகரங்களையும், கிராமங்களையும், இயற்கையின் அழகுகளையும், இதற்கு முன்பு பார்த்திராத மாநிலங்களையும், பல்வேறு கலாச்சாரப் பின்னணிகளையும், பண்பாடுகளையும், தோற்றங்களையும், ஆடைகளையும், அணிகலன்களையும், மொழிகளையும், பழக்க வழக்கங்களையும் கொண்டிருக்கும் மனிதர்களையும் பார்ப்பதற்கான வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பது குறித்து தான் மிகவும் சந்தோஷப்படுவதாகவும், ஆனந்தத்தின் உச்சத்தில் இருப்பதாகவும் கூறுகிறாள் வீரா. இப்படிப்பட்ட மிகப் பெரிய உலகம் வெளியே இருக்கிறது என்ற விஷயமே இதுவரை தனக்கு தெரியாமல் போய் விட்டது என்கிறாள் அவள். இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு தன் வாழ்கையில் தனக்கு கிடைத்ததற்காக தான் மனதில் மிகவும் பெருமைப்படுவதாக கூறுகிறாள் அவள்.
அவள் கூறுவதையே ஆச்சரியத்துடன், எதுவுமே பேசாமல் கேட்டுக் கொண்டிருக்கிறான் மஹாவீர். அவனால் இனிமேல் தனக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பதையும், அவன் முழுமையான நம்பிகைக்கு உரியவனாக ஆகி விட்டான் என்பதையும் உணர்ந்து கொண்ட அவள் தன் மனதில் இன்னும் மறையாமல் அரித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை மனம் திறந்து அவனிடம் கூறுகிறாள். 'எனக்கு அப்போது 9 வயது. கள்ளங்கபடமற்ற வயது. எது நல்லது, எது கெட்டது என்பது கூட தெரியாது. பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஒரு மாமா இருந்தார். அவருக்கு அப்போதே 40 வயதிற்கு மேல் இருக்கும். குளியலறைக்குள் நான் இருக்கும்போது, அவர் உள்ளே நுழைந்து, என்னிடம் நடக்கக் கூடாத வகையில் நடப்பார். அப்போது எனக்கு அவருடைய நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், என்னுடைய வயது கூடக் கூட அவருடைய மோசமான நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டே இருந்தன. குறிப்பிட்ட வயதை நான் அடைந்தபோது, அவர் முறையற்ற வழியில் நடக்கிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். என் மாமாவிடம் நான் அதை வெளிப்படையாக கூறவும் செய்தேன். அதற்குப் பிறகும் தன்னுடைய சில்மிஷ வேலைகளை அவர் சிறிதும் நிறுத்துவதாகத் தெரியவில்லை. வேறு வழியில்லாமல், என் தாயிடம் விஷயத்தைக் கூறினேன். 'இந்த விஷயத்தை வேறு யாரிடமும் கூறி விடாதே. உனக்குள் வைத்துக் கொள்.' என்று என் அன்னை என்னை அடக்கப் பார்த்தாரே தவிர, என் மாமாவைக் கண்டிக்கவில்லை. என் மாமாவின் தொந்தரவுகள் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால்- அந்த வீட்டிற்குத் திரும்பிப் போகவே எனக்கு பிடிக்கவில்லை. என் மாமா என்னை பலமுறை நாசமாக்கிய அந்த வீடு எனக்கு எப்படி பிடிக்கும்? அதை விட இந்த சுதந்திரமான காற்றை சுவாசிக்கும் இந்த இனிய பயணம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது' என்று கூறுகிறாள் வீரா.
அவளுடைய சோக கதையைக் கேட்ட மஹாவீர் தன்னுடைய அவல வாழ்க்கையை அவளிடம் கூறுகிறான். சிறு வயதிலிருந்தே அன்பு, பாசம் என்றால் என்னவென்றே தெரியாத ஏழ்மைச் சூழலில் தான் வளர்ந்ததையும், வறுமையின் பிடியில் சிக்கி வாடிய நாட்களையும், அதனால் முரட்டுத்தனமான மனிதனாக தான் மாறிப் போனதையும் அவன் கூறுகிறான். தன் துயர கதையை வீரா கூற, தன் சோக கதையை மஹாவீர் கூற... அவர்களுக்கிடையே மேலும் ஒரு நெருக்க சூழ்நிலை உண்டாகிறது. இருவரும் புன்னகை தவழ, ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர்.