Lekha Books

A+ A A-

தி கிட் - Page 2

The Kid

அந்த பணக்காரப் பெண் சிறுவன் எப்படி இருக்கிறான் என்பதை பார்ப்பதற்காக வருகிறாள். நடந்த விஷயங்களை மருத்துவர் அவளிடம் கூறுகிறார். அவள் எழுதிய அந்த வரிகளை அவளிடமே காட்டுகிறார் அவர். அவ்வளவுதான். ஒரே நேரத்தில் அதிர்ச்சியும், ஆச்சரியமும், ஆனந்தமும் அவளுக்கு உண்டாகின்றன. அந்த ஏழை சிறுவன் தனக்குப் பிறந்த தன் செல்ல மகன்தான் என்பதை அவள் புரிந்து கொள்கிறாள்.

அந்த ஏழை மனிதனும் ஏழை சிறுவனும் ஒரு கட்டிடத்தில் அன்று இரவு தங்குகிறார்கள். அந்தச் சிறுவன் எங்கே இருக்கிறான் என்று தேடிக் கொண்டிருக்கும் பணக்காரப் பெண், சிறுவனை கண்டு பிடித்து தருபவர்களுக்கு 1000 டாலர்கள் பரிசாக தருவதாக கூறியிருப்பதை, அந்த கட்டிடத்தின் மேலாளர் படிக்கிறார். அதைத் தொடர்ந்து அவர் அந்தச் சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு செல்கிறார். அங்கு அந்த பணக்காரப் பெண் வரவழைக்கப்பட்டு, அவளுடன் சேர்கிறான் சிறுவன். பல வருடங்களுக்குப் பிறகு அன்னையும் மகனும் ஒன்று சேர்கிறார்கள்.

அந்த ஏழை மனிதன் கண் விழித்து, பையனைத் தேடுகிறான். அவன் அங்கு இல்லாமற் போகவே, தூக்கக் கலக்கத்திலேயே தன்னுடைய பழைய, சிறிய வீட்டை நோக்கி வருகிறான். கதவுக்கு வெளியே அமர்ந்து அவன் கனவில் மூழ்குகிறான். அவன் காணும் கனவில் தேவதைகள், பேய்கள் அனைவரும் வருகிறார்கள். கனவு முடிய, அவனை ஒரு போலீஸ்காரர் தட்டி எழுப்புகிறார். ஒரு காரில் அவனை அமரச் செய்து, அவரும் உள்ளே உட்காருகிறார். கார் ஒரு மிகப் பெரிய வீட்டை நோக்கி விரைகிறது. அந்த வீட்டின் கதவுகள் திறக்கப்பட, பணக்காரப் பெண்ணும் சிறுவன் ஜானும் அங்கு நின்று கொண்டிருக்கிறார்கள். அந்த ஏழை மனிதனைப் பார்த்ததும், ஓடி வந்து தொற்றிக் கொள்கிறான் சிறுவன். அந்த மனிதனோ பாசத்துடன் சிறுவனை அணைத்துக் கொள்கிறான். சிறிது நேரம் பிரிந்திருந்த அந்த வளர்ப்புத் தந்தையும், வளர்ப்பு மகனும் மீண்டும் ஒன்று சேர்கிறார்கள். போலீஸ்காரர் அந்த ஏழை மனிதனின் கையைக் குலுக்கி பாராட்டி விட்டு, அங்கிருந்து கிளம்புகிறார். தான் வீதியில் விட்டெறிந்து விட்டுப் போன தன் அருமை மகனை, பலவித சிரமங்களுக்கு மத்தியில் பாசம் செலுத்தி வளர்த்த அந்த நல்ல மனம் கொண்ட ஏழை ஊர் சுற்றி மனிதனை தன் வீட்டிலேயே இனி இருக்கும்படி கேட்டுக் கொள்கிறாள் அந்த பணக்காரப் பெண். இதை சிறிதும் எதிர்பார்த்திராத அந்த ஏழை மனிதன் மனதில் முழுமையான சந்தோஷத்துடன், அவர்களுடன் சேர்ந்து வீட்டிற்குள் நுழைகிறான்.

இனி அவன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமும், குதூகலமும், உற்சாகமும்தானே! அந்த ஈரம் நிறைந்த இதயத்திற்கு இவை அனைத்தும் கிடைப்பது கூட நியாயமான ஒன்றுதானே!

வேலை எதுவுமில்லாமல் ஊர் சுற்றிக் கொண்டும் கில்லாடித்தனங்கள் செய்தும் பிழைத்துக் கொண்டிருக்கும் ஏழை மனிதனாக- சார்லி சாப்ளின். வறுமையின் கொடும் பிடியில் சிக்கிக் கொண்டிருந்தாலும், எப்படியும் வாழ வேண்டும் என்ற வேட்கையுடன் வாழும் அந்த மனிதனை யாருக்குத்தான் பிடிக்காது?

சிறுவன் ஜானாக - Jackie Coogan. என்ன அபாரமான நடிப்பு! திரைப்படத்தில் நடிக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல், என்ன இயல்புத்தன்மையுடன், சர்வ சாதாரணமாக நடித்திருக்கிறான் பையன்!

பணக்காரப் பெண்ணாக.... சிறுவனின் அன்னையாக - Edna Purviance.

படத்தின் ஆரம்பத்திலேயே ‘A Picture with a smile – and perhaps, a tear’ என்ற வரிகளுடன் ஆரம்பமாகும். ‘The Kid’ உண்மையிலேயே புன்னகையும், கண்ணீரும் நிறைந்த ஒரு திரைப்படமே!

சார்ளி சாப்ளினும் இந்த படத்தில் வரும் சிறுவன் ஜானைப் போலவே, சிறு வயதில் பல கஷ்டங்களையும் அனுபவித்தவரே. படுக்க இடம் இல்லாமல், அணிவதற்கு ஆடை இல்லாமல், சாப்பிடுவதற்கு உணவு இல்லாமல் தாங்க முடியாத வறுமையில் அவர் உழன்றிருக்கிறார். ‘The Kid’ படத்தின் ஒவ்வொரு காட்சியும் உயிரோட்டத்துடன் இருந்ததற்கு, சாப்ளின் தன் சொந்த வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்களும் ஒரு காரணம்.

படத்தில் வரும் தெரு காட்சிகள் பலவும் லாஸ் ஏஞ்ஜலீஸில் உள்ள புகழ் பெற்ற Olvera Street இல் படமாக்கப்பட்டன.

1921இல் திரைக்கு வந்த இந்தப் படத்தில் வசனம் எதுவும் கிடையாது. 68 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்தப் படத்தை 1971ஆம் ஆண்டில் சாப்ளின் எடிட் செய்து, மீண்டும் திரைக்கு கொண்டு வந்தார். அப்போது ஒரு புதிய இசையை அவரே சொந்தமாக ‘கம்போஸ்’செய்து சேர்த்திருந்தார்.

படத்தில் வரும் கனவு காட்சியில் தேவதையாக வந்த Lita Grey என்ற பெண் Charlie Chaplin இன் இரண்டாவது மனைவியாக 1924இலிருந்து 1927 வரை இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘Honorary Academy Award’ ஐப் பெறுவதற்காக சார்லி சாப்ளின் அமெரிக்காவிற்குத் திரும்பவும் வந்தார். அப்போது ஒரு காலத்தில் தன்னுடன் சிறுவன் ஜானாக நடித்து கலக்கிய Jackie Coogan ஐ, சாப்ளின் சந்தித்தார் (அடடா! எப்படிப்பட்ட சந்திப்பாக இருந்திருக்கும்! அந்த நாள் ஞாபகங்கள் அவர்களின் நெஞ்சங்களில் அலை மோதி ஆனந்த அனுபவத்தைக் கொடுத்திருக்குமே!).

Page Divider

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel