Lekha Books

A+ A A-

காந்தஹார்

Kandahar

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

காந்தஹார்- Kandahar

(ஈரானிய திரைப்படம்) 

2001ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். பல மிகச் சிறந்த திரைப்படங்களை இயக்கி, உலக அளவில் புகழ் பெற்ற இயக்குனராக ஒளி வீசிக் கொண்டிருக்கும் ஈரானிய திரைப்பட இயக்குனர் Mohsen Makhmalmaf  இயக்கிய ஒரு மாறுபட்ட கதைக் கருவைக் கொண்ட இப்படம், வித்தியாசமான படங்களைப் பார்ப்போர்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பொழுது போக்கு அம்சங்களைக் கொண்ட படங்களை உருவாக்கி விட்டு, ஏதோ பெரிதாக சாதித்து விட்டோம் என்று மார்பைத் தட்டிக் கொண்டு ஆர்ப்பரிப்போருக்கு மத்தியில், யாரும் எடுப்பதற்காக அஞ்சக் கூடிய ஒரு பேசப்படும் கதைக் கருவைக் கையாண்டு, அதை ஒரு நேர்த்தியான திரைப்படமாக எடுத்திருக்கும் Mohsen Makhmalmafன் அசாத்திய துணிச்சலை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

85 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்தப் படம் ஆஃப்கானிஸ்தானை ஆட்சி செய்த  தலிபான்களைப் பற்றியது. இந்தப் படத்தின் கதையின் பாதி உண்மையிலேயே நடந்தது. மீதி படத்திற்காக கற்பனையாக உருவாக்கப்பட்டது.

கனடாவில் வாழும் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த Nafas என்ற இளம் பெண், ஆஃப்கானிஸ்தானில் உள்ள தன்னுடைய சகோதரியின் ஒரு கடிதத்தைப் படித்து விட்டு, அவளைப் பார்ப்பதற்காக ஆஃப்கானிஸ்தானுக்குப் பயணம் புறப்படுகிறாள். அவளுடைய குடும்பம் அங்கிருந்து தப்பித்துச் சென்று விட, அந்தச் சகோதரி மட்டும் ஆஃப்கானிஸ்தானிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகி விடுகிறது. இறுதி solar eclipse நாளன்று தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவளுடைய சகோதரி கடிதம் எழுதியிருக்கிறாள். அந்தக் கடிதம் தந்த அதிர்ச்சியாலும், பதைபதைப்பாலும்... எங்கே தன் சகோதரி தன்னை விட்டு பிரிந்து சென்று விடப் போகிறாளோ என்று அஞ்சும் Nafas தன் சகோதரியின் மரணத்தைத் தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆஃகானிஸ்தானுக்கு விரைகிறாள்.

அவளுடைய அந்தப் பயணமே இப்படத்தின் கதை.

பர்தாவால் தன் சரீரத்தை மூடிக் கொண்டிருக்கும் Nafas ஆஃப்கானிஸ்தானிற்குள் நுழைவதற்கான எல்லையைக் கடந்து செல்வதற்காக, அகதிகளாக இருக்கும் ஒரு குடும்பத்துடன் சேர்ந்து பயணிக்கிறாள். ஆனால், பயணிக்கும் வழியில் கொள்ளைக்காரர்கள் அவர்களின் பொருட்களைக் கைப்பற்ற, அந்தக் குடும்பம் பயணத்தைத் தொடராமல் அங்கேயே நிறுத்திக் கொள்கிறது.

ஆனால், அவள் விடாமுயற்சியுடன் தன்னுடைய பயணத்தைத் தொடர்கிறாள். அவளுக்கு உதவியாக இருக்கிறான் ஒரு சிறுவன். ஒரு குரான் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட அவன் அவளுக்கு மிகவும் பயனுள்ளவனாக இருக்கிறான். பின்னர் அவளுக்குப் பெரிதும் உதவியாக இருப்பவன் ஆஃப்ரிக்க அமெரிக்கனாக இருக்கும் ஒரு மனிதன். அவன் இஸ்லாம் மதத்திற்கு மாறியவன். ஆஃப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியவுடன் உண்டான விரும்பத்தகாத மாற்றங்களால், மிகுந்த அதிர்ச்சிக்கும் ஏமாற்றத்திற்கும் ஆளானவன் அவன்.

தலிபான்களின் ஆட்சியில் பெண்கள் எந்த அளவிற்கு சிரமங்களையும், பிரச்னைகளையும் அனுபவித்துக் கெண்டிருக்கிறார்கள் என்பதை தன் பயணத்தின்போது நிறையவே தெரிந்து கொள்கிறாள் Nafas. பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்த போர், ஆஃப்கானிஸ்தானையும், அங்குள்ள மக்களின் வாழ்க்கைகளையும் எந்த அளவிற்கு பாதிப்பிற்குள்ளாக்கி விட்டிருக்கிறது என்பதை அவளால் தெளிவாக உணர முடிகிறது. அவளுக்கு பயணத்தின்போது உதவியாக இருக்கும் ஆஃப்ரிக்க அமெரிக்க மனிதன் அவளிடம் ஆஃப்கானிஸ்தானின் இப்போதைய நிலைமையையும், அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் அவலங்களையும், தலிபான்களின் அட்டகாசங்களையும் நிறையவே கூறுகிறான். அவன் கூறக் கூற, Nafasஇன் மனதில் கவலையும், தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு வேதனைகளும் உண்டாகின்றன. அந்த மனிதன் ஒரு பொய்யான தாடிக்குள் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறான்.

‘தலிபான்களால் ஆஃப்கானிஸ்தானில் உண்டாகியிருக்கும் ஒரே நவீன தொழில் நுட்ப வளர்ச்சி- அங்கிருக்கும் நினைத்துப் பார்க்க முடியாத விதவிதமான போர்க் கருவிகள்தான்’ என்கிறான் அந்த மனிதன்.

பயணத்தின்போது, வழியில் பல கிராமங்களையும் அவர்கள் கடந்து செல்ல நேரிடுகிறது. அங்குள்ள மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை அவர்களிடம் கேட்டு நஃபாஸ் தெரிந்து கொள்கிறாள். அவர்களிடம் அவள் மனம் விட்டு பேசுகிறாள். அந்த கிராமத்துப் பெண்களின் சிரமங்களை அவர்களின் வாய்களின் மூலமே அவள் தெரிந்து கொள்கிறாள். கிராமத்துச் சிறுவர்கள் தங்களின் அவலம் நிறைந்த வாழ்க்கைகளைச் சோகத்துடன் கூறுகின்றனர். அவர்கள் கூறிய ஒவ்வொன்றையும் தன்னிடமிருக்கும் ஒரு சிறிய டேப் ரிக்கார்டரில் பதிவு செய்து கொள்ளும் நஃபாஸ், அதை தன் ஆடைக்குள் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துக் கொள்கிறாள்.

இறந்து கிடக்கும் பிணங்களின் ஆடைகளிலிருந்து திருடிப் பிழைத்துக் கொண்டிருக்கும் சிறுவர்களை அவள் பார்க்கிறாள். கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருக்கும் இடங்களில் நடந்து கொண்டிருக்கும் மனிதர்களின் கவலையை அளிக்கும் நிலைமையைப் பார்க்கிறாள். கண்ணி வெடிகளால் தங்களின் கால்களை இழந்து செயற்கைக் கால்களைப் பெறுவதற்காக அவர்கள் வரிசையில் நின்று கொண்டிருப்பதையும், பலருக்கு ஒரு கால் பெரிய அளவிலும், ஒரு கால் சற்று அளவு மாறியும் வந்திருக்கும் அவலச் சூழ்நிலையையும் பார்க்கிறாள். பலர் செயற்கைக் கால்கள் இன்னும் வந்து சேராமல், எதிர்பார்ப்புடன் வந்து, ஏமாந்த முகத்துடன் திரும்பிப் போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கிறாள். போரின் விளைவாக எவ்வளவு மனிதர்கள் தங்களின் உடல்களில் பாதிப்பு உண்டாகி, கைகளையும், கால்களையும் இழந்து நடைப் பிணங்களாக வாழ்ந்து கொண்டிக்கிறார்கள் என்ற உண்மைகளை தெரிந்து, என்ன பேசுவது என்றே தெரியாமல் அவள் கனத்துப் போன இதயத்துடன் தன் பயணத்தைத் தொடர்கிறாள்.  

தான் சென்று கொண்டிருந்த பாதையில், நஃபாஸ் ஒரு சிறிய மருத்துவமனையை ஒரு கிராமத்தில் பார்க்கிறாள். அங்கு நோயால் பாதிக்கப்பட்டு வந்திருக்கும் பெண்களை, நடுவில் தொங்கிக் கொண்டிருக்கும் திரையில் இருக்கும் ஓட்டையின் வழியாக பார்த்து மருத்துவர்கள் சோதனை செய்கிறார்கள். கனடாவிலிருந்து வந்திருக்கும் அவளுக்கு, அந்த விஷயம் வினோதமான ஒன்றாக படுகிறது. பெண்களின் வாழ்க்கை எந்த அளவிற்கு சோதனைகள் நிறைந்தவையாகவும், வேதனைகள் கொண்டதாகவும் இருக்கிறது என்பதை உணர்ந்து அவள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகிறாள்.

ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்தவுடன், அவளுடன் வந்த ஆஃப்ரிக்க அமெரிக்க மனிதன் தன் பயணத்தை நிறுத்திக் கொள்கிறான்.

‘காந்தஹார்’ என்ற அந்த நகரத்திற்குள் நுழைவதற்கு அவன் பயப்படுகிறான்.

நஃபாஸ் தன் பயணத்தைத் தொடர்கிறாள். இப்போது அவளுக்கு உதவியாக இருப்பவன் Red Cross அமைப்பிடமிருந்து பெற்ற இரண்டு செயற்கைக் கால்களின் உதவியுடன் நடக்கும் ஒரு மனிதன். பர்தாக்களைப் போட்டு தங்களை மறைத்துக் கொண்ட அவ்விருவரும் ஒரு திருமண குழுவினருடன் சேர்ந்து அந்த மணல் வெளியில் பயணிக்கின்றனர். அந்த திருமண குழுவினரை தலிபான்கள் ஒரு இடத்தில் நிறுத்தி விடுகிறார்கள். காரணம்- அவர்கள் இசைக் கருவிகளைக் கொண்டு இசைத்துக் கொண்டும், பாடல்களைப் பாடிக் கொண்டும் வந்ததுதான். அந்தச் செயல்களுக்கு தடை விதித்திருக்கிறது ஆஃப்கானிஸ்தான் அரசாங்கம்.

நஃபாஸுடன் வந்த மனிதனின் ஆடைகளைக் களையும்படி தலிபான்கள் கூற, அவன் கண்டு பிடிக்கப்படுகிறான். அதைத் தொடர்ந்து அவளை இழுத்துக் கொண்டு செல்கின்றனர். தலிபானின் ரோந்துப் படை மிகவும் தீவிரமாக சோதனை செய்கிறது. பர்தாவிற்குள் இருக்கும் நஃபாஸ் பதைபதைப்புடன் இருக்கிறாள். ஆனால், அவளுடைய நல்ல நேரம்- அவளைப் பயணத்தைத் தொடர அனுமதிக்கிறார்கள் தலிபான்கள். பல வர்ண பர்தாக்களுடன் நடந்து கொண்டிருக்கும் திருமண குழுவினருடன் தன்னையும் இணைத்துக் கொண்டு, நிம்மதிப் பெருமூச்சுடன் நடந்து செல்கிறாள் நஃபாஸ்.

நஃபாஸ் நடந்து செல்ல, சூரியன் மறைந்து கொண்டிருக்க, அவளுடைய பார்வையில் படுகிறது ‘காந்தஹார்’ நகரம்.

அத்துடன் படம் முடிவடைகிறது. எப்படியும் காந்தஹாரை அடைய வேண்டும் என்பதுதான் நஃபாஸின் இலக்காக இருந்தது. அந்த இலக்கை அவள் அடைந்து விட்டாள். இனி அவள் கவலைப் படுவதற்கு என்ன இருக்கிறது?

நஃபாஸாக படத்தில் வாழ்ந்திருப்பவர் -Nelofer Pazira.

‘Kandahar’ திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஈரானில் படமாக்கப்பட்டிருக்கின்றன. சில காட்சிகள் மிகவும் ரகசியமாக ஆஃப்கானிஸ்தானிலேயே படமாக்கப்பட்டிருக்கின்றன. 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற Cannes Film Festival இல் இப்படம் முதன் முறையாக திரையிடப்பட்டது.

இப்படத்தின் இயக்குனரான Mohsen Makhmalbafக்கு 2001க்கான Federico Fellini Prizeஐ ‘Kandahar’ படத்திற்காக கிடைத்தது. இவ்விருதை வழங்கியது ‘UNESCO’ அமைப்பு. Mohsen Makhmalbaf இயக்கிய படம் என்றாலே, எத்தனை வருடங்களானாலும், அதை நம்மால் மறக்கவே முடியாது. அதை ‘Kandahar’ திரைப்படமும் நிரூபிக்கிறது.

நஃபாஸா என்ற அந்த இளம் பெண்ணையும், அவளின் பயணத்தையும், கடந்து செல்லும் மணல் வெளிகளையும், சந்திக்கும் மனிதர்களையும், கண்ணீர் சிந்தும் பெண்களையும், இலக்கில்லாமல் நடந்து திரியும் சிறுவர் - சிறுமிகளையும், அவளுக்கு உதவியாக வருபவர்களையும், இறுதியாக அவளுடன் பயணிக்கும் அந்த பல வர்ண பர்தாக்கள் அணிந்து மணல் வெளியில் நடக்கும் திருமண குழுவினரையும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், நம்மால் மறக்கவே முடியாது. நம் உள்ளங்களில் அனைவரும் பசுமையாக வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

Page Divider

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

தேன் மா

தேன் மா

March 8, 2012

மலை

மலை

September 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel