ஷட்டர்-(Shutter) - Page 4
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6655
ரஷீத் வெண்டிலேட்டரின் வழியாக வெளியே பார்க்கிறான். ரஷீத்தின் நண்பன் சுவரின் மீது ஏறி, உள்ளே இருக்கும் படுக்கையறையையோ, குளியலறையையோ சாளரத்தின் வழியாக திருட்டுத்தனமாக பார்த்துக் கொண்டிருக்கிறான். அதைப் பார்த்த ரஷீத் உள்ளே அமர்ந்து, தாங்க முடியாமல் அழுகிறான். இப்போது அந்தப் பெண்ணின் வாயில் துணி இல்லை. அவள் அழுது கொண்டிருக்கும் ரஷீத்தை ஆச்சரியத்துடனும், கவலையுடனும், இரக்கத்துடனும் பார்க்கிறாள்.
நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது வெளியே ஒரே அமைதி. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டன. மனித நடமாட்டமே வெளியே இல்லை. ஏதோ நினைத்த விலைமாது, உள்ளே இருந்த ஒரு கம்பியைக் கொண்டு வந்து ஷட்டருக்குள் விட்டு அதை உடைக்க முயற்சிக்கிறாள். அவளுடன் சேர்ந்து, ரஷீத்தும். ஆனால், ஷட்டர் சிறிது கூட நகர்ந்து கொடுக்கவில்லை. விளைவு- சோர்வுடனும், கவலையுடனும் இருவரும் உட்கார்ந்து விடுகிறார்கள்.
இப்போது... திரைப்பட இயக்குனர் தங்கியிருக்கும் இடம். ஆட்டோ ஓட்டுனர் அங்கு வருகிறான். ‘நீ ஏன் இங்கு வந்தாய்? ஷட்டருக்குள் இருக்கும் அந்த இருவரையும் ஷட்டரைத் திறந்து வெளியே கொண்டு வராமல்...’ என்கிறார் அவர். அதற்கு ‘பக்கத்தில் இருக்கும் கடை திறந்திருக்கும்’ என்று ஆட்டோ ஓட்டுனர் கூற, ‘இப்போது மணி இரவு பத்தரையைத் தாண்டி விட்டது. கடையை மூடி விட்டுப் போயிருப்பார்கள். நீ அங்கு உடனடியாக போ’ என்கிறார் இயக்குனர். தன் ஆட்டோவுடன் அங்கிருந்து கிளம்புகிறான் ஓட்டுனர்.
மீண்டும் நாம் ஷட்டருக்குள் செல்வோம். ஷட்டருக்குள் ரஷீத்தும், அந்தப் பெண்ணும். வெளியே யாரோ நடந்து வரும் ஓசை. ஷட்டரின் பூட்டு திறக்கப்படும் சத்தம். பூட்டு கழற்றப்படுகிறது. திறப்பதற்கு ஏற்ற வகையில் வழி வகை செய்யப்படுகிறது. எல்லா சத்தங்களும் காதுகளில் விழ, அடுத்து நடக்கப் போவதை எதிர்பார்த்து ரஷீத்தும், அந்தப் பெண்ணும் அமைதியாக அமர்ந்திருக்கின்றனர். எதுவும் நடக்கவில்லை. யாரும் உள்ளே வரவில்லை. ரஷீத் வேகமாக எழுந்து, கீழே சிதறிக் கிடக்கும் அந்தப் பெண்ணின் ஆடைகளை எடுத்து அவளின் பைக்குள் திணிக்கிறான். அந்த விபச்சாரப் பெண் ரஷீத்தின் மணிபர்ஸ், மோதிரங்கள், கைக் கடிகாரம் அனைத்தையும் எடுத்து அவனிடமே தருகிறாள். ‘இன்னொருத்தரின் பொருள் நமக்கு எதற்கு? அதிகமாக ஆசைப்பட்டால், நம்மிடம் அது தங்காது’ என்கிறாள் அவள். ரஷீத்தைப் பார்த்து ‘நீ ஒரு நல்ல மனிதன். அப்பாவி!’ என்கிறாள். அவன் வியர்வையில் நனைந்து போயிருக்கும் சட்டையுடன் இருப்பதைப் பார்த்து, ‘இந்தச் சட்டையுடனா வீட்டிற்குப் போகப் போகிறாய்? வேண்டாம்... நான் மைசூரிலிருந்து வாங்கிக் கொண்டு வந்த ஒரு சட்டை இருக்கிறது. ஒரு ஆளுக்காக வாங்கிக் கொண்டு வந்தேன். அதை நீ அணிந்து கொள்’ என்று கூறி, வெள்ளையில் சிவப்பு நிறத்தில் பூக்கள் வரையப்பட்ட ஒரு சட்டையைத் தருகிறாள்.
இரவு வெகு நேரமாகி விட்டது.
ஆட்டோ வெளியே வந்து நிற்கிறது. ஆட்டோ ஓட்டுனர், தன் ஆட்டோவை நிறுத்தி விட்டு, வேகமாக ஷட்டரைத் திறப்பதற்காக வருகிறான். அருகில் வந்தால், ஷட்டர் பாதி திறந்த நிலையில் இருக்கிறது. ஓட்டுனர் உள்ளே வருகிறான். அவன் ஷட்டரின் பூட்டைத் திறக்கவில்லை என்ற விஷயம் அப்போதுதான் ரஷீத்திற்கே தெரிகிறது. அந்தப் பெண் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டாள். ‘நான் ஒரு தவறு செய்து விட்டேன். செல்ஃபோன் உங்களின் கையில்தான் இருக்கிறது என்று எண்ணி, நான் voice mail இல் பேசி விட்டேன். வீட்டில் இன்னொரு சாவி இருக்கிறது. அதைக் கொண்டு வந்து யாரோ திறந்திருக்கிறார்கள்’ என்கிறான் ஆட்டோ ஓட்டுனர்.
அவ்வளவுதான்- ஆடிப் போகிறான் ரஷீத். அப்படியென்றால்... தன் வீட்டில் உள்ளவர்களுக்கு ‘தான் ‘தேவடியாளுடன்’ஷட்டருக்குள் அடைந்து கிடந்த விஷயம் தெரிந்து விட்டதோ?’ - கலங்கிப் போயிருக்கும் அவன், ‘இனி என் வீட்டில் உள்ளவர்கள் முகத்தில் எப்படி விழிப்பேன்?’ என்கிறான். அதற்கு ‘நான் ஒருவரிடம் உங்களை அழைத்துச் செல்கிறேன். அவர் ஏதாவது ஐடியா கொடுப்பார்’ என்று கூறும் ஆட்டோ ஓட்டுனர், திரைப்பட இயக்குனரிடம் அவனை அழைத்து வருகிறான்.
திரைப்பட இயக்குனர் தங்கியிருக்கும் இடம்.
ரஷீத் வெளியே நின்று கொண்டிருக்க, ஆட்டோ ஓட்டுனர் உள்ளே வந்து விஷயத்தைக் கூறுகிறான். ‘அந்த ஆளை உள்ளே அழைத்து வர வேண்டாம். எப்படி இருந்தாலும் வீட்டிற்குப் போய்த்தானே ஆக வேண்டும்! எந்த பிரச்னைகள் வந்தாலும், அதைச் சந்திப்பவன்தான் மனிதன். சந்திக்கட்டும்!’ என்கிறார் இயக்குனர். ஆனால், கடைக் கண்களால் வெளியே பார்க்கிறார். வெளியே- வெள்ளை நிறத்தில் சிவப்பு நிற பூக்கள் வரையப்பட்ட சட்டையை அணிந்திருக்கும் ரஷீத்தை அவர் பார்க்கிறார்.
ரஷீத் தயங்கிக் கொண்டே வெளி வாசலைத் திறந்து, தன் வீட்டின் முன்னால் வந்து ‘காலிங்பெல்’லை அழுத்துகிறான். அவனுடைய மூத்த மகள் வந்து கதவைத் திறக்கிறாள். அவள் ஒரு மாதிரியாக தன் தந்தையைப் பார்க்கிறாள். பூக்கள் போட்ட சட்டையையும்… ‘அப்பா... நீங்க ரொம்பவும் நல்லவர். ஆனால், உங்களுக்கு இருக்கும் நண்பர்கள்தான் சரியில்லை. நடந்த விஷயம் அம்மாவுக்குக் கூட தெரியாது. என்னுடன் படிக்கும் நண்பர்கள் மிகவும் நல்லவர்கள். நான் எதைச் செய்யச் சொன்னாலும் செய்வார்கள். ஏன் என்று கூட கேட்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அருமையான நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நண்பனிடம் கூறி நான்தான் ஷட்டரைத் திறக்கச் செய்தேன். ஆண் நண்பர்களுடன் பழகினாலோ, அவர்களுடன் சேர்ந்து சிரித்தாலோ, பேசினாலோ தப்பாக நினைக்கிறீர்கள். நாங்கள் எல்லோரும் சேர்ந்து படிக்கிறோம். நாங்கள் நல்ல நண்பர்கள். அவ்வளவுதான். அதற்கு மேல் எதுவுமே இல்லை. எங்கள் எல்லோருக்குமே கனவுகள் இருக்கின்றன... இலட்சியங்கள் இருக்கின்றன... எதிர்கால நோக்கங்கள் இருக்கின்றன. எங்களின் கவனம் முழுவதும் படிப்பில் மட்டுமே. எங்களை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். அப்பா... ப்ளீஸ்... எனக்கு இப்போது திருமணம் வேண்டாம். என்னை தொடர்ந்து படிக்க வையுங்கள். ப்ளீஸ், அப்பா’ என்கிறாள் ரஷீத்தின் மகள். தன் மகளையே கனிவுடனும், நன்றியுடனும் பார்த்துக் கொண்டிருக்கிறான் ரஷீத்.
சாப்பாட்டு மேஜை. எதுவுமே கேட்காமல், எப்போதும் போல ‘எதுவுமே தெரியாத’ ரஷீத்தின் மனைவி, அவனுக்கு இரவு உணவு கொண்டு வந்து வைக்கிறாள். தன் மனைவியின் முகத்தையே பார்க்கும் ரிஷாத் அவளிடம் ‘நம் மகளுக்கு திருமணம் வேண்டாம். அவள் தொடர்ந்து படிக்கட்டும்’ என்கிறான். தன் கணவனை ஆச்சர்யத்துடன் பார்க்கும் அவள் ‘நாம் ஏற்கனவே நிச்சயம் செய்து விட்டோமே!’ என்கிறாள். அதற்கு அவன் ‘அதனால் என்ன? நம் சொந்தகாரர்கள்தானே! நான் கூறி சமாளித்துக் கொள்கிறேன்’ என்கிறான். மனம் மாறிய நிலையில் இருக்கும் தன் கணவனையே வினோதமாக பார்க்கிறாள் அந்த அன்பு மனைவி. சாப்பிட்டு முடித்த ரஷீத், படுக்கையில் போய் படுக்கிறான். அருகில் அவனுடைய இனிய குடும்பம்...
பொழுது புலர்ந்து விட்டது. ஆட்டோ ஓட்டுனர் தன் ஆட்டோவில் யாரையோ ஏற்றிக் கொண்டு வேகமாக போய்க் கொண்டிருக்கிறான். அதே நேரத்தில்- எதிர் திசையில் வேறொரு ஆட்டோ வருகிறது. அந்த ஆட்டோ வந்து சாலையின் ஒரு இடத்தில் நிற்கிறது. அங்கு திரைப்பட இயக்குனர் நின்று கொண்டிருக்கிறார். ஆட்டோவிலிருந்து ரிஷாத்துடன் ஷட்டருக்குள் இருந்த விலை மாது இறங்குகிறாள். அவள் தன் கையிலிருந்த பணத்தை இயக்குனரிடம் தருகிறாள். ‘சீக்கிரம் படத்தை இயக்க பாருங்கள்...’ என்கிறாள். அவளிடமிருந்து பணத்தை வாங்கிய இயக்குனர் ‘ஆட்டோ ஓட்டுனர் என்னுடைய ‘பேக்’ கைக் கொண்டு வந்து தந்து விட்டான். ஆனால், அதில் என்னுடைய கதை அடங்கிய தாள்கள் இல்லை’ என்கிறார். ‘நான் ஒரு கதை படித்தேன். மிகவும் அருமையான கதை. இதை படியுங்கள் என்று ஒரு கதை அடங்கிய தாள்களை அவரிடம் தரும் அந்தப் பெண் ‘மைசூரில் உங்களுக்கென்று ஒரு சட்டை வாங்கினேன். அதை இப்போது வேறொருவருக்கு கொடுத்து விட்டேன்’ என்கிறாள். கதை அடங்கிய தாள்களைப் புரட்டும் இயக்குனர் ‘அந்தச் சட்டை வெள்ளை நிறத்தில் சிவப்பு நிற பூக்கள் வரையப்பட்டதா?’ என்று கேட்கிறார். தொடர்ந்து அவர் ‘இப்போது நான் எடுக்கப் போகும் கதை முன்பு எழுதியது அல்ல. புதிய கதை. இப்போது நான் இயக்கப் போகும் படத்தின் பெயர் என்ன தெரியுமா?’ என்று கேட்டு விட்டு, ‘Shutter’....... என்கிறார் - அவளைப் பார்த்துக் கொண்டே.
நம் ‘shutter’ திரைப்படம் இந்த இடத்தில் முடிவடைகிறது.
ஷட்டருக்குள் அடைபட்டு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பவராக வாழ்ந்திருப்பவர் லால். இதற்கு மேல் ஒரு பொருத்தமான நடிகர் இல்லை என்பதே உண்மை. ரஷீத் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
விலை மாதுவாக சஜிதா மாடத்தில். பண்பட்ட நாடக நடிகை. என்ன அற்புதமான நடிப்பு!
திரைப்பட இயக்குனராக- எல்லோரும் மதிக்கும் ஸ்ரீனிவாசன். பாத்திரத்திற்கு என்ன அருமையாக உயிர் தந்திருக்கிறார்! இவரைத் தவிர இந்த கதாபாத்திரத்திற்கு யார் பொருந்துவார்கள்?
ஆட்டோ ஓட்டுனராக வினய் ஃபோர்ட். ஆட்டோ ஓட்டுனராகவே வாழ்ந்திருக்கிறாரே மனிதர்!
படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட்டுகள் இரண்டு 1) ஒளிப்பதிவு 2) சவுண்ட்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹரி நாயர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். என்ன அருமையான லைட்டிங்! ஷட்டருக்குள் இருக்கும் சிறிய இடத்தில் இருளும் ஒளியும் ஆங்காங்கே இருப்பதைப் போல லைட்டிங் பண்ணியிருக்கிறாரே! ‘ஷட்டர்’ திரைப்படம் ஒரு மிகச் சிறந்த திரைப்படமாக ஆனதற்கு ஹரி நாயரின் பங்களிப்பு மிகவும் அதிகம். ‘ஒரு தேர்ந்த ஒளிப்பதிவு என்றால் எப்படி இருக்க வேண்டும்?’ என்பதற்கு சரியான உதாரணமாக ஹரி நாயரின் ஒளிப்பதிவை கூறலாம். இப்படியொரு ஒளிப்பதிவாளர் இங்கு இருப்பதற்கு நாம் உண்மையிலேயே பெருமைப்பட வேண்டும்.
அடுத்து நாம் பாராட்ட வேண்டியவர் Sound designing செய்திருக்கும் ரங்கநாத் ரவி. Sound mixing செய்திருப்பவர் எம்.ஆர்.ராமகிருஷ்ணன். பின்னணி இசை என்று எதுவுமே இல்லாமல் வெறும் ஓசைகளை மட்டுமே வைத்து ஒரு மிகச் சிறந்த படம் உருவாகியிருக்கிறது என்றால், அது எவ்வளவு பெரிய விஷயம்! இயற்கையான ஒலிகளை மிகவும் தத்ரூபமாக கொண்டு வந்து, ஒரு படம் பார்க்கிறோம் என்னும் உணர்வே நமக்கு தோன்றாமல், ஒரு உண்மைச் சம்பவத்தைத்தான் நேரில் பார்க்கிறோம் என்னும் அளவிற்கு ஒரு சூழ்நிலையை படைத்திருக்கிறார்கள் என்றால்... அதற்கான பெருமை Sound விஷயத்தில் பணியாற்றியிருக்கும் இவ்விருவரையும்தான் சேரும்.
படத்தின் கதை எழுதி இயக்கியிருப்பவர் ஜாய் மேத்யூ. மலையாள நாடக உலகில் பன்முகத் தன்மைகளையும் வெளிப்படுத்தி புகழ் பெற்ற மனிதராக இருக்கும் இவர், ஜான் ஆப்ரஹாம் இயக்கிய ‘அம்ம அறியான்’ என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். நீ.... ண்.... ட... இடைவெளிக்குப் பிறகு ‘ஷட்டர்’ படத்தின் மூலம் ஜாய் மேத்யூ இயக்குனர் அவதாரத்தை முதல் தடவையாக எடுத்திருக்கிறார். முதல் படமே முத்திரைப் படமாக அமைந்து விட்டது! கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் பல முறைகள் மாற்றியும், திருத்தியும் ‘ஷட்டர்’ படத்தின் திரைக்கதையை ஜாய் மேத்யூ திரும்பத் திரும்ப எழுதியிருக்கிறார். அந்த கடுமையான உழைப்பிற்குக் கிடைத்த பரிசுதான் இந்த வெற்றி!
மலையாளப் படவுலகில் ஒரு மாறுபட்ட திரைப்படத்தை இயக்கி, ‘புதிய அலை’ கொண்ட படங்கள் உருவாக ஒரு முன்னுதாரணமாக இருக்கும் ஜாய் மேத்யூ அவர்களே! உங்களின் வரவேற்கத் தக்க திறமைக்கு முன்னால் தலை குனிந்து வணங்குகிறேன். உங்களின் இந்த புதிய அலை இனியும் தொடரட்டும்!