Category: சினிமா Published Date Written by சுரா Hits: 3977
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
டூ லிவ்
(சீன திரைப்படம்)
என் மனதில் சிறிதும் மறையாமல் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சாகா வரம் பெற்ற படமிது. 1994 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படம் அதே பெயரில் Yu Hua எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. படத்தின் இயக்குநர் Zhang Yimou.
இது ஒரு அருமையான குடும்பக் கதை.
Xu Fugui ஒரு மிகப் பெரிய பணக்காரரின் மகன். அவன் எப்போதும் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பான். சூதாட்டத்தில் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் லாங்கர் என்பவனிடம் அவன் இழக்கிறான். அதன் விளைவாக அவனுடைய குடும்பத்தில் பிரச்னைகள் உண்டாகின்றன. அவனுடைய மனைவி ஜியாஸென், மகள் ஃபெங்க்ஸியாவுடனும், வயிற்றில் இருக்கும் மகன் யூகிங்குடனும் வீட்டை விட்டு வெளியேறி, தனியே செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது.
ஃப்யூகுய் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் மனைவியுடனும், பிள்ளைகளுடனும் மீண்டும் சேர்கிறான். பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடத்தும் ஒரு குழுவை சுன்ஷெங்க் என்பவனுடன் சேர்ந்து அவன் ஆரம்பிக்கிறான். அப்போது சீனாவில் போர் நடக்கிறது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் ராணுவத்தில் சேர வேண்டிய கட்டாயம் உண்டாகிறது. பல நாட்களுக்குப் பிறகு ஃப்யூகுய் தன் வீட்டிற்கு திரும்பி வருகிறான். அப்போது தன் மகள் ஃபெங்க்ஸியா வாய் பேச முடியாத ஊமையாக இருப்பதை அவன் பார்க்கிறான்.
லாங்கர் தன்னுடைய சொத்துக்கள் எதையும் ‘மக்களின் அரசாங்க’த்திற்கு தானமாக கொடுக்க விரும்பவில்லை. சொத்துக்கள் அனைத்தையும் நெருப்புக்கு இரையாக்க அவன் தீர்மானிக்கிறான். அதைத் தொடர்ந்து அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
கதை பத்தாண்டுகளைத் தாண்டி நகர்கிறது. இப்போது நகரத்தின் தலைவராக இருப்பவர் இரும்புத் துண்டுகள் ஒவ்வொன்றையும் தானமாக அளிக்கும்படி கூறுகிறார். அதன் மூலம் கருவிகளைப் படைத்து, தாய்வானைத் திரும்பவும் பெற வேண்டும் என்கிறார் அவர். பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடத்துபவன் என்ற முறையில் ஃப்யூகுய் நகரமெங்கும் நிகழ்ச்சிகள் நடத்துகிறான்.
ஒருநாள் ஃப்யூகுய் தன் மகன் யூகிங்கை பள்ளிக் கூடத்திற்கு அழைத்துச் செல்லும்போது, ஒரு வாகனத்தால் சிறுவன் மரணத்தைச் சந்திக்கிறான். மாவட்ட அதிகாரி கல்லறைக்கு வந்து மன்னிப்பு கேட்டதுடன், ஏதாவது பணம் தரவும் தயாராக இருக்கிறார். அதை வாங்கிக் கொள்ள அந்த குடும்பம் மறுத்து விடுகிறது.
கதை இன்னொரு பத்து வருடங்ளைத் தாண்டி செல்கிறது. ‘கலாச்சார புரட்சி’யின் காலமது. கிராமத்தின் தலைவர் பொம்மலாட்ட நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும் பொம்மைகளை நெருப்பில் எரித்து விடும்படி கூறுகிறார். புரட்சிக்கு எதிரான விஷயங்கள் அவை என்று அவர் கூறுகிறார். ஃபெங்க்ஸியா இப்போது நன்கு வளர்ந்த நிலையில் இருக்கிறாள். வான் எர்க்ஸி என்ற ‘சிவப்பு காவலர்கள்’ பிரிவில் இருப்பவனையும், தங்கள் மகள் ஃபெங்க்ஸியாவையும் நேரில் சந்திக்க வைக்கின்றனர் அவளுடைய தந்தை ஃப்யூகுய்யும், தாய் ஜியாஸென்னும். அந்த இளம் உள்ளங்கள் காதலிக்க ஆரம்பிக்கின்றன. வெகு சீக்கிரமே அவர்களின் திருமணம் நடைபெறுகிறது. சில மாதங்களில் ஃபெங்க்ஸியா கர்ப்பமாகிறாள்.
இதற்கிடையில் ஒரு காலத்தில் ஃப்யூகுய்யுடன் தொழில் பங்குதாரராக இருந்த சுன்ஷெங்க் அவனுக்குச் சேர வேண்டிய பணத்தை கொடுத்து விடுகிறான்.
மாதங்கள் கடந்தோடுகின்றன. கர்ப்பமாக இருக்கும் தங்களின் மகள் ஃபெங்க்ஸியாவை கிராமத்து மருத்துவ மனையில் கொண்டு போய் அவளுடைய பெற்றோர் சேர்க்கிறார்கள். டாக்டர்கள் அனைவரும் வேறு வெளி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு விட்டதால் பயிற்சி பெறும் மாணவர்கள் மட்டுமே மருத்துவமனையில் இருக்கிறார்கள். பிரசவத்தை மேற்பார்வையிடுவதற்கு ஒரு டாக்டர் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறான் வான் எர்க்ஸி. எனினும், ஃபெங்க்ஸியா பிரசவத்தில் இறந்து விடுகிறாள்.
ஆறு வருடங்கள் கடந்தோடுகின்றன. அந்த குடும்பம் தங்களின் மகள் ஃபெங்க்ஸியா, மகன் யூகிங் ஆகியோரின் கல்லறைகளுக்கு வருகிறது. வாழ்க்கையில் எவ்வளவோ சிரமங்களையும், பிரச்னைகளையும் சந்தித்து விட்ட ஃப்யூகுய், தன் பேரனை நல்ல முறையில் வளர்த்து, அவனுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உண்டாக்கித் தர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறான்.
அத்துடன் படம் முடிவடைகிறது.
சூதாட்டத்தில் சொத்துக்களை இழந்து, அதன் மூலம் தன் மனைவியும் பிள்ளைகளும் வறுமையில் வாடுவதற்கு மூல காரணமாக இருந்து, பிறகு தன் தவறுகளை உணர்ந்து திருந்தி, மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து, அவர்களுக்காக உழைத்து, தன் மகன் இறந்ததும் சோர்வடையாமல் குடும்பத்தைக் காப்பாற்றி, தன் செல்ல மகளுக்கு திருமணம் செய்து வைத்து, அவள் பிரசவத்தில் மரணத்தைத் தழுவ, தாங்க முடியாத துக்கத்தைத் தாங்கிக் கொண்டு தன் பேரனின் எதிர்காலம் பற்றிய சிந்தனையுடன் நடந்து கொண்டிருக்கும் ஃப்யூகுய்யின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் Ge You விற்கு - ஒரு Royal Salute!
எவ்வளவோ சிரமங்களைச் சந்தித்த பிறகும், சிறிதும் விரக்தி அடையாமல், வாழ்க்கையின் பக்கங்களைச் சந்திக்கும் மனப் பக்குவம் வாய்ந்த அருமையான மனைவி ஜியாஸென்னாக வாழ்ந்திருக்கும் Gong Li யின் அபார திறமைக்கு - ஒரு பூங்கொத்து!
கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் பல்வேறு கொள்கைகளும் இப்படத்தில் விமர்சிக்கப்பட்டதால், பல இடங்களில் இப்படம் திரையிட தடை செய்யப்பட்டது. தவிர, இயக்குநர் Zhang Yimou எந்த படத்தையும் இரண்டு வருடங்களுக்கு இயக்கக் கூடாது என்ற தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
1994 ஆம் ஆண்டு நியூயார்க் திரைப்பட விழாவில் ‘ To Live’ திரையிடப்பட்டது. அதே ஆண்டில் நடைபெற்ற Cannes Film Festival இல் இப்படம் திரையிடப்பட்டு, நடுவர்களின் விருதைப் பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதை Ge You பெற்றார்.
1995 ஆம் ஆண்டு ஆங்கிலம் இல்லாத பிற மொழி படம் என்ற பிரிவில், இப்படம் சிறந்த படத்திற்கான Bafta Award ஐப் பெற்றது.
1994 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதிற்காக சிறந்த வெளி மொழி படம் என்ற பிரிவில், இப்படம் பரிந்துரைக்கப்பட்டது.