Category: சினிமா Published Date Written by சுரா Hits: 3812
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
அயாளும் ஞானும் தம்மில்
(மலையாள திரைப்படம்)
2012ஆம் ஆண்டில் திரைக்கு வந்து பல விருதுகளை அள்ளிச் சென்ற திரைப்படம். கதைக் கரு, கதையைக் கூறிய முறை, திரைக்கதை, கலைஞர்களின் நடிப்புத் திறமை, தேர்ந்த தொழில் நுட்பம் - அனைத்திலும் குறிப்பிட்டுக் கூறக் கூடிய அளவிற்கு சிறப்புத் தன்மைகள் இந்த படத்தில் இருந்தன.
படத்தின் கதாநாயகன் - ப்ரித்விராஜ்.
மருத்துவமனையின் பின்னணியில் அமைக்கப்பட்ட திரைக் கதை.
டாக்டர் ரவி தரகன் ஒரு புகழ் பெற்ற இருதய சிகிச்சை நிபுணர். பல வெற்றிகரமான அறுவை சிகிச்சைகளை அவர் நடத்தியவர். படத்தின் ஆரம்பக் காட்சியில் இருதய நோயால் பாதிக்கப்படும் ஒரு சிறுமி மருத்துவமனைக்கு மோசமான நிலையில் கொண்டு வரப் படுகிறாள். அவளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறுகிறார் ரவி. அதற்கு சிறுமியின் தந்தை ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால், டாக்டரோ பிடிவாதமாக இருக்கிறார். ஆப்பரேஷனுக்கு பணம் கூட தேவையில்லை என்கிறார். பெற்றோரின் சம்மதம் இல்லாமலேயே, ஆப்பரேஷன் நடக்கிறது. ஆப்பரேஷன் தோல்வியில் முடிகிறது. சிறுமி இறந்து விடுகிறாள். அவ்வளவுதான் - அரசியல்வாதிகளின் தொடர்பு கொண்ட சிறுமியின் தந்தை மருத்துவமனையை ஒரு வழி பண்ணி விடுகிறார். அவருடைய ஆட்கள் கண்ணாடி சாளரங்களையும், கருவிகளையும் உடைக்கின்றனர்.
டாக்டர் ரவி தரகன் அங்கிருந்து காரில் தப்பிக்கிறார். அவரை சிறுமியின் தந்தைக்கு தெரிந்தவர்களும், உறவினர்களும் காரில் விரட்டிச் செல்கிறார்கள். வழியில் விபத்து நடக்கிறது. மழை பெய்து கொண்டிருக்க, ரவியின் கார் தலை குப்புற கவிழ்கிறது. விபத்தில் ரவிக்கு என்ன ஆனது? அவர் எங்கு போனார்?
ரவியை போலீஸ் தேடுகிறது. இதற்கிடையில் அவரைக் கை கழுவி விட்டு, மருத்துவ மனையின் பெயரைக் காப்பாற்ற சக மருத்துவர்கள் முயற்சிக்கிறார்கள். அதற்கு சேர்மனின் தனிச் செயலாளரான தியா ஒத்துழைக்க மறுக்கிறாள். மருத்துவத் தொழிலின் மீது மிக உயர்ந்த மதிப்பை வைத்திருப்பவர் டாக்டர் ரவி என்கிறாள் அவள். தொடர்ந்து ரவியுடன் சேர்ந்து மருத்துவக் கல்லூரியில் படித்த விவேக்கை அவள் சந்திக்கிறாள்.
இப்போது ரவி பற்றிய ஃப்ளாஸ் பேக்...
ரவியும், விவேக்கும் மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார்கள். அவர்கள் இருவரும் பொறுப்பற்ற முறையில் இருக்கிறார்கள். திறமைகளை பெரிய அளவில் வளர்த்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். உடன் படிக்கும் முஸ்லீம் பெண்ணான சைனுவை ரவி காதலிக்கிறான். சைனுவும்தான்... படிப்பு முடிந்ததும், மூணாறில் உள்ள ஒரு பெரிய மருத்துவ மனையில் வேலைக்குச் சேர வருகிறான் ரவி. அங்கு பெரிய டாக்டராக இருப்பவர் டாக்டர் சாமுவேல். மிகப் பெரிய திறமைசாலி அவர். தொழிலில் எந்தவித சமரசத்திற்கும் அவர் ஒத்துக் கொள்ள மாட்டார். மூணாறுக்கு வரும் வழியில் ரவிக்கும், சப் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமனுக்கும் ஒரு மோதல் உண்டாகிறது. அவரைப் பற்றி உயர் அதிகாரியிடம் ரவி புகார் செய்ய, அதைத் தொடர்ந்து அந்த சப் இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட் செய்யப் படுகிறார்.
ஆரம்பத்தில் அந்த மருத்துவமனை வாழ்க்கை ரவிக்கு மிகுந்த வெறுப்பை உண்டாக்குகிறது. தொழிலில் மிகவும் கறாராக இருக்கும் டாக்டர் சாமுவேல் அதற்கு ஒரு காரணம். அங்கு அவனுக்கு ஒரே ஆறுதலாக இருப்பவள் டாக்டர் சுப்ரியாதான். தொழிலில் அவனுக்கு ஆர்வம் உண்டாவதற்கு அவள் உதவுகிறாள். சைனுவின் பெற்றோர் அவளை வோறொருத்தனுக்கு திருமணம் செய்து வைக்கப் போகும் தகவலை டாக்டர் சாமுவேல் ரவியிடம் கூறுகிறார். ரவி தன் நண்பன் விவேக்கைச் சந்திக்கிறான். ரவி-சைனு இருவரும் கொச்சியில் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறான் விவேக். அதற்காக சைனுவைக் கடத்தி அங்கு அவன் வைத்திருக்கிறான். மூணாறிலிருந்து திருமணத்திற்காக கிளம்புகிறான் ரவி. வழியில் வாகனங்கள் ‘ஜாம்’ ஆகி ஏராளமாக நிற்கின்றன. இப்போது இடம் மாற்றம் பெற்று அங்கு வேலைக்கு வந்திருப்பவர், பழைய சப் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன். தான் தண்டிக்கப்பட்டதற்கு அவர் ரவியை பழி வாங்குகிறார். எவ்வளவு மன்றாடியும், ரவியின் காரை அவர் போக விடாமல் செய்கிறார்.
விளைவு?
அவர்களின் திருமணம் நின்று விடுகிறது. சைனுவை அவளுடைய தந்தை பார்த்து, திரும்ப தன்னுடன் அழைத்துச் சென்று விடுகிறார். யாரோ ஒருவரின் மனைவியாக அவள் ஆகிறாள்.
நாட்கள் கடந்தோடுகின்றன. மூணாறில் உள்ள மருத்துமனைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி மிகவும் ஆபத்தான நிலையில் கொண்டு வரப் படுகிறாள். அவள் - சப் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமனின் மகள் . அவளுக்கு சிகிச்சை செய்ய மறுத்து விடுகிறான் ரவி. புருஷோத்தமன் காலில் விழுந்து கெஞ்சுகிறார். இருப்பினும், தன் மனதை மாற்றிக் கொள்ள ரவி தயாராக இல்லை.
அப்போது அங்கு வரும் டாக்டர் சாமுவேல் கோபத்தில் ரவியை கன்னத்தில் அடித்து விடுகிறார். தொடர்ந்து அவரே சிகிச்சை செய்து, அந்தச் சிறுமியை காப்பாற்றுகிறார். இந்த விஷயத்தை புருஷோத்தமன் புகார் செய்ய, ரவியின் மீது விசாரணை நடக்கிறது. அங்கு நேரில் வந்து ஆஜரான டாக்டர் சாமுவேல் ‘ரவி ஒரு அப்பாவி. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. இன்னும் சொல்லப் போனால் - சிறுமி சாகவில்லையே! உயிருடன் இருக்கிறாளே! பிறகு ஏன் நடவடிக்கை?’ என்று கூறி ரவியை காப்பாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சி ரவியின் மனதில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்குகிறது. மருத்துவ தொழிலுக்கு நூறு சதவிகிதம் விசுவாசத்துடன் இருக்க வேண்டும் என்று அவன் தீர்மானிக்கிறான். தொடர்ந்து அவன் ஐரோப்பாவிற்குச் சென்று மேற் படிப்புகள் படித்து, திரும்பி வந்து, பல்வேறு மருத்துவ மனைகளிலும் டாக்டராக பணி புரிகிறான். தனக்கென்று ஒரு மிகப் பெரிய பெயரையும் சம்பாதிக்கிறான்.
அவன்... ‘அவர்’ என்று ஆகிறது.
விவேக், சுப்ரியா இருவரிடமிருந்தும் டாக்டர் ரவியைப் பற்றிய பழைய விஷயங்களைத் தெரிந்து கொண்ட தியா, மூணாறில் உள்ள டாக்டர் சாமுவேலைப் பார்க்கத்தான் ரவி சென்றிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறாள். பல தொலைபேசி உரையாடல்களை வைத்து, காவல் துறையும் மூணாறுக்கு விரைகிறது.
சுடுகாட்டில் ஒரு கல்லறைக்கு முன்னால் நின்று கொண்டு, ஆப்பரேஷனில் இறந்து விட்ட சிறுமியைப் பற்றி கூறிக் கொண்டிருக்கிறார் டாக்டர் ரவி தரகன். அது இறந்து போன டாக்டர் சாமுவேலின் கல்லறை. அவரின் மரணச் செய்திதான் ரவியை மூணாறுக்கு வரச் செய்திருக்கிறது.
ரவி காவல் துறையால் கைது செய்யப்பட்டு, நீதி மன்றத்திற்குக் கொண்டு வரப் படுகிறார். அங்கு வரும் இறந்து போன சிறுமியின் தாய், தான் சொல்லித்தான் டாக்டர் ரவி தன் மகளுக்கு ஆப்பரேஷன் செய்தார் என்று கூறுகிறாள். அவள் முன்பு டாக்டர் ரவியிடம் ‘ஆப்பரேஷன் செய்யுங்கள்’ என்று மன்றாடி கேட்டுக் கொள்ளும் காட்சி திரையில் காட்டப் படுகிறது. அதைத் தொடர்ந்து டாக்டர் ரவி வழக்கிலிருந்து விடுவிக்கப் படுகிறார்.
மூணாறில் உள்ள மருத்துவமனைக்கு முன்னால் ஒரு பெஞ்சில் டாக்டர் ரவி தரகன் அமர்ந்திருக்கிறார். அவர் மெதுவான குரலில் கூறுகிறார் : ‘டாக்டர் ரவி தரகன் பிறந்த இடம் இதுதான்...’
அத்துடன் படம் முடிவடைகிறது.
டாக்டர் ரவி தரகனாக ப்ரித்விராஜ் (என்ன இயல்பான நடிப்பு)
அவரின் நண்பன் விவேக்காக - நரேன்
டாக்டர் சாமுவேலாக - ப்ரதாப் போத்தன் (அருமையான கேரக்டர்! மனிதர் வாழ்ந்திருக்கிறார்)
சைனுவாக - சம்வ்ருதா
டாக்டர் சுப்ரியாவாக - ரம்யா நம்பீசன்
தியாவாக - ரீமா கல்லிங்கல்
புருஷோத்தமனாக - கலாபவன் மணி
கேரள அரசாங்கத்தின் சிறந்த ஜனரஞ்சகம் மற்றும் கலைத் தன்மை கொண்ட திரைப்படம், சிறந்த இயக்குநர் (லால் ஜோஸ்), சிறந்த நடிகர் (ப்ரித்விராஜ்), சிறந்த நகைச்சுவை நடிகர் (சலீம்குமார்) ஆகிய விருதுகளை இப்படம் தட்டிச் சென்றது.