Category: சினிமா Published Date Written by சுரா Hits: 3612
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
தி அயன் லேடி
(ஆங்கில திரைப்படம்)
இங்க்லாண்டின் பிரதம அமைச்சராக பல வருடங்கள் பணியாற்றி, வரலாற்றில் இடம் பெற்ற இரும்புப் பெண்மணியான மார்கரெட் தாட்சரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம், மார்கரெட் தாட்சர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார் என்று கூறுவதைவிட, அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் தந்து, தாட்சராகவே Meryl Streep வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
வரலாற்றில் இடம் பெற்ற ஒரு அரசியல்வாதியை படமாக எடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. சற்று கவனக் குறைவாக இருந்தாலும், அது பலரின் விமர்சனத்திற்கும் உள்ளாகி விடும். அதனால் படத்தின் ஒவ்வொரு காட்சியையும், கதாபாத்திரங்களின் சித்தரிப்பிலும் முழுமையான அக்கறையும், ஆர்வமும் இருக்கும் அளவிற்கு படத்தை Phyllida Lloyd இயக்கி இருக்கிறார்.
அரசியல்வாதி தாட்சரை ஒரு பக்கம் காட்டினாலும், தாட்சர் என்ற சராசரி பெண்மணியையும் படம் பார்ப்போரின் மனதில் பதிய வைத்ததற்காக இயக்குநரை நாம் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
2008இல் படம் தொடங்குகிறது இஸ்லாமாபாத்தில் இருக்கும் மேரியட் ஹோட்டலின் மீது குண்டு போட்ட நிகழ்ச்சி செய்தியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, வயதான மார்க்ரெட் தாட்சர் வேறு யாராலும் கவனிக்கப்படாமல், சாதாரண பெண்மணியாக தான் மட்டும் தனியே ஒரு கடையில் பால் வாங்கிக் கொண்டு திரும்பி வருகிறார். வயதானதால் உண்டான உடல் ரீதியான பாதிப்புகள், பார்வைக் குறைவு – எல்லாமே தாட்சரையும் பிரச்னைக்குள்ளாக்குகின்றன.
அவர் தன்னுடைய கடந்த காலத்தை நோக்கி பயணிக்கிறார். தன்னுடைய இளம் பிராயத்து வாழ்க்கை, தன்னுடைய தந்தையிடமிருந்து அரசியல் அறிவைப் பெற்றது. தன்னுடைய தாயுடன் சரியான உறவு இல்லாமலிருந்தது, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் தன்னுடைய திறமையால் இடம் பிடித்தது – எல்லாவற்றையும் அவர் வீட்டில் இருந்து கொண்டே ஒவ்வொன்றாக நினைத்துப் பார்க்கிறார்.
சாதாரண ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, ஆண்கள் ஆட்சி செய்யும் டோரி கட்சியில் சேர்ந்து மக்களவையில் (House of Commons) ஒரு இடத்தைப் பிடித்து உள்ளே நுழைந்தது, டெனிஸ் என்ற தொழிலதிபர் தன்னைத் திருமணம் செய்தது என்று தன்னுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நடைபெற்ற சம்பவங்களை வரிசையாக அவர் அசைபோட்டுப் பார்க்கிறார்.
பாராளுமன்றத்தில் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு அரசியல் பணிகளை கவனிப்பதில்தான் அவருக்கு எவ்வளவு பிரச்னைகள்! எட்வர்ட் ஹீத்தின் அரசில் கல்வித் துறை செயலாளராக அவர் பணி புரிந்த காட்சிகள் அடுத்து காட்டப்படுகின்றன. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு நிற்க தாட்சர் தீர்மானிக்கிறார். மக்களிடம் எப்படி உரையாற்ற வேண்டும், தோற்றத்தை எப்படி மாற்றிக் கொள்ளவேண்டும் என்றெல்லாம் அவருக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இதற்கிடையில் அவருடைய தனிப்பட்ட வாழக்கையும் காட்டப்படுகிறது. தன்னுடைய மனைவியின் அரசியல் வாழ்க்கை வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படும் தாட்சரின் கணவர் டென்னிஸ், தன்னுடைய தாயுடன் எப்போதாவது மட்டுமே தொடர்பு கொண்டிருக்கும் தென் ஆஃப்ரிக்காவில் இருக்கும் மகன், சொல்லிக் கொள்கிற அளவிற்கு தாட்சருடன் நல்ல உறவு கொண்டிராத அவருடைய மகள் கரோல்… சமூக வாழ்க்கையில் தன்னை முழுமையாக ஒப்படைத்து விட்ட அந்த இரும்பு மங்கையின் மீது ஏதோ ஒரு வகையில் நமக்கு பரிதாபமும், இரக்கமும்… அதே நேரத்தில் – மதிப்பும் உண்டாகிறது.
தாட்சர் இங்க்லாண்டின் பிரதம அமைச்சராக ஆன பிறகு, அங்கு நடைபெற்ற வரலாற்று சம்பவங்கள் அடுத்தடுத்து காட்டப்படுகின்றன. இப்போதைய வயதான தாட்சரின் ஃப்ளாஸ் – பேக் காட்சிகளாக அவை படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. வேலை இல்லா திண்டாட்டம், 1984இல் நடைபெற்ற சுரங்கத் தொழிலாளர்கள் போராட்டம், 1984இல் கிராண்ட் ஹோட்டலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் மாநாடு நடைபெற்றபோது நடைபெற்ற குண்டு வெடிப்பு, 1982இல் அர்ஜென்டினா கைப்பற்றிய ஃபாக்லேண்ட் தீவுகளை மீண்டும் திரும்பப் பெற்றது, அதன்மூலம் பிரிட்டன் போரில் அடைந்த வெற்றி, ரொனால்ட் ரீகனுடன் தாட்சருக்கு உண்டான நட்பு, உலக தலைவர்களின் முன்னணி தலைவர்கள் வரிசையில் தாட்சர் கம்பீரமாக உயர்ந்து நின்றது – ஒவ்வொன்றும் மார்தட்டிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக கூறப்பட்டிருக்கின்றன.
1990இல் பலம் பொருந்திய, அதே சமயம் – சற்று வயதான தாட்சர் காட்டப்படுகிறார். அவருக்கு பல விஷயங்களிலும் எதிர்ப்புகள் உண்டாகின்றன. அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் Geoffrey Howe அவரால் அவமானப்படுத்தப்பட்டு, தன் பதவியை ராஜினாமா செய்கிறார். Michael Heseltine அவரை எதிர்த்து கட்சியின் தலைவர் பதவிக்கு நிற்கிறார். தன்னுடைய கட்சியின் உறுப்பினர்களிடம் தேவையான அளவிற்கு ஆதரவு இல்லாமற் போகும் தாட்சர், தன்னுடைய பிரதம அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார். அதைத் தவிர, அவருக்கு வேறு வழியில்லை.
20 வருடங்களுக்குப் பிறகும், தனக்கு அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை உண்டானதை அவர் வேதனையுடன் நினைத்துப் பார்க்கிறார்.
தன்னுடைய ஆரம்ப நாட்கள், அரசியல்வாதியாக கொடி கட்டிப் பறந்த நாட்கள், மகளாக… மனைவியாக… தாயாக… வேதனையை அனுபவித்த நாட்கள்… அரசியல் வாழ்க்கையில் வீழ்ச்சியடைந்த நாட்கள்… - இவை ஒவ்வொன்றையும் மனதில் நினைத்துக் கொண்டே ஒரு காலத்தில் இரும்பு மங்கை மார்கரெட் தாட்சராக இருந்த அந்த மூதாட்டி தான் மட்டும் தனியே ஒரு தேநீர் கோப்பையை நீரில் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்.
அத்துடன் படம் முடிவடைகிறது.
படம் முடிந்து வெளியே வரும்போது, மார்கரெட் தாட்சர் என்ற அந்த சாதனைப் பெண் நம் உள்ளங்களில் கம்பீரமான ஒரு இடத்தைப் பிடித்திருப்பார்.
மார்கரெட் தாட்சராக வாழ்ந்த Meryl Streepக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது அளிக்கப்பட்டது. சரியான தேர்வு!