சாருலதா
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 3806
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
சாருலதா
(வங்காள திரைப்படம்)
இந்திய திரையுலகத்தின் தலைமகன் சத்யஜித் ரே இயக்கிய காவியம். 1964ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. நான் பார்த்த ரேயின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் இதுதான். கதை கூறும் முறை, படமாக்கப்பட்டிருக்கும் விதம், படம் முழுக்க நிறைந்திருக்கும் ஒரு கவித்துவத் தன்மை, கலைஞர்களின் பங்களிப்பு, குறைவான வசனங்களையும் ஆழமான முக வெளிப்பாடுகளையும் கொண்டு கதைக்கு உயிர்ப்பு தந்த தொழில் நேர்த்தி – இவை அனைத்தும் சேர்ந்துதான் ‘சாருலதா’வை ஒரு உயர்ந்த பீடத்தில் அமரச் செய்தன.
ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘நாஸ்டாநிர் (The Broken Nest) என்ற புதினம்தான் இந்தப் படத்திற்கு அடிப்படை. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கல்கத்தாவில் நடைபெறும் கதை.
அப்போது இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். பேரழகு படைத்த இளம் மனைவி சாருலதாவையும், அவளுடைய வசதி படைத்த கணவன் பூபதியையும் சுற்றி பின்னப்பட்ட படம் இது.
சாருலதா நல்ல ஒரு குடும்பத்திலிருந்து வந்தவள். கலை, இலக்கியம், கவிதை, கதை என்றால் அவளுக்கு உயிர். அவற்றைப் படிப்பதிலும், எழுதுவதிலும் அவளுக்கு ஆர்வம் அதிகம். அந்த சிந்தனையுடனேயே அவள் எப்போதும் இருப்பாள்.
அவளுடைய கணவன் பூபதி கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஒரு அரசியல் நாளிதழின் உரிமையாளர். அவனேதான் ஆசிரியரும். இரவு, பகல் எந்நேரமும் அவனுக்கு அந்த பத்திரிகையைப் பற்றிய சிந்தனை மட்டுமே. தன்னுடைய பெரும்பாலான நேரத்தை அவன் பத்திரிகை அலுவலகத்திலேயே செலவிடுகிறான். அச்சகத்தின் ஓசைக்கு மத்தியிலேயே அவனுடைய வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.
மிகப் பெரிய பங்களாவில் தான் மட்டும் தனியாக இருக்கிறாள் சாரு. வீட்டில் வேலை செய்வதற்கு ஆட்கள் இருப்பதால், அவள் செய்வதற்கு எதுவுமே இல்லை. கணவன் அலுவலகத்திற்குச் சென்று விட, அவள் மட்டும் தனியாக சாளரங்களின் வழியே சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வெளி உலகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். வசதிகள் இருந்தாலும், எதுவுமே செய்ய முடியாமல், பொழுது போகாமல் ஒரு கூண்டுப் பறவையாக அவள் வீட்டில் இருக்கிறாள்.
அவளுடைய தனிமையைப் போக்குவதற்காக அவளுடைய அண்ணனையும், அண்ணனின் மனைவியையும் அங்கு வந்து தங்கச் செய்கிறான் பூபதி. சாருலதாவின் அண்ணன் பத்திரிகை சம்பந்தப்பட்ட வேலைகளை கவனிப்பதுடன், அச்சகத்தையும் பார்த்துக் கொள்கிறான். இலக்கிய மனம் கொண்ட சாருலதாவிற்கு, எந்தவித திறமையும் இல்லாமல் குறுக்கு புத்தியுடன் இருக்கும் அவளுடைய அண்ணனின் மனைவி சிறிது கூட ஒத்துப்போக முடியாதவளாக இருக்கிறாள்.
இதற்கிடையில் பூபதியின் உறவுக்காரப் பையனான அமல் அங்கு விருந்தாளியாக வருகிறான். மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்ட அவன் கிட்டத்தட்ட சாருவின் வயதைக் கொண்டவன்தான். சாருவைப் போல இலக்கியம், கவிதை என்ற ஆர்வத்தைக் கொண்டவன்தான் அவனும். சாருவின் இலக்கிய ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ளும்படி பூபதி அமலிடம் கூறுகிறான்.
சாரு கதை, கவிதை, ஓவியம் எல்லாவற்றையும் பற்றி அமலிடம் பேசுகிறாள். அவளுடைய ஆர்வத்தை அமல் இன்னும் அதிகமாக்குகிறான். அவனும் இலக்கியம் சம்பந்தமான பல விஷயங்களை அவளிடம் கூறுகிறான். தனித்திருக்கும் வேளைகளில், அமலும் சாருலதாவும் இலக்கியம் பற்றி மணிக்கணக்காக தங்களை மறந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லாமல், ஒரு கூண்டுக்குள் அடைபட்ட பறவையாக இருந்த சாரு, அமலின் வருகைக்குப் பிறகு ஒருவித சுதந்திர உணர்வையும், சந்தோஷத்தையும் அனுபவிக்கிறாள். ஏதோ ஒரு புதிய தென்றல் தன் வாழ்க்கைக்குள் வீசிக் கொண்டிருப்பதைப் போல அவள் உணர்கிறாள். தனக்கு தெரியாமல் சாரு ஒரு சிறுகதையை எழுதிவிட, அதைப் பார்த்து அவன் ஒரு மாதிரி ஆகிவிடுகிறான். தன் மீது சாருலதாவிற்கு ஒருவித காதல் உண்டாகியிருக்கிறது என்பதை அமல் புரிந்து கொள்கிறான். ஆனால். தன் மனதிற்குள் உண்டாகும் குற்ற உணர்வால், அவன் அதற்கு எதிர்வினை ஆற்றாமல் இருக்கிறான்.
இந்தச் சூழ்நிலையில் சாருவின் அண்ணனும், அண்ணியும் பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓடி விட, பூபதியின் நாளிதழும் அச்சகமும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றன. அமலைப் பார்க்கும் பூபதி, தன் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பவன் அவன் மட்டுமே என்கிறான்.
சாருவின் அபார திறமையைப் பார்த்து நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டும், பூபதிக்கு துரோகம் செய்கிறோமா என்ற குற்ற உணர்வில் சிக்கிக் கொண்டும் இருந்த அமல் ஒரு நாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், திருமணம் செய்து கொள்வதற்காகவும் மேற்படிப்பு படிப்பதற்காகவும் இங்க்லாண்டிற்குச் சென்று விடுகிறான். போவதற்கு முன்பு சாருவிற்கு ஒரு கடிதத்தை எழுதி வைத்து விட்டுச் செல்கிறான்.
அமல் கிளம்பிப் போனதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், வீட்டில் அழுது கொண்டிருக்கிறாள் சாருலதா. அப்போது அங்கு வருகிறான் பூபதி. அதற்குப் பிறகு அங்கு என்ன நடந்தது? இதுதான் ‘சாருலதா’ படத்தின் கதை.
சாருலதாவாக வாழ்ந்திருந்தவர்… மாதாபி முகர்ஜி...
பூபதியாக சைலேன் முகர்ஜி…
அமலாக சவுமித்ர சட்டர்ஜி…
ஒளிப்பதிவு : சுப்ரத மித்ரா (என்ன அருமையான ஒளிப்பதிவு!)
திரைக்கதை, இசை, இயக்கம்: சத்யஜித் ரே.
1964ஆம் வருடத்திற்கான ஜனாதிபதியின் தங்கப் பதக்கத்தை வென்ற இப்படம், பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை ரேக்கு பெற்றுத் தந்தது.