
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
THE WORDS
(ஹாலிவுட் திரைப்படம்)
நான் சமீபத்தில் பார்த்து, மிகவும் ஈர்க்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம். ஒரு எழுத்தாளரின் வாழ்க்கையைச் சுற்றி பின்னப்பட்ட கதை.
ரோரி ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டே, கதைகள் எழுதிக் கொண்டிருப்பவன். மிகப் பெரிய நாவலாசிரியராக வர வேண்டும் என்பது அவனுடைய ஆசை.
அவனுடைய காதலி டோரா. ரோரி எழுதிய கதைகள் நன்றாக இருந்தாலும், அதை நூலாக கொண்டு வர முடியவில்லை. யாருக்கும் தெரியாத ஆளாக இருப்பதால், பதிப்பாளர்கள் மறுத்து விடுகிறார்கள்.
இந்த நேரத்தில் ரோரிக்கும் டோராவிற்கும் திருமணம் நடைபெற்று, தேன் நிலவுக்காக அவர்கள் பாரிஸூக்குச் செல்கிறார்கள். அங்கு பழைய பொருட்கள் விற்கப்படும் ஒரு கடையில், ஒரு பழைய தோல் பையை விலைக்கு வாங்குகிறார்கள்.
பின்னர் அமெரிக்காவிற்கு திரும்பி வந்து விடுகிறார்கள். ஒரு நாள் வீட்டில் தனியாக இருக்கும்போது ரோரி அந்த பழைய தோல் பையைத் திறக்க, அதன் ஒரு உறைக்குள் பேனாவால் எழுதப்பட்ட ஒரு நாவல் இருக்கிறது. அதை வாசிக்கும் ரோரி ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விடுகிறான். ‘அடடா! என்ன எழுத்து!’ என்று வியக்கிறான்.
அந்த நாவலை அப்படியே டைப் செய்து தன் கம்ப்யூட்டரில் அவன் வைத்திருக்கிறான். அதை அவனுடைய மனைவி டோரா பார்க்கிறாள். அதை எழுதியது ரோரிதான் என்று நினைக்கும் அவள் அவனை பாராட்டுகிறாள். அவளின் தூண்டுதலைத் தொடர்ந்து, அது நூலாக ‘The Words’ என்ற பெயரில் வெளிவந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெறுகிறது. அந்த நூல்
சம்பந்தமான ஒரு விழா நடக்கிறது. அதில் ரோரி வாசகர்களுடன் உரையாடுகிறான். விழா முடிவடைந்து, அவன் வெளியே வந்து காருக்குள் அமர, மழை பெய்யும் அந்த இரவு நேரத்தில் ஓரத்தில் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒரு வயதான மனிதர்.
அவர்தான் – அந்த நாவலை எழுதிய உண்மையான எழுத்தாளர். சந்தோஷங்களும், கவலைகளும் நிறைந்த தன் வாழ்க்கையையே அவர் நாவலாக எழுதியிருக்கிறார். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? அந்த தோல் பைக்குள் அந்த கதை எப்படி வந்தது?
நாவலை உண்மையாகவே எழுதியவர் வேறொருவர் இருக்க, பெயரையும் புகழையும் ரோரி வாங்கிக் கொண்டிருக்க… உண்மை வெளியுலகிற்கு தெரிந்ததா?
ஆரம்பத்திலிருந்து இறுதி வரை முழுமையான ஈடுபாட்டுடன், படத்துடன் ஒன்றிப் போய் இருக்கச் செய்யும் மிகச் சிறப்பான திரைக்கதை.
வயதான மனிதராக வரும் ஜெரேமி அயன்ஸ், ரோரியாக வரும் ப்ராட்லி கூப்பர் – இருவரும் நம் உள்ளங்களில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
ஹாலிவுட்டிற்கு மதிப்பையும், மரியாதையையும் தேடித் தந்திருக்கும் ஒரு தரமான படம்!
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook