காணாமல் போன கேசவன்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4552
காணாமல் போன கேசவன்
எம். முகுந்தன்
தமிழில் : சுரா
கீ
ழே... தெருவிலிருந்து யாரெல்லாமோ பேசிக் கொண்டிப்பதைக் கேட்டுத்தான் நான் கண் விழித்தேன். சாளரங்கள் திறந்து வைக்கப்பட்டிருந்ததால், வெயில் உள்ளே விழுந்திருந்தது. நான் எழுந்து சாளரத்திற்கருகில் சென்று நின்று கீழே பார்த்தேன். உக்குவம்மாவின் நரை விழுந்த தலையைத் தான் முதலில் பார்த்தேன். அவளைச் சுற்றி கூட்டமாக நின்று கொண்ருந்தவர்களில் தேநீர்கடைக்காரன் கேளப்பனின் வழுக்கைத் தலையும், காலி கோணிசாக்கு வியாபாரி அஸ்ஸனாரின் மொட்டைத் தலையும் தெரிந்தது.
காலையிலேயே ஏதோ நடந்திருக்கிறது. கல்லுகுளக்கரையில் அரிதாகவே ஏதாவது நடைபெறும். அதனால் அது என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்கு எனக்குள் திடீரென்று ஆர்வம் உண்டானது. நான் என்னுடைய ஓட்டைகள் விழுந்த கையற்ற பனியனை எடுத்து, அணிந்து, கீழே இறங்கினேன். வழக்கம்போல ஏணிப்படி அசைந்து ஆடியது.
கேளப்பனின் தேநீர் கடைக்கு முன்னால் நின்று கொண்டு அஸ்ஸனாரும் மற்றவர்களும் உக்குவம்மாவைச் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். என்பது எனக்கு உடனடியாக புரிந்து விட்டது. என்னைப் பார்த்ததும் உக்குவம்மா மூக்கைச் சீந்தவும், அழவும் ஆரம்பித்தாள்.
‘உக்குவம்மா... அழாமல் இருக்கணும்’கேளப்பன் சமாதானப்படுத்தினார். ‘‘கேசவனை நாம கண்டு பிடிக்கலாம்.’’
உக்குவம்மாவின் மகன் கேசவன் காணாமல் போய் விட்டான் என்பதும், அதுதான் சம்பவமென்பதும் எனக்கு புரிந்தது.
‘இவளோட அப்பன் என்னை விட்டு விட்டுப் போய் விட்டார். மகனும் இனி என்னை விட்டுட்டு போய் விட்டானா?
உக்குவம்மா கையைச் சுருட்டி தன் மார்பில் இரண்டு முறை குத்தினாள். தன்னைத் தானே அடித்துக் கொண்ட அந்த அடியின் வேகத்தால், அவள் பின்னோக்கி சாய்ந்து விழ இருந்தபோது, அஸ்ஸனார் அவளைத் தாங்கி நிறுத்தினார்.
‘இங்கே வாங்க’ கேளப்பன் உக்குவம்மாவின் கையைப் பிடித்து கடைக்குள் கொண்டு போவதற்கு முயற்சித்தான். ‘ஒரு தேநீரைப் பருகி மன நிம்மதியுடன் இருங்க... உங்களுடைய மகன் உலகத்தின் எந்த மூலையில் போய் இருந்தாலும் சரி.... நாங்கள் அவனைக் கண்டு பிடிப்போம், அஸ்ஸனார் திரும்பவும் கூறினார்.
ஆனால், உக்குவம்மாவிற்கு மன அமைதி கிடைக்கவில்லை. அவளுடைய அழுகை நிற்கவுமில்லை. தேநீர் பருக வேண்டும் என்ற கேளப்பனின் அழைப்பை அவள் நிராகரித்து விட்டாள். இறுதியில் கேளப்பனும் அஸ்ஸனாரும் சேர்ந்து அவளைக் கைளைப் பிடித்து வீட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள்.
அதற்குள் அங்கு கூடி நின்றிருந்தவர்களிடமிருந்து மேலும் தகவல்களை நான் கேட்டு தெரிந்து கொண்டேன். இன்றுடன் கேசவன் காணாமல் போய் மூன்று நாட்களாகி விட்டன. அவன் எங்கு சென்றான் என்று யாருக்கும் தெரியவில்லை.
தெருவில் வெயில் அதிகமாக இருந்தது. நான் கேளப்பனின் தேநீர் கடைக்குள் நுழைந்து, ஸ்டூலின் மீது அமர்ந்தேன். பின்னால் மூட்டை தூக்கும் கணாரியும். நாங்கள் தலா ஒரு பீடியைப் பற்ற வைத்த புகையை விட்டுக் கொண்டிருந்த போது, கேளப்பனும் அஸ்ஸனாரும் திரும்பி வருவதைப் பார்த்தோம்.
மாஸ்டர்.... நாம கொஞ்சம் அந்த கேசவனைத் தேடிப் போவோமோ? கேளப்பன் சொன்னார்.
அஸ்ஸனார் இன்னும் கொஞ்சம் சேர்த்தார். ‘அது நம்மோட கடமை.’
அந்த நிமிடம் வேறொரு சிந்தனை என் மனதிற்குள் கடந்து சென்றது. கல்லுகுளக்கரையைச் சேர்ந்தவர்களுக்குக் கேசவன் எப்போது இந்த அளவிற்கு விருப்பத்திற்குரிய மனிதாக மாறினான்? இதுவரை அவன் யாருக்குமே வேண்டாதவனாக அல்லவா இருந்தான்? உக்குவம்மாவே கூட அவனுடைய தலையில் இடியின் நெருப்பு விழட்டும் என்று புலம்பியிருக்கிறாளே? கல்லுகுளக்கரையில் உள்ள மனிதர்கள் மட்டுமல்லகாகங்களும் நாய்களும் கூட அவனை வெறுக்கத்தானே செய்தன?
நான் கல்லுகுளக்கரையைச் சேர்ந்தவனல்ல. சுமார் ஒரு வருடத்திற்கு முன்புதான் கல் பாலத்திற்கு அக்கரையில் பேருந்தை விட்டு இறங்கி, பழைய இரும்புப் பெட்டியுடன் நான் இந்த ஊருக்குள் கால் வைத்தேன். அந்த நாளை இப்போதும் நான் தெளிவாக நினைத்துப் பார்க்கிறேன். கல்லுகுளக்கரையில் மொத்தம் நான்கு கடைகள்தான் இருக்கின்றன. அதுதான் இந்த கிராமப் பகுதியில் கடைத் தெரு, கேளப்பனின் தேநீர் கடைக்கு மேலே இருக்கும் அறையை எனக்கு வாடகைக்கு தருவதாக அவன் ஒத்துக் கொண்டிருந்தான்.
நான் தகரப் பெட்டியைத் தூக்கிப் பிடித்தவாறு கடைத் தெருவை நோக்கி நடந்தேன். தெருவின் ஒரு பக்கம் தாழ்வாக இருந்தது. அங்கு ஒரு வாய்க்காலும், கொஞ்சம் குடிசைகளும் இருந்தன. குடிசைகளுக்கு அப்பால் பரந்து கிடக்கும் வயல்... நான் சுமார் ஒரு ஃபர்லாங் தூரம் நடந்திருக்க வேண்டும். தெருவின் ஓரத்திலிருந்த தாழ்வான பகுதியிலிருந்து ஒரு உருவம் திடீரென்று எனக்கு முன்னால் ஏறி வந்தது. ஒரு நிமிடம் நான் அதிர்ச்சியடைந்து நின்று விட்டேன். ஆறடிக்கும் அதிகமான உயரத்தைக் கொண்ட மெலிந்த சரீரத்திற்கு மேலே பெரிய ஒரு தலை...... மூக்கின் இடத்தில் ஒரு பெரிய குழி...மேலுதடுகளைத் துளைத்து வெளியே எட்டிப் பார்த்தவாறு நின்றிருக்கும் நீளமான பற்கள்........ விரிந்து தொங்கிக் கிடக்கும் கீழுதட்டிலிருந்து எச்சில் வழிந்து விழுந்து கொண்டிருந்தது.
உருவம் எனக்கு நேராக வந்தபோது, நான் ஓரடி பின்னால் விலகி நின்றேன். அது தன் நீளமான மெலிந்து போய் காணப்பட்ட கையை என்னை நோக்கி நீட்டியது. எதற்கு என்று எனக்கு தெளிவாக தெரியவில்லை. பழக்கம் காரணமாக இருக்க வேண்டும்நான் பைக்குள்ளிருந்து கால் ரூபாயை எடுத்து அவனுடைய உள்ளங் கையில் வைத்தேன். என் கணிப்பு தவறவில்லை. மூக்கின் இடத்தில் இருந்த துவாரத்தின் வழியாக பெரிய ஒரு சீழ்க்கை ஒலியை உண்டாக்கியவாறு அவன் தாழ்வாக இருந்த பகுதியில் ஓடி இறங்கி மறைந்தான். நான் கடைகள் இருக்கும் தெருவை நோக்கி நடந்தேன். அப்போதுதான் எனக்கு மூச்சு சீராக வந்தது.
கேளப்பனின் வேலைக்காரி மேலேயிருந்த அறையைப் பெருக்கி அள்ளி சுத்தம் பண்ணி வைத்திருந்தாள். படுப்பதற்கு எண்ணெய் கறை படிந்த ஒரு பழைய படுக்கையும், உட்காருவதற்கு ஒரு ஸ்டூலும், அணியும் துணியைத் தொங்க விடுவதற்காக ஒரு கயிறும் அங்கு இருந்தன. நான் என்னுடைய தகரப் பெட்டியை அறையின் மூலையில் வைத்து விட்டு ஒரு பீடியைப் பற்ற வைத்தவாறு சாளரத்தின் அருகில் போய் நின்றேன். அந்த வகையில் கல்லுகரையில் என்னுடைய வாழ்க்கை ஆரம்பமானது.
திடீரென்று தூரத்தில் முன்பு பார்த்த அந்த உருவம் நடந்து வருவதை நான் பார்த்தேன். நீண்ட கால்களை நீட்டி வைத்து, மிகவும் வேகமாக அது நடந்து வந்து கொண்டிருந்தது. நான் பீடியை இரண்டு இழுப்பு இழுப்பதற்குள், அது கேளப்பனின் கடைக்கு முன்னால் வந்து சேர்ந்திருந்தது. தெருவிலேயே நின்றவாறு உருவம் என்னென்னவோ வினோதமான சத்தங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தது.