விபச்சாரம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 9446
அம்முவின் முகம் சுண்ணாம்பு போன சுவரைப் போல் ஆனது. அவள் கீழே விழப் போனதும் அவளின் இடுப்புப் பகுதியில் ஆண்டி ஒரு அடி கொடுத்ததும் ஒரே நேரத்தில் நடந்தது.
அவள் படியின் மேல் போய் விழுந்தாள். கையில் கிடைத்த ஒரு விறகுக் கட்டையால் ஆண்டி அவளை மேலும் அடித்தான். அவள் வலி தாங்க முடியாமல் கத்தினாள் : "அய்யோ... என்னை அடிக்காதீங்க. நான் உண்மையைச் சொல்லிடுறேன். எனக்குப் பணம் தந்தது அந்த வக்கீல்தான்!"
ஆண்டி உரத்த குரலில் கத்தினான் : "ஏன்டி நீ வக்கீலை வீட்டுக்குள்ளே விட்டே? அவன் கிட்ட இருந்து ஏன் நீ காசு வாங்கணும்?"
"காய்ச்சல் வந்து படுத்துக் கிடக்குற குழந்தைக்குக் கொஞ்சம் அரிசி வாங்கி கஞ்சி வச்சி கொடுக்க. அய்யோ... அதற்காகத்தான் மத்தியானம் நிலத்தைப் பார்க்க வந்த வக்கீல்கிட்ட நான் எட்டணா கேட்டேன்..."
"பிறகு?"
"வக்கீல் ரெண்டு ரூபாய் தந்தாரு. சாயங்காலம் வரட்டுமான்னு கேட்டாரு. நான் ஒண்ணும் பேசல."
"ஒண்ணும் பேசல. ஒண்ணுமே பேசல. இல்லையாடி...?"
கோபத்தை அடக்க முடியாமல் ஆண்டி அம்முவை மீண்டும் மீண்டும் அடித்தான். அவள் வேதனை தாங்க முடியாமல் கத்தினாள்.
அவள் ஒரு மூலையில் விழுந்து கிடக்க, விறகுக் கட்டையைத் தூரத்தில் எறிந்த ஆண்டி படியிறங்கி வெளியேறினான்.
வக்கீல் மீது கொண்ட வெறுப்பைத் தீர்ப்பதற்காக அவனின் மனைவியிடம் நடந்த சம்பவம் முழுவதையும் சொல்லிவிட வேண்டும் என்ற தீர்மானத்துடன் அவன் வக்கீலின் வீடான 'வனஜா விலாச'த்தைத் தேடிப் போனான்.
'வனஜா விலாசம்' மூன்று மாடிகளைக் கொண்ட ஒரு மிகப் பெரிய மாளிகை. ஆண்டி நேராக சமையலறையைத் தேடிப் போனான். சமையல்காரன் கோவிந்தன் நாயரைப் பார்த்து, அவன் மூலம் வக்கீலின் மனைவி மீனாட்சிக் குட்டியம்மாவிடம் விஷயத்தைச் சொல்லலாம் என்று அவன் திட்டம் போட்டிருந்தான். ஆனால், சமையலறை பூட்டப்பட்டிருந்தது. கோவிந்தன் நாயரை அங்கு எங்கேயும் காணோம்.
வக்கீல் அங்கு வந்து சேர்ந்ததற்கான அடையாளமே கொஞ்சம் கூட இல்லை.
வீட்டின் கிழக்குப் பக்கம் வழியே அவன் தெற்குப் பக்கம் நோக்கி நடந்தான். இரண்டாவது அறையில் யாரோ பேசும் குரல் அவனுக்கு கேட்டது.
அடைக்கப்பட்டிருந்த ஜன்னலின் இடைவெளி வழியாக அவன் உள்ளே பார்த்தான்.
உள்ளே ஒரு மேஜை விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. அழகான ஒரு வெல்வெட் மெத்தை மேல் முக்கால் நிர்வாண கோலத்தில் மீனாட்சிக் குட்டியம்மா படுத்திருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் கோவிந்தன் நாயர் உட்கார்ந்திருந்தான்.
காம உணர்வு ததும்பும் ஒரு புன்சிரிப்புடன் கோவிந்தன் நாயரின் கன்னத்தைக் கிள்ளிய மீனாட்சிக்குட்டியம்மா சொன்னாள் :
"கோவிந்தா, முதலாளி மாசச் சம்பளத்தைக் குறைக்கப் போறதா சொன்னதை வச்சு நீ போயிட வேண்டாம். உனக்கு என்ன வேணும்? சில்க் சட்டை வேணுமா? வேஷ்டி வேணுமா? சினிமா பாக்குறதுக்கும் வேற ஏதாவது செலவுக்கும் பணம் வேணுமா? எல்லாத்துக்கும் நான் தர்றேன். பிறகு ஏன் நீ ஊருக்குப் போகணும்?"
அவள் அவனை வெறி மேலோங்க கட்டிப் பிடித்தாள். விளக்கை அணைத்தாள்... அதற்குப் பிறகு நடந்தது எதையும் ஆண்டியால் பார்க்க முடியவில்லை.
ஆண்டி திரும்பவும் தன்னுடைய வீட்டை நோக்கி நடந்தான். பலவிதப்பட்ட சிந்தனைகளும், சந்தேகங்களும் அவனின் மனதை முழுமையாக ஆக்கிரமித்து விட்டிருந்தன.
தன்னுடைய மனைவி விபச்சாரியாக மாறியதற்குக் காரணம் பட்டினியை நீக்க என்பதை அவன் புரிந்து கொண்டான். ஆனால், எத்தனை முறை திரும்பத் திரும்ப சிந்தித்துப் பார்த்தாலும் இந்த முப்பத்தைந்து வயது பெண்ணான மீனாட்சிக் குட்டியம்மா பதினெட்டு வயது பையனுடன் விபச்சாரம் செய்ததற்கான காரணம் என்ன என்பதை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
கடைசியில் ஆண்டி ஒரு முடிவுக்கு வந்தான் : "பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவனும், படித்தவனும், பணக்காரனுமான வக்கீலோட பொண்டாட்டியை விட என் அம்மு எவ்வளவோ நல்லவ!"
ஆண்டி வீட்டை அடைந்தபோது அம்மு சுய உணர்வே இல்லாமல் அதே இடத்தில் படுத்துக் கிடந்தாள்.
அவன் அந்தத் தகர விளக்கை எடுத்து அறை முழுக்கத் தேடினான். அந்த ஒரு ரூபாய் நாணயம் ஒரு மூலையில் எறியப்பட்டுக் கிடந்தது. அதைக் கையில் எடுத்த அவன் தன் மனைவியை அழைத்தான் : "அடியே அம்மு... எந்திரிச்சு அந்தப் பாத்திரத்தையும் பாட்டிலையும் எடு. ஒரு பந்தத்தைப் பத்தவை. நான் வேகமாப் போயி அரிசியும் சாமான்களும் வாங்கிட்டு வந்திர்றேன்."
அம்முவிற்கு ஒரு புத்துயிர் வந்தது போல் இருந்தது. அவள் தட்டித் தடுமாறி எழுந்து அவனிடம் பாத்திரத்தையும், பாட்டிலையும் எடுத்துத் தந்தாள். வேகமாக ஒரு பந்தத்தைத் தயார் பண்ணி தன் கணவனை கடைக்கு அனுப்பினாள்.