
பழம் வாங்கிக்கிட்டு வந்து அவர் என்னைச் சாப்பிடச் சொன்னார். நிறைய பழங்கள் இருந்துச்சு. நான் வயிறு நிறைய சாப்பிட்டேன். பசி அடங்கின மாதிரி இருந்தது. என்னோட சமநிலை தவறியது. நான் வாய்விட்டு அழுதேன். என் மீது யாருமே கருணை காட்டியது இல்ல. நான் அழுதுக்கிட்டே சொன்னேன்:
‘‘நான் தூக்குல தொங்கி சாகப் போறேன்!’’
சொல்லிட்டு மடியில இருந்த கயிறை எடுத்து அவர்கிட்ட காண்பிச்சேன். அவர் அதைக் கையில வாங்கினார். கடைக்குப் போயி ரெண்டு மூணு தேக்கு இலைகளை வாங்கிக்கிட்டு வந்தார். மீதியிருந்த பழங்களை அந்த இலைகள்ல கட்டினார். என் கையில அதைக் கொடுத்திட்டு சொன்னார்:
‘‘கொண்டு போயி அம்மாக்கிட்ட கொடு...’’
நாங்க நடந்தோம். கொஞ்ச தூரம் நடந்த பிறகுதான் கோவிலைப் பார்த்தேன். அதற்குப் பின்னாடி இருந்த பலாமரத்தைப் பற்றி நான் அவர்கிட்ட சொன்னேன். அவர் சொன்னார்!
‘‘தம்பி, வாழ்க்கைன்றது ஒரு வரம். இதில் கஷ்டங்கள், பிரச்சினைகள் எல்லாமே இருக்கும். வாழ்க்கையை தைரியத்தோட நாம சந்திக்கப் பழகிக்கணும். மனசுக்குத் தோணினபடி வாழ்க்கையை முடிச்சுக்க நினைக்கிறது ஒரு பாவச் செயல். சிந்திச்சுப் பார்த்து செயல்படணும். தெய்வம் எல்லா விஷயங்களையும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கு. அதற்கு எல்லாவற்றையும் நல்லாவே தெரியும். நாளைக்கு என்ன நடக்கப் போகுதுன்னு குழந்தை... உனக்குத் தெரியுமா? நீ நல்லா படிக்கணும். கஷ்டப்பட்டு படிக்கணும். தெய்வத்தோட உதவி அதற்கு கட்டாயம் இருக்கும். தெய்வம் கருணை மயமானது...’’
நான் சொன்னேன்:
‘‘எனக்கு தெய்வத்தின் மேல் நம்பிக்கை இல்ல...’’
‘‘இருக்கட்டும்... ஆனா, தெய்வம் கருணைமையமானதுதான். இந்த உலகத்துல பறவைகள், மிருகங்கள் எல்லாமே வாழ்ந்துக்கிட்டுத்தானே இருக்கு! எல்லாத்துக்கும் இங்கே உணவு கிடைக்கத்தான் செய்யுது. முயற்சி பண்ணனும். பிரச்சினைகளைச் சந்திக்கணும். கஷ்டப்படணும். தன்னம்பிக்கையை விட்டுடக் கூடாது, தெரியுதா? நானும் இந்த உலகத்துல ஒரு மனிதன்தான். நான் வாழ்வேன். குழந்தை... உன் வயசுல எனக்கும் ஒரு மகன் இருக்கான்.’’
நாங்க நடந்தோம். ஆற்றங்கரையை நெருங்கினப்போ, கையில இருந்த கயிறை அவர் ஆற்றுக்குள்ளே எறிஞ்சார்.
எங்க வீட்டுக்குப் போற வழி வந்தவுடனே நான் அவர்கிட்ட விடைபெற்றேன். அப்போ அவர் தன்னோட மடியில இருந்து ஒரு தாள் பொட்டலத்தை எடுத்து பிரிச்சு, அஞ்சு வெள்ளி ரூபாயை என் கையில தந்தார். தந்துட்டு சொன்னார்.
‘‘இத வச்சு அரிசியும், மற்ற பொருட்களையும் வாங்கிக்கோங்க...’’
அவர் நடந்தார். இன்னைக்கு இருக்குற ரூபாவோடஒப்பிட்டுப் பார்த்தா அந்த அஞ்சு ரூபாய்க்கு ஐம்பது ரூபாவோட மதிப்புன்னு சொல்லலாம். அவர் திரும்பி நின்னு சொன்னார்:
‘‘குழந்தை... உன்னை தெய்வம் காப்பாத்தட்டும்...’’
நான் வீட்டுக்குப் போய் பழத்தையும், பணத்தையும் அம்மா கையில கொடுத்துட்டு, நடந்த விஷயங்களைச் சொன்னேன். அம்மா என்னைக் கட்டிப் பிடிச்சு அழுதாங்க. அம்மா சொன்னாங்க:
‘‘மகனைக் காப்பாத்தின அந்த மனிதருக்கு கடவுள் அருள் செய்யட்டும்!‘‘
அன்னைக்கு இரவு நாங்க வயிறு நிறைய சாப்பிட்டு முடிச்சு, நிம்மதியா உறங்கினோம். காலையில பார்த்தா ஆச்சரியம்! காணாமப் போயிருந்த என்னோட அப்பா கையில ஏகப்பட்ட சாமான்களுடன் நிறைய பணத்துடன் வந்து நிக்கிறார்...’’
நான் கேட்டேன்:
‘‘அஞ்சு ரூபாயும் அந்த பழங்களையும் தந்த மனிதரோட பேர் என்னன்னு தெரியுமா?’’
‘‘தெரியாது, பேரைக் கேட்கணும்னு தோணல. அந்த மனிதரை மட்டும் நான் பார்க்காம இருந்திருந்தா, என் நிலைமை என்ன ஆகியிருக்கும்!’’
‘‘நினைச்சுப் பார்த்தா நடந்த விஷயம் ஆச்சரியமான ஒண்ணுதான்...’’
அவர் சொன்னார்:
‘‘இதுதான் பழத்தைப் பார்க்குறப்பெல்லாம் ஞாபகத்துல வர்ற - என் வாழ்க்கையில நடந்த பயங்கர சம்பவம்!’’
நாங்கள் காரில் ஏறினோம். கார் புறப்பட்டபோது, அவர் சொன்னார்:
‘‘காலம் எவ்வளவோ ஓடிச்சு. அந்த மனிதர் இப்போ இறந்திருப்பார். அவரோட ஆத்மாவுக்கு கடவுள் நிரந்தர அமைதியைத் தந்து அருள் செய்யட்டும்...’’
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook