நீலவானமும் சில நட்சத்திரங்களும் - Page 6
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6825
நான்கைந்து சிறைப் பணியாட்கள் பெட்ரோமாக்ஸ் விளக்குடன் அவர்களுக்காக அங்கு காத்து நின்றிருந்தனர்.
“ம்... ஸ்ரீதரா, கதவைத் திற.”
ஸ்ரீதரன் கதவைத் திறந்தான். இரண்டு பணியாட்கள் முதலில் அறையினுள் நுழைந்தனர். அவர்களுக்குப் பின்னால் பிள்ளையும் பெட்ரோமாக்ஸ் விளக்கொளியில் ராமதாஸின் முகத்தைப் பார்த்தார். சுவரோடு சேர்ந்து நின்றிருந்தான் ராமதாஸ்.
“ராமதாஸ்...”
ராமதாஸ் தலையைத் திருப்பினான். கனவிலிருந்து எழுவதைப் போல பிள்ளையையே வைத்த கண் எடுக்காது அவன் பார்த்தான். தன்னை ஏன் அவன் அவ்வாறு பார்க்கிறான் என்று பிள்ளை அப்போது நினைக்காமல் இல்லை.
“ராமதாஸ்... நேரமாயிடுச்சு. போவோமா?”
பணியாட்களில் இரண்டு பேர் அவனைப் பிடிக்கப் போக, ‘வேண்டாம்’ என்று தடுத்தார் பிள்ளை.
தந்தையின் முன் அஞ்சி நிற்கும் சிறு குழந்தையைப் போல தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு பிள்ளையின் முன் அமைதியாக நின்றிருந்தான் ராமதாஸ். இரண்டு வேலையாட்கள் பெட்ரோமாக்ஸ் விளக்குடன் முன்னால் நடந்து செல்ல மற்ற இரண்டு பேர்களும் ராமதாஸின் இரண்டு பக்கங்களிலும் வந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் பிள்ளையும், ஸ்ரீதரனும்.
தூக்கு மரத்திற்கருகில் டாக்டர் வந்து அவர்களுக்காகக் காத்து நின்றிருந்தார். டாக்டரின் கண்களில் இன்னும் உறக்கக் கலக்கம் முற்றிலும் நீங்கவில்லை. அவர் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்திருக்க வேண்டும். அருகே இப்படியும் அப்படியுமாக சாய்ந்தாடிக் கொண்டிருந்த பத்ரோஸ் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
“டெஸ்ட் பண்ணிப் பார்க்கட்டுமா?” -டாக்டர் கேட்டார்.
“ம்...” என்றார் பிள்ளை.
டாக்டர் சோதனை செய்து பார்த்தார். எப்போதும் வழக்கமாக செய்து பார்க்கின்ற ஒன்றுதான் இதுவும். அது முடிந்ததும் பிள்ளை கேட்டார். “என்ன... காரியத்தைப் பார்ப்போமா?”
“ம்...” என்று கூறிய டாக்டர் சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டார்.
இரண்டு பணியாட்கள் ராமதாஸைக் கொண்டு வந்து பலகையின் மேல் நிறுத்தினார்கள். பிள்ளை ராமதாஸின் முன்னால் போய் நின்றார். ஒரு நிமிடம் இருவருடைய கண்களும் சந்தித்துக் கொண்டன. ராமதாஸின் முகத்தில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்வதைப் போல உணர்ந்தார் பிள்ளை. “பத்மினிங்கற உன் அண்ணன் சம்சாரத்தைக் கொலை செய்த குற்றத்துக்காக இப்போ உன்னைத் தூக்குல போடப் போறோம்...” அதற்கு மேல் பிள்ளையால் பேச முடியவில்லை. அதற்குள் கேவிக் கேவி அழ ஆரம்பித்து விட்டான் ராமதாஸ். அவனுடைய இரண்டு கண்களிலிருந்தும் கண்ணீர் அருவியென வழிந்து கொண்டிருந்தது. ஆனால் உதட்டுக்கு வெளியே ஒலி வர மறுத்தது. மெதுவாக ‘ணொய் ணொய்’ என்று ஒரு சப்தம் மட்டும் தொண்டைக்குள்ளிருந்து புறப்பட்டு வந்தது. “நான்... நான் கொலை செய்யல. நான் வாழணும்...” இதைக் கூறிவிட்டு தரையில் விழுந்து புரள ஆரம்பித்தான் ராமதாஸ். அவனைப் பிடித்து நிறுத்தினர் பணியாட்கள். கதறிக் கொண்டிருந்த ராமதாஸின் கழுத்தில் சுருக்குக் கயிறு மாட்டப்பட்டது. கயிறு சரியாக மாட்டப்பட்டிருக்கிறதா என்று ராமதாஸின் கழுத்துப் பகுதியைச் சரி பார்த்தான் ஸ்ரீதரன்.
“ம் இழுக்கட்டுமா?” - தாமஸ் வினவினான்.
“ம்...” - பிள்ளை.
“லிவரைத் தட்டு... பத்ரோஸ்...” - தாமஸ் சத்தமிட்டான்.
பத்ரோஸ் லிவரைத் தட்டினான். ராமதாஸின் உடல் பள்ளத்தை நோக்கி விரைந்தது. அப்போது கீழேயிருந்து மேல் நோக்கி ஓலமாய் வந்தது ஒரு குரல்... “நான் இல்ல... என் அண்ணன்தான்...”
அந்தக் கயிறு பாம்பைப் போல முழுக்கேறிப்போய் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.
பிள்ளை மெதுவாகத் திரும்பினார். எவ்வித சலனமுமின்றி கண்களால் மேல் நோக்கிப் பார்த்தார். கருநீல நிறத்தில் நிர்மலமாகக் காட்சியளித்தது வானம். அங்கு முல்லைப் பூக்களைச் சிதறவிட்டது போல் நட்சத்திரங்கள். என்னென்னவோ நினைத்துக் கொண்டார் பிள்ளை அப்போது. தான் ஏதோ கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பது போல உணர்ந்தார். மீண்டும் அவரை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது தாமஸின் குரல்தான். “ஆள் அனேகமா செத்திருப்பான். மேலே தூக்கிடுவோமா?”
“ம்...”
பணியாட்கள் கயிற்றை மேல் நோக்கி இழுத்தனர். வளைந்து போய் ஒரு மனித உடல் கயிற்றின் நுனிப் பகுதியில் தொங்கிக் கொண்டிருந்தது. உடலைச் சுற்றியிருந்த ஆடை முழுவதும் ஒரே மலம், மூத்திரம். முகம் வீங்கிப்போயிருந்தது. கயிற்றிலிருந்த உடம்பைப் பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் மெதுவான குரலில் சொன்னார்: “உயிரு போயிடுச்சு...” இதைக் கூறி விட்டு சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்திக் கொண்டார். மற்றொரு சிகரெட்டை எடுத்து பிள்ளையிடம் நீட்டினார். அதை வாங்கிப் புகைத்தவாறு பிள்ளை கூறினார். “ம்... இந்த சர்ட்டிபிகேட்டில் ஒரு கையெழுத்துப் போடுங்க...”
பாக்கெட்டிலிருந்து டைப் அடிக்கப்பட்ட அந்த சர்ட்டிபிகேட்டை எடுத்து நீட்டினார் பிள்ளை. அதை வாங்கி கையெழுத்திட்டு பிள்ளையிடம் கொடுத்தார் டாக்டர்.
“ம்... அப்போ நான் வரட்டுமா?”
“ம்...” - பிள்ளை முனகுவது மட்டும் கேட்டது.
டார்ச்சை அடித்துக் கொண்டே நடந்தார் டாக்டர்.
“ஸ்ரீதரா... தாமஸ்...”
இருவரும் பிள்ளையின் முன் வந்து நின்றனர்.
“நான் வீட்டுக்குப் போறேன். காலையில விடிஞ்சவுடன் இந்த பொணத்தை இவனோட அண்ணன்கிட்டே ஒப்படைச்சிடுங்க... தெரியுதா?”
“சரி, ஸார். நீங்க போங்க... உங்க முகம் என்னமோ மாதிரியிருக்கே!”
பதிலொன்றும் கூறாமல் பிள்ளை நடக்க ஆரம்பித்தார். அவருடைய வீட்டின் முன்னால் விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. கதவைத் தட்டினார். அவருடைய மனைவிதான் வந்து கதவைத் திறந்தாள். எவ்வித சலனமுமின்றி உள்ளே நுழைந்த பிள்ளை மேஜையின் முன்னால் போய் அமர்ந்தார். டிராயரைத் திறந்து உள்ளேயிருந்த வெள்ளைக் காகிதமொன்றை உருவி எடுத்தார். அதில் எழுதும்போது, அவருடைய விரல்களில் ஒரு நடுக்கம். அந்த ராஜினாமா கடிதத்தை எழுதி முடித்ததும் கீழே கையெழுத்திட்டார். அப்போது காபி டம்ளருடன் முன்னால் வந்து நின்றாள் அவர் மனைவி. காபியை வாங்கிய அவர் ஜன்னலருகில் போய் நின்றார். காபியைப் பருகப்போன அவர் என்ன காரணத்தாலோ அதையே வெறித்துப் பார்த்தார். அதில் ஏதோ ஒரு நிழல் அசைவது போலிருந்தது. அது... அது... வேறு யாருமல்ல ராமதாஸின் சிதைந்துபோன உடல்தான். காபியைப் பருகாமல் அப்படியே ஜன்னல் வழியாக வெளியே கொட்டி விட்டார்.
“ஏன்... என்ன ஆச்சு?” -பதறிப்போய் கேட்டாள் அவரின் மனைவி.
“ஒண்ணுமில்ல... மினி எங்கே?”
“அவளுக்குக் கொஞ்சம் காய்ச்சலடிச்சது. தூங்கிக்கிட்டிருக்கா...”
“காய்ச்சலா?” - பிள்ளையின் குரலில் ஒரு பதற்றம்.
“ம்... ஆனா இப்போ பரவாயில்ல...”
“வா பார்க்கலாம்.”
படுக்கையறைக்குள் நுழைந்த பிள்ளை அங்கே உறங்கிக் கொண்டிருந்த மினியின் நெற்றியில் கையை வைத்துப் பார்த்தார். நெருப்பைப் போல சுட்டது நெற்றி.
“உஷ்ணம் அதிகமா இருக்கே. உடனே டாக்டரை கூப்பிடறது தான் நல்லது.”
படுக்கையறையை விட்டு வெளியே வந்தார் பிள்ளை. மேஜையின் மேலிருந்த டார்ச் விளக்கைக் கையில் எடுத்தார். அப்போது, அதனருகில் இருந்த அந்த ராஜினாமா கடிதத்தின் மேல் அவரின் பார்வை சென்றது. அதையும் கையில் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே இறங்கினார். வீட்டை ஒட்டிப் போகின்ற ஒற்றையடிப்பாதையில் நடக்கும்போது, மினியின் வாடித் தளர்ந்துபோன முகம் அவருடைய மனதின் அடித்தளத்தில் வலம் வந்தது. பிறகு என்ன நினைத்தாரோ, கையிலிருந்த அந்த ராஜினாமா கடிதத்தைப் பல துண்டுகளாகக் கிழித்துப் பாதையோரத்தில் வீசினார்.
மேலே வானத்தின் கருமை மெல்ல மெல்ல நீங்கிக் கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் அப்போது ஒன்றுகூட இல்லாமல் மறைந்து விட்டிருந்தன.