ஊனக்கால் பெண் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7144
வயதை அடைந்திருக்கும் பெண்கள் எதையாவது கேட்டால், உடனே சிரிப்பார்கள். தந்தையோ கணவனோ- யாராவது மரணத்தைத் தழுவி விட்டார்கள் என்று கேட்கும்போதுகூட பெண்களுக்கு முதலில் வருவது வெறும் சிரிப்புதான். ஆனால் அது சிரிக்கக் கூடிய செய்தி அல்ல என்பதே பிறகுதான் அவர்களுக்குத் தோன்றும். உடனே அழ ஆரம்பித்து விடுவார்கள். அப்படிப் பார்க்கும் போது- பெண்களுடைய சிரிப்பிற்கும் அழுகைக்கும் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா, உலகமே?' என்று எழுதினான். அதற்குப் பிறகும் அவன் எழுதினான்...''
“அரக்கன்! அயோக்கியன்! கேடி ராஸ்கல்! அவனை நீங்க யாரும் எதுவுமே செய்யலை... அப்படித்தானே? பிறகு...''
“ம்... நான் அவனுடைய முதுகில் மையைத் தெளித்தேன். ஒன்றிரண்டு மைத் துளிகள் அவனுடைய புத்தகத்திலும் விழுந்தன. வேட்டியிலும் விழுந்தன. அவன் கோபத்துடன் திரும்பிப் பார்த்தான். நாங்கள் ஓடினோம். ஆனால், அந்தத் துரோகி என்னுடைய புடவையை எட்டிப் பிடித்துவிட்டான். என்னுடைய பவுண்டன் பேனாவைப் பிடுங்கி தூரத்தில் எறிந்தான். அதைப் பார்த்து மற்றவர்களும் அருகில் சென்று அவனுடைய முகத்திலும் பிற இடங்களிலும் மையைத் தெளித்தார்கள். அவன் பைத்தியம் பிடித்தவனைப் போல என்னுடைய கையைப் பிடித்தான். நான் அழுது விட்டேன். மற்றவர்கள் அவனைக் கடித்தார்கள், கிள்ளினார்கள், அடித்தார்கள். அவனுடைய பின்பாகத்தில் மிதித்த அப்பிராணிகளான ஆறு மாணவிகளின் தலைமுடியை அவன் பிடித்து இழுத்தான். மற்ற மாணவிகளின் பின்னால் பிசாசைப் போல ஓடினான். கையில் கிடைத்தவள் தலைமை ஆசிரியரின் மகள்தான். அவன் அவளை எட்டிப்பிடித்து வாசலில் வீசி எறிந்தான். அப்படி விழுந்ததில்தான் கால் ஒடிந்து விட்டது...''
“மிகப் பெரிய பாவி...! பிறகு..?''
“அந்தச் சம்பவம் நடந்த உடனேயே தலைமை ஆசிரியரும் ஆசிரியைகளும் மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள். நடந்த சம்பவங்களை அவன் விளக்கிச் சொன்னான். எந்தச் செயலுக்கும் தான் குற்றவாளி அல்ல என்றும் சொன்னான்.''
“ராஸ்கல்! பரம துரோகி! அவன் குற்றவாளி அல்ல என்று சொன்னானா? அப்பிராணியான சின்னப் பொண்ணுங்களை நோக்கி மனம்போனபடி பாய்ந்த அரக்கன்! அயோக்கியன்! துரோகி! அடடா! அவன் கவிஞன் அல்லவா? அவனுக்கு பண்பாடு என்ற ஒன்று இருக்கிறதா? அவன்... ராஸ்கல்! பிறகு...?''
“பிறகு... தலைமை ஆசிரியர் சமாதான சூழ்நிலையை உண்டாக்கினார். உடனே பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். உடன் அந்த ஆளும் போனான்.''
“துரோகி! எதற்கு?''
“படியில் இருந்து விழுந்து விட்டதாகக் கூறினார்கள். ஒரு மாத காலம் மருத்துவமனையிலேயே இருந்தாள். இரவும் பகலும் அவனும் அவளுடன் இருந்தான். "அன்புக் காதலியின் வீழ்ச்சி' என்று அதைப் பற்றி அவன் ஒரு பூடக காவியத்தையும் இயற்றினான். அதை நூலாகக் கொண்டு வந்தபோது, அதை அவளுக்கு சமர்ப்பணம் செய்திருந்தான்.''
“ராஸ்கல்! அவனுடைய மிடுக்கு! பிறகு... அந்த அப்பிராணி சின்னப் பொண்ணு அதற்கும் சம்மதித்து விட்டாள், அப்படித்தானே?''
“சம்மதித்து நடக்குறப்போ,. அந்த ஆள் அவளைத் திருமணமும் செய்து கொண்டான். அது முடிந்து, இப்போ நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இப்போதும் அவன் எப்போதாவது அவளை...''
“அதற்கும் அவள் சம்மதிக்கிறாள், அப்படித்தானே?''
“அதற்கு அவள் கூறுகிறாள்- "மனைவியை அடித்து உதைக்காத கணவன், மனைவி மீது அன்பே இல்லாதவன்' என்று. "கணவர்கள் மனைவியின் தலை முடியைக் கொத்தாகப் பிடித்து அவர்களை உதைக்கவோ அடிக்கவோ செய்வது- ஒரு வகையில் பார்க்கப் போனால், அளவற்ற அன்பு காரணமாகத்தான்' என்று அவள் கூறுகிறாள். அன்பு கொண்ட கணவனே பெண்களை வேதனைப் படுத்து வார்கள்!''
இளம் கிழவி சற்று நேரம் கழித்து ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவாறு சொன்னாள்:
“உண்மையாக இருக்கலாம். ஆனால், நாம் எப்படி சோதித்துப் பார்ப்பது? ஒரு கணவன் வருவது எனக்கும் விருப்பமான ஒரு விஷயம்தான். ஆனால், என்னுடைய காலை அடித்து ஒடிப்பது என்பது...''
“இருந்தாலும்... கணவன் என்ற ஒருவன் இருப்பான் அல்லவா?''- கவலை நிறைந்த பெண் நீண்ட பெருமூச்சை விட்டாள்: “நம்முடைய தலை முடியைக் கொத்தாகப் பிடித்து, நம்முடைய முகத்தில் அடிப்பதற்காவது ஒரு ஆள் இருக்கிறான் என்பது நிம்மதி அளிக்கக்கூடிய ஒரு விஷயம் அல்லவா?''
அவர்கள் பொறாமையுடன் பார்த்தார்கள். அப்போதும் அந்த மனைவியும் கணவனும் பூங்காவின் வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். "நான் இனிமேலும் அடிப்பேன்' என்பதைப் போல நீண்டு நிமிர்ந்து முன்னால் கணவனும், "அதற்கு நான் எதுவும் இப்போ சொல்லலையே!” என்பதைப் போல பின்னால் மனைவியும்...