தி பெய்ன்டெட் வெய்ல் - Page 2
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 4513
மேடையில் ஒரு பெண் பலவித உணர்ச்சிகளையும் காட்டி, சீன மொழி பேசி நடித்துக் கொண்டிருக்கிறாள். சார்லஸூம், கிட்டியும் அருகருகில் அமர்ந்திருக்கிறார்கள். அந்த பெண் ஏன் கவலையாக இருக்கிறாள், ஏன் அழுகிறாள் என்ற சந்தேகங்களை கிட்டி கேட்க, எந்தவித சந்தோஷமும் இல்லாமல் அந்தப் பெண் வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்றும், தன்னை அந்த வெறுப்பு நிறைந்த சூழலிலிருந்து மாற்றுவதற்கு யாராவது காதல் உணர்வுடன் வர மாட்டார்களா என்று அவள் ஏங்கிக் கொண்டிருக்கிறாள் என்றும் கூறுகிறான் சார்லஸ். அதற்குப் பிறகும் அவள் சந்தேகங்கள் கேட்க, 'எனக்கு சீன மொழியே தெரியாது' என்கிறான் சார்லஸ்- சிரித்துக் கொண்டே. அதைக் கேட்டு கிட்டியும் சிரிக்கிறாள். கிட்டி வாழ்க்கையில் முழு சந்தோஷத்துடன் இல்லை என்பதையும், எங்கிருந்தாவது தென்றல் வந்து தன் மீது வீசாதா என்று அவள் ஏங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதையும் புரிந்து கொண்ட அவன், அவளைக் கவர்வதற்காகவே இப்படி குள்ளநரித்தனத்துடன் நடந்திருக்கிறான் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
இப்போது படுக்கையறையில் சார்லஸுடன் சேர்ந்து படுத்திருக்கிறாள் கிட்டி. சார்லஸ் அவளை உடலுறவு கொள்கிறான். அது முடிகிற நேரத்தில், அந்த அறையின் கதவின் தாழ்ப்பாளை வெளியே இருந்து யாரோ 'திருப்புவது' தெரிகிறது. சார்லஸ் பதறிப் போய், தன்னுடைய பேன்ட்டையும், சட்டையையும் எடுத்து அணிகிறான். கிட்டியும் அதிர்ச்சியடைந்து, கதவையே வெறித்துப் பார்க்கிறாள். 'யாராக இருக்கும்? ' என்று சார்லஸ் கேட்க, 'வால்டராகத்தான் இருக்கும்' என்கிறாள் கிட்டி. கதவின் தாழ்ப்பாள் 'திருப்பப்படுவது' நின்று விடுகிறது. அதன் மூலம் வெளியிலிருந்து தாழ்ப்பாளைத் திருப்பிய நபர் அங்கிருந்து போய் விட்டார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. பதைபதைத்துப் போன கிட்டி 'நம் விஷயம் வால்டருக்குத் தெரிந்திருக்குமோ?' என்கிறாள்- கவலை நிறைந்த குரலில். 'அப்படியே தெரிந்தாலும், அதனால் பிரச்சினை இல்லை. அவன் எதுவும் கூற மாட்டான்' என்று சர்வ சாதாரணமாக பதில் கூறுகிறான் சார்லஸ்.
இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களில், திடீரென்று ஒருநாள் சீனாவிலிருக்கும் Mei-Tan-Fu என்ற தூரத்து கிராமத்திற்கு தான் செல்ல இருப்பதாக கூறுகிறான் டாக்டர் வால்டர். அந்த கிராமத்தில் காலரா என்ற தொற்று நோய் தீவிரமாக பரவியிருக்கிறது என்றும், ஆட்கள் ஏராளமாக இறந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், பரவிக் கொண்டிருக்கும் நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக ஒரு மருத்துவர் அங்கு தேவைப்படுகிறார் என்றும், தான் அங்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறான் வால்டர். 'நீயும் என்னுடன் அங்கு வர வேண்டும்' என்று அவன் கிட்டியிடம் கூறுகிறான். அதற்கு 'நான் அங்கு வரவில்லை. எந்தவித வசதியும் இல்லாத அந்த குக்கிராமத்திற்குச் செல்வதில் எனக்கு விருப்பமே இல்லை' என்கிறாள் கிட்டி. 'நான் அங்கு செல்வதை சார்லஸ் கூட விரும்ப மாட்டார்' என்கிறாள் அவள்.
அதைக் கேட்டு கடுப்பின் உச்சிக்கே சென்று விடுகிறான் வால்டர். 'நான் உன்னை விவாகரத்து செய்து விட்டு, அந்த கிராமத்திற்குச் செல்வேன்' என்கிறான் அவன். 'என்ன காரணத்தைக் கூறி...? ' என்று அவள் கேட்க, அவன் 'சார்லஸுடன் நீ கள்ள உறவு வைத்திருக்கும் விஷயம் எனக்குத் தெரியும் அதைக் கூறி நான் விவாகரத்து கேட்பேன்' என்று கூறுகிறான். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து உறைந்து போய் நிற்கிறாள் கிட்டி.
'இந்த விஷயத்தை எந்தவித பரபரப்பும் இல்லாமல் நாம் சரி செய்து கொள்வோம்' என்று கூறுகிறாள் கிட்டி. தன் மீது சார்லஸ் முழுமையான காதல் வைத்திருக்கிறான் என்றும், தன்னை அவன் திருமணம் செய்து கொள்ளக் கூட தயாராக இருப்பான் என்றும் அவள் கூறுகிறாள். 'அப்படியென்றால், Dorothyயின் நிலைமை?' என்று கேட்கிறான் வால்டர். 'எனக்காக அவர், அவளை விவாகரத்து செய்யக் கூட தயாராக இருப்பார். அந்த அளவிற்கு என் மீது அளவற்ற காதல் அவருக்கு' என்று பெருமை நிறைந்த குரலில் கூறுகிறாள் கிட்டி.
தொடர்ந்து கிட்டி, சார்லஸைச் சந்திக்கிறாள். வால்டர் தன்னை விவாகரத்து செய்ய தீர்மானித்திருக்கும் விஷயத்தை அவள் கூறுகிறாள். அதைக் கேட்டு சார்லஸ் அதிர்ச்சியடைகிறான். 'நாம் திருமணம் செய்து கொள்வோம். உங்களின் மனைவி டாரதியை விவாகரத்து செய்து விடுங்கள் அவளைவிட என் மீது தானே உங்களுக்கு அதிக காதல்! டாரதியை விவாகரத்து செய்தால்தான், என்னை வால்டர் விவாகரத்து செய்வானாம்' என்று கூறுகிறாள் கிட்டி. அதற்கு சார்லஸ் மறுத்து விடுகிறான். 'டாரதி என் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கிறாள். உனக்காக நான் எப்படி அவளை விவாகரத்து செய்ய முடியும்? நிச்சயம் முடியாது' என்று கூறுகிறான்- உறுதியான குரலில்.
எதிர்பார்த்த விஷயம் நடக்காமல், ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறாள் கிட்டி. பயணத்திற்கான ஆயத்தத்துடன் இருக்கும் வால்டரிடம் 'நானும் உங்களுடன் வருகிறேன்' என்று கூறுகிறாள். வேறு வழி?
பல்லக்கில் அமர்ந்திருக்கும் கிட்டி, இதுவரை நீங்கள் வாசித்த காட்சிகளை நினைத்துப் பார்க்கிறாள். லண்டனினும், ஷங்காயிலும் நடைபெற்ற ஒவ்வொரு காட்சியும் அவளுடைய மனத்திரையில் ஓடி முடிகிறது. அவள் பார்க்கிறாள். ஆட்கள் நடந்து கொண்டிருக்க, வெறும் பல்லக்கு ஒன்று தோளில் சுமந்து பயணித்துக் கொண்டிருக்க எல்லோருக்கும் முன்னால் சிறிய பாதையில் கழி ஒன்றைக் கையில் வைத்தவாறு அமைதியாக நடந்து போய்க் கொண்டிருக்கிறான் வால்டர். பத்து நாட்கள் புகை வண்டியில் தொடர்ந்து பயணம் செய்து முடித்து, இந்த பல்லக்கு பயணம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அந்த கிராமத்திற்கு நடந்துதான் செல்ல வேண்டும். வேறு ஊர்திகள் எதுவுமில்லை. கதை நடப்பது 1925ஆம் ஆண்டில் என்னும்போது, அப்படித்தானே இருக்கும்?
Mei-Tan-Fu என்ற அந்த கிராமம் ஒரு மலைப் பகுதியில் இருக்கிறது. வால்டரும், கிட்டியும் வசிக்கப் போகும் வீடு எங்கோ தூரத்தில், எல்லோரையும் விட்டு, விலகி இருக்கிறது. அவர்களுடைய வீட்டிற்குச் சற்று தூரத்தில் Waddington என்ற பிரிட்டிஷ் டெபிட்டி கமிஷனர் தன்னுடைய இளம் சீன மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
வால்டர் தினமும் காலரா பரவியிருக்கும் பகுதியில் வசிக்கும் மக்களுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சைகளைச் செய்வதற்காக கிளம்பி விடுவான். அப்போது கிட்டி மட்டும் தனியே வீட்டில் இருப்பாள். அந்த வீட்டில் ஒரு சமையல்கார பெண் மட்டும் இருப்பாள். அதைத் தவிர, அவளைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு சீன காவலாளி வீட்டிற்கு வெளியே எப்போதும் நின்றிருப்பான். அவள் வெளியே சென்றால், அவளைப் பின் பற்றி அவனும் நடந்து செல்வான். பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லாமல், வாழ்க்கையே வெறுத்துப் போய் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் கிட்டி. வால்டருடன்கூட அவள் எதுவும் பேசுவதில்லை. அவனுடன் பேசுவதற்கு என்ன இருக்கிறது? சிறிதும் விருப்பமே இல்லாமல்தானே அவள் அந்த கிராமத்திற்கே வந்திருக்கிறாள்!